Sunday, September 5, 2010

கலைஞருக்கு ஒரு கடிதம்




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்.

உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு வியக்கும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

அதே நேரம் உங்கள் தைரியம் , பல நேரங்களில் என்னை வியக்கவைத்துள்ளது.

குறிப்பாக

திருவல்லிக்கேணி, வல்லப அக்ரகாரத்தில் 1967ல் நீங்கள் அண்ணா முன்னிலையில்..நாங்கள் பதவிக்கு வந்தால்..போலீஸ் அமைச்சராகி..காவல்துறையை பழி வாங்குவேன் என்ற அர்த்தத்தில்(சரியான வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை) பேசிய பேச்சு..

எமர்ஜென்ஸியில்..காமராஜரை கைது செய்யச் சொல்லியும்..மாட்டேன் என்ற தைரியம்..

பதவி போனாலும் பரவாயில்லை என ஐ.பி.கே.ஃப்., ஐ , முதல்வராயிந்த போதும் வரவேற்க போகாதிருந்தது

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை காத்து அண்ணாவிற்குப் பின் கழகத்தை இன்றுவரை கட்டிக் காத்து வருவது

இப்படி உங்கள் மனோதைரியத்தை சொல்லிக் கொண்டே போகலாம்..நீங்கள் பழைய கலைஞராயிருந்தால்..

ஆனால் இப்போது நடப்பது என்ன...

சாதாரண பென்சன் கூட இல்லாத..நடுத்தர ஓய்வு பெற்றவர்..இன்று மகனையும், மருமகளையும் கண்டு பயப்படுவது போல, உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ என்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னதை சிரமேற்கொண்டவர்..அதை இழந்துவிட்டாரோ என்னும் எண்ணம் உண்டாகியுள்ளது..

அண்ணாவின் நினைவிடத்தில்..சமீபத்தில் நீங்கள் சென்று..அங்கேயே சிறிது நேரம் கண்கலங்கி நின்றதாக ஊடகச் செய்திகள் இதை உறுதிப் படுத்துகிறது.

எல்லாவற்றையும் விட பல தானைத்தலைவர்கள்..அண்ணா,நெடுஞ்செழியன்,மதியழகன்,என்.வி.என்., நீங்கள் ஆகியோர் கட்டிக்காத்த..வளர்த்த திராவிடக் கொள்கைகளை இன்று வளர்க்க வேண்டும் என தாங்கள் கேட்டுக் கொண்டவர்கள்..குஷ்பூ,சி.சுந்தர்....இதை நினைக்கையில் தி.மு.க., தொண்டர் அனைவருக்கும் வேதனைக் கலந்த சிரிப்பே வருகிறது.

இது போதாதென..வைரமுத்து மகன் திருமணத்தில்..ரஜினி..நான் எல்லா விஷயங்களையும்..என் பேங்க் பேலன்ஸ் உட்பட வைரமுத்துவிடம் சொல்வதுண்டு..காரணம்..அவருக்கு எதை வெளியில் சொல்ல வேண்டும்..எதை சொல்லக்கூடாது எனத் தெரியும்..என்று பேசியதற்கு..

நீங்கள் பேசும்போது..'ரஜினிக்கு சொல்லி வைக்கிறேன்..உங்கள் விஷயத்தில் எதையுமே சொல்லாமல் வைத்திருக்கிறார் என நீங்கள் எண்ண வேண்டாம்..சொல்லியிருக்கிறார்..இருந்தாலும் அது என்ன விஷயம் என சொல்ல மாட்டேன்' என்று சொன்னது..அவர்கள் இருவருமே மனதிற்குள் வரவேற்றிருக்க மாட்டார்கள்.

இதை ஏன் நீங்கள் சொன்னீர்கள் என்பது..கிட்டத்தட்ட அனைவருக்கும் புரியும்..ஆனால்..அது இப்போது அவசியம் தானா..என்று தெரியவில்லை.

கடைசியாக..சட்டசபை தேர்தலுக்குப் பின் ஆட்சியை மீண்டும்பிடிப்போமா..என்ற சந்தேகம் உங்களுக்கு வந்துவிட்டது..என சமீபகால உங்கள் நடவடிக்கைகள் சொல்கின்றன..

இலங்கை பிரச்னையில்..தங்கள் மீது அனைத்து தமிழர்களுக்கும் சற்று ஏமாற்றம், கோபம் உண்டு..ஆனால் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் முதல்வராய் இருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்.உங்களுக்கு மாற்றாக வர நினைப்பவர் முதல்வராய் இருந்திருந்தால்..இதைவிட நிலை இன்னும் மோசமாய்த் தான் இருந்திருக்கக்கூடும்.

