Showing posts with label கலைஞர் - செய்திகள். Show all posts
Showing posts with label கலைஞர் - செய்திகள். Show all posts

Tuesday, October 23, 2012

யாரிடத்து போயுரைப்பேன் -கலைஞர்





உள்கட்சி சண்டையால் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு "நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.

திமுகவினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கிறார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி வந்து விட்டது, கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்.

கட்சியினருடன் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றால் உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்கள் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது.

மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அளித்த பேட்டி குறித்து அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், முரசொலி செல்வமும் கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.

அண்ணா சொன்ன குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது மறந்துவிட்டதா? தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய நானும், அன்பழகனும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். அப்போது பேசிய துரைமுருகன், தஞ்சை மாவட்டம் தலைவரின் (கருணாநிதி) நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம். அங்கு அவர் கூறுவதுதான் வேதவாக்கு. அங்கு குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்க கேட்டாரே? அந்த மாவட்டத்திலா இந்த தலைகுனிவு?

இரண்டு நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்த பழனிமாணிக்கம், அவரது தொகுதியில் நடப்பதைப் பற்றி சொன்னார். பொறுத்திருங்கள். தலைமைக்கு புகாராக எழுதிக் கொடுங்கள் என்றேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் அன்புடன் பழகுகிறேன் என்பதை பலவீனமாக எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்வதா? நான் அனைத்தையும் மன்னித்து விடுகிறேன். மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா?

எதிர்க்கட்சிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதா அல்லது நமக்குள் நிலவும் குழு பேதத்தை போக்குவதா? இலையில் நிறைய பண்டங்களைப் பரிமாறிவிட்டு ஒரு ஒரத்தில் சாணத்தை வைப்பதற்கு பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காக தலைமை இருக்கிறது? மாவட்டத்துக்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?

மனசாட்சி உறுத்தியதால் பேட்டி கொடுத்த இரவே பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தார். டி.ஆர். பாலுவும், பழனிமாணிக்கமும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலுவை மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் தாக்க வந்தபோது 5-வது வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஒடி வந்து தடுத்தார். அந்த உணர்வு இன்று எங்கே போய்விட்டது?

பழனிமாணிக்கத்தை தாக்க யார் முற்பட்டாலும், ஓடிவந்து பாதுகாக்க கூடியவர் பாலு.

ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் என்ற நிலையில் யாரிடத்து போயுரைப்பேன் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

டிஸ்கி-  கலைஞரும்...இப்படி சொல்லியிருக்க வேண்டாமே...மூன்றாம் நபருக்குத் தெரியாமல்..உட்கட்சி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னையை தீர்த்திருக்கலாம்.
        என் காங்கிரஸ் நண்பன் ஒருவன் கோஷ்டி பற்றி...நீங்கள் பேசாதீர்கள் என்கிறான் என்னிடம்.

Friday, March 16, 2012

கலைஞருக்கு ஒரு கடிதம்...




தலைவர் கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், கலைஞர் என்ற பன்முகம் கொண்ட அஷ்டாவதானியான உங்கள் மீது தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பற்று உண்டு.இந்த பற்று கட்சிகளை மீறிய ஒன்று.

ஆனால்..சமீபத்தில் தாங்கள் பேசியுள்ள பேச்சு..என்னைப் போன்று உங்கள் மீது அபிமானம் உள்ளவர்களையும்..அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும்..இலங்கை பிரச்னை ஆகட்டும்...வாலிப உள்ளங்கள் தான் அளவிற்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளன..இள ரத்தம், உணர்ச்சி வேகம்,உயிர் தியாகம் செய்யும் நோக்கு ஆகியவை தோன்றும் போது தங்களுக்கு முன்னேயுள்ள தாய், தந்தையர், இளம் மனைவி, குழந்தைகள் ஆகியோர் பற்றி எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

அதனால்தான், இப்படி ஏதேனும் நேருகையில்...தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை, 'உணர்ச்சிவசப்படாதீர்கள்..தீக்குளிப்பது போன்ற செயல்கள் பிரச்னையை தீர்த்து வைக்காது..' என்றெல்லாம் கூறி இளைகர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவருவது வழக்கம்.

இதெல்லாம் தெரிந்த நீங்களே..'அண்ணா நூற்றாண்டு நூலகம் , இடிக்கப்படுமேயாயின்...நான் தீக்குளித்தாவது அதை காப்பேன்' என்றுள்ளீர்கள்.பழுத்த அரசியல்வாதியான நீங்கள் உணர்ச்சி வேகத்தில் இதைக் கூறியிருக்க மாட்டீர்கள்..பின்..இதைக் கூற வேண்டிய அவசியம் என்ன...'மக்களின் உணர்ச்சியைத் தூண்டவா?..நீங்கள் இப்படிச் சொன்னதால் சங்கரன் கோவிலில் வாக்குகள் திமுகவிற்கு மக்கள் போடுவார்கள் என்றா? அதற்காக என்றால்...உங்களையே நம்பி..உங்கள் சொற்களையே வேதவாக்காக எண்ணும் லட்சக்கணக்கான தொண்டர்களில்..யாரேனும் ஒருவர்..தலைவரே சொல்லிவிட்டார்..அவர் உயிரே போகையில்..என் உயிரும் முதலில் போகட்டும் என தீக்குளித்தால்..அந்த உயிரை மீண்டும் நீங்கள் தரமுடியுமா?

இப்படி இளைஞர்கள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில்..மூத்த தமிழகத் தலைவர் நீங்கள் பேசியுள்ளது அழகல்ல...குழந்தைகள் பேசுவது போல பேசியுள்ளீர்கள்..

இதனால் தான் வயதானவர்களும் குழந்தைகளுக்கு சமமாய் நினைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனரோ?

மொத்தத்தில்...உங்களின் இப்பேச்சு கண்டிக்கத் தக்கதே..

அன்புடன்
ஒரு தமிழக குடிமகன்

Sunday, September 5, 2010

கலைஞருக்கு ஒரு கடிதம்




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்.

உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு வியக்கும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

அதே நேரம் உங்கள் தைரியம் , பல நேரங்களில் என்னை வியக்கவைத்துள்ளது.

குறிப்பாக

திருவல்லிக்கேணி, வல்லப அக்ரகாரத்தில் 1967ல் நீங்கள் அண்ணா முன்னிலையில்..நாங்கள் பதவிக்கு வந்தால்..போலீஸ் அமைச்சராகி..காவல்துறையை பழி வாங்குவேன் என்ற அர்த்தத்தில்(சரியான வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை) பேசிய பேச்சு..

எமர்ஜென்ஸியில்..காமராஜரை கைது செய்யச் சொல்லியும்..மாட்டேன் என்ற தைரியம்..

பதவி போனாலும் பரவாயில்லை என ஐ.பி.கே.ஃப்., ஐ , முதல்வராயிந்த போதும் வரவேற்க போகாதிருந்தது

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை காத்து அண்ணாவிற்குப் பின் கழகத்தை இன்றுவரை கட்டிக் காத்து வருவது

இப்படி உங்கள் மனோதைரியத்தை சொல்லிக் கொண்டே போகலாம்..நீங்கள் பழைய கலைஞராயிருந்தால்..

ஆனால் இப்போது நடப்பது என்ன...

சாதாரண பென்சன் கூட இல்லாத..நடுத்தர ஓய்வு பெற்றவர்..இன்று மகனையும், மருமகளையும் கண்டு பயப்படுவது போல, உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ என்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னதை சிரமேற்கொண்டவர்..அதை இழந்துவிட்டாரோ என்னும் எண்ணம் உண்டாகியுள்ளது..