1967லேயே அண்ணாவில் நிறைவேற்ற முடியாத..ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நீங்கள் நிறைவேற்றி வைத்துள்ளீர்கள்.

இந்த ஆட்சியில்..இது போல பல..நினைத்துக் கூட பார்க்க முடியா திட்டங்கள் நிறைவேறியுள்ளன.

அதற்கு மக்கள் கண்டிப்பாய் ஆதரவு தருவார்கள் என மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்..

அதைவிடுத்து..குஷ்பூ போன்றவர்களால்..சில நூறு ஓட்டுகள் கூட கழகத்திற்கு வாங்கித் தரமுடியாது.

அன்புடன்

தங்கள் நலம் விரும்பும் தொண்டன்

18 comments:

கோவி.கண்ணன் said...

//உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு வியக்கும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.//

நானும் ஒருவன்,
1, 2 - 3 மனைவிகள், எண்ணிக்கைகுட்பட்ட வாரிசுகள்,பேரக்குழந்தைகள் என அத்தனையும் கட்டிக்காத்து அதற்கு மேல் திரைவசனம், அரசியல், முதல்வர் பதவி, கூட்டணி குருமா என கிண்டிவருவதைப் பார்க்கும் போது வியப்பு தான்

vasu balaji said...

கோவி:))

vijayan said...

எமர்ஜென்சியின் போது கருணாநிதி காமராஜை கைது செய்யாமல் காப்பாற்றினார் என்பது கடைந்தெடுத்த பொய்.உண்மையில் காமராஜருக்கு பயந்துகொண்டுதான் கருணாநிதி ஆட்சியை இந்திரா கவிழ்க்கவில்லை.காமராஜர் இறந்த மூன்று மாத காலத்தில் dmk அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டது. c .சுப்ரமணியம்,பக்தவத்சலம் போன்ற இந்திரா ஆதரவு மேதைகள் காமராஜரின் மக்கள் பலம் அறியாதவர்களா என்ன,காமராஜ் மேல் கைவைத்தால் என்ன நடக்கும் என்று தங்கள் எஜமானியிடம் சொல்லியிருப்பார்கள்தானே.

Unknown said...

ஐயா உங்களை நான் வழிமொழிகிறேன்...

பவள சங்கரி said...

அருமை.....அருமையான கடிதம் ஐயா.....நானும் ஆமோதிக்கிறேன்....நன்றி.

suneel krishnan said...

கலைஞர் தேர்ந்த நிர்வாகி அதில் மறுப்பேதும் இல்லை , ஆனால் குடும்ப அரசியலில் இன்று சிக்குன்று உழலுகிறார்

goma said...

WELL said

Unknown said...

எல்லாம் சரி தான். கம்பியூட்டர் சயின்ஸ் ல் பி.யெட் படித்தவர்களுக்கு மட்டும் ஏன் பணி வழங்கவில்லை இந்த தமிழக அரசு? ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கை ? யாக இருக்கிறது. கவனிக்குமா இந்த தமிழக அரசு?

Azhagar Shankar said...

Dear sir,

There is no truth what you have written. He is only Good Father his Family. He is one of the uttermost selfish in this world.

Nandri nallavan

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலைஞருக்கு இருக்கும் ஒரே பயம், அன்னை சோனியா எங்கே அம்மையாருடன் திடீரென கூட்டு சேர்ந்து கொண்டு தனது ஆட்சிக்கு வேட்டு வைத்துவிடுவார்களோன்னு தான்! ஏற்கனவே மின்வெட்டு பிரச்சனை பூதாகாரமா கெளம்பிக்கிட்டு இருக்கு, இதுல காங்கிரஸ் வேற அந்தப் பக்கம் போயிடிச்சுன்னா அடுத்த தேர்தல் கஷ்டம்தான்! மின்வெட்டுப் போன்ற அன்றாடப் பிரச்சனைகளை மக்கள் மறக்கனும்னுதான் கலைஞர் மாதத்திற்கு ஒரு விழா நடத்துறாரு. (செம்மொழி மாநாடு, தஞ்சை பெரிய கோயில் 1000ம் ஆண்டு விழா) தேர்தல் வரைக்கும் ஏதாவது இந்த மாதிரி வந்துக்கிட்டே இருக்கும் பாருங்க! ரெண்டு மகன்களும் (இப்போ மகளும்) கட்சிய பங்கு போட்டுக்கிட்டானுங்க, பேரன்கள் ஆளுக்கொரு படக்கம்பேனி வெச்சிருக்கானுங்க. மாறன் குருப்பு, மீடியா உலகத்தையே வளைச்சிப் போட்டிருச்சி! இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ!

ramalingam said...

//இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ!//நவம்பர் மூணில் உலகம் அழியப் போகுதாம்.

அபி அப்பா said...

@விஜயன்!

காமராஜரை கைது செய்திருந்தா?? ஒன்னும் நடந்திருக்காது. காஷ்மீர் சிங்கத்தில் இருந்து, ஜேபி வரை கோவை சிறையிலே இருந்த மாதிரி காமராஜரும் இருந்திருப்பார். தவிர அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டில் செல்வாக்கை இழந்து விட்டிருந்த நேரம் என்பதையும் மறந்துவிடாதீங்க.

@டிவிஆர் அய்யா! பலகருத்துகள் எனக்கு இதிலே உடன்பாடு இருந்தாலும் சில கருத்துகள் எனக்கு ஏற்புடையது அல்ல. குஷ்பு என்பது கூட்டம் சேர்க்க மட்டுமே. அவர் வந்து தான் திமுக கொள்கையை பரப்பி திமுக வேர் விட வேண்டும் என்கிற நிலையில் இல்லை.

மதுரை சரவணன் said...

நல்ல அரசியல் விமர்சனம்... ரசிக்க வைத்தது..சில வியக்க வைத்தன... வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

உங்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைபுரிந்த அனைவருக்கும்..கருத்துளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி

vijayan said...

@ அபி அப்பா வணக்கம்,எமெர்ஜென்சிக்கு சற்றுமுன் நடந்த திண்டுக்கல் இடைதேர்தல் முடிவுகளை பார்த்தால் யாருக்கு என்ன செல்வாக்கு என்று தெரிந்துவிடும்.முதலிடம் MGR க்கு ,இரண்டாமிடம் காமராஜர் காங்கிரஸ்,மூன்றாமிடம் கருணாநிதி,பதினோராவது இடம் இந்திரா.காமராஜர் இறந்த மறுநிமிடமே இந்திரா அவர் இறுதி சடங்கிற்கு வந்ததும் பாரத் ரத்னா(posthumous )ஆகா கொடுத்ததும் அவர் மேல் உள்ள அபிமானத்தால் அல்ல,அவருடைய தொண்டர்களை வளைப்பதற்கு தான்,unfortunately இன்னமும் அது நடக்கவில்லை,

தமிழ் உதயன் said...

நானும் இப்போதுதான் கலைஞர் அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளேன். அதன் பதிப்பு விரைவில் ஒரு பிரபல இணையத்தில் வரும் என்ற நம்பிக்கையில்.

நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. இது கலைஞருக்கும் தெரியாமல் இல்லை. என்னை பொறுத்தவரை உப்பை தின்பவர் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும். அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.

http://tamiludhayan.blogspot.com/2010/09/blog-post_29.html

TBR. JOSPEH said...

நானும் ஒருவன்,
1, 2 - 3 மனைவிகள், எண்ணிக்கைகுட்பட்ட வாரிசுகள்,பேரக்குழந்தைகள் என அத்தனையும் கட்டிக்காத்து அதற்கு மேல் திரைவசனம், அரசியல், முதல்வர் பதவி, கூட்டணி குருமா என கிண்டிவருவதைப் பார்க்கும் போது வியப்பு தான் //


கண்ணன், below the belt hit என்பார்களே அது இதுதான். கலைஞருடைய அரசியல் மற்றும் நிர்வாக திறனை கிண்டல் செய்யவும் குற்றம் காணவும் அனனவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியல்ல என்பது என் கருத்து. இதை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

சாதாரணமாக தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசை குறை கூற பலரும் முனைவது இயற்கை. அதில் தவறேதும் இல்லல. மத்தியில் காங்கிரசை விட்டால் பிஜேபி தலைமையில் கூட்டணி என்ற கட்டாயம். அதுபோல் தமிழகத்தை பொருத்தவரை திமுக அல்லது அ இஅதிமுக. இதில் எது பரவாயில்லை என்பதுதான் கேள்வி.

இரண்டுமே ஊழல் செய்வதில் தேர்ந்தவர்கள் என்பது நிரூபணமான ஒன்று. ஆகவே அதை மையமாக வைத்து முடிவு செய்ய முடியாது.

அரசை நிர்வகிப்பதில் அ இஅதிமுகவில் அம்மையாரை விட்டால் வேறு எவரும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. திமுகவில் மு.க.வை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. ஸ்டாலின், அன்பழகன் என சுயமாக சிந்தித்து செயல்படக் கூடிய தலைவர்கள் பலர் உள்ளனர்.

ஆகவே என்னுடைய ஆதரவு திமுகவுக்குத்தான்.