அண்ணாவின் நினைவிடத்தில்..சமீபத்தில் நீங்கள் சென்று..அங்கேயே சிறிது நேரம் கண்கலங்கி நின்றதாக ஊடகச் செய்திகள் இதை உறுதிப் படுத்துகிறது.

எல்லாவற்றையும் விட பல தானைத்தலைவர்கள்..அண்ணா,நெடுஞ்செழியன்,மதியழகன்,என்.வி.என்., நீங்கள் ஆகியோர் கட்டிக்காத்த..வளர்த்த திராவிடக் கொள்கைகளை இன்று வளர்க்க வேண்டும் என தாங்கள் கேட்டுக் கொண்டவர்கள்..குஷ்பூ,சி.சுந்தர்....இதை நினைக்கையில் தி.மு.க., தொண்டர் அனைவருக்கும் வேதனைக் கலந்த சிரிப்பே வருகிறது.

இது போதாதென..வைரமுத்து மகன் திருமணத்தில்..ரஜினி..நான் எல்லா விஷயங்களையும்..என் பேங்க் பேலன்ஸ் உட்பட வைரமுத்துவிடம் சொல்வதுண்டு..காரணம்..அவருக்கு எதை வெளியில் சொல்ல வேண்டும்..எதை சொல்லக்கூடாது எனத் தெரியும்..என்று பேசியதற்கு..

நீங்கள் பேசும்போது..'ரஜினிக்கு சொல்லி வைக்கிறேன்..உங்கள் விஷயத்தில் எதையுமே சொல்லாமல் வைத்திருக்கிறார் என நீங்கள் எண்ண வேண்டாம்..சொல்லியிருக்கிறார்..இருந்தாலும் அது என்ன விஷயம் என சொல்ல மாட்டேன்' என்று சொன்னது..அவர்கள் இருவருமே மனதிற்குள் வரவேற்றிருக்க மாட்டார்கள்.

இதை ஏன் நீங்கள் சொன்னீர்கள் என்பது..கிட்டத்தட்ட அனைவருக்கும் புரியும்..ஆனால்..அது இப்போது அவசியம் தானா..என்று தெரியவில்லை.

கடைசியாக..சட்டசபை தேர்தலுக்குப் பின் ஆட்சியை மீண்டும்பிடிப்போமா..என்ற சந்தேகம் உங்களுக்கு வந்துவிட்டது..என சமீபகால உங்கள் நடவடிக்கைகள் சொல்கின்றன..

இலங்கை பிரச்னையில்..தங்கள் மீது அனைத்து தமிழர்களுக்கும் சற்று ஏமாற்றம், கோபம் உண்டு..ஆனால் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் முதல்வராய் இருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்.உங்களுக்கு மாற்றாக வர நினைப்பவர் முதல்வராய் இருந்திருந்தால்..இதைவிட நிலை இன்னும் மோசமாய்த் தான் இருந்திருக்கக்கூடும்.

1967லேயே அண்ணாவில் நிறைவேற்ற முடியாத..ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நீங்கள் நிறைவேற்றி வைத்துள்ளீர்கள்.

இந்த ஆட்சியில்..இது போல பல..நினைத்துக் கூட பார்க்க முடியா திட்டங்கள் நிறைவேறியுள்ளன.

அதற்கு மக்கள் கண்டிப்பாய் ஆதரவு தருவார்கள் என மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்..

அதைவிடுத்து..குஷ்பூ போன்றவர்களால்..சில நூறு ஓட்டுகள் கூட கழகத்திற்கு வாங்கித் தரமுடியாது.

அன்புடன்

தங்கள் நலம் விரும்பும் தொண்டன்

Thursday, May 13, 2010

கலைஞருக்கு ஒரு மனம் திறந்த மடல்..

பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

நீங்கள் 18 ஆண்டுகள் முதல்வர் பணி புரிந்து 19ஆம் ஆண்டில் நுழைந்திருப்பது குறித்து பாராட்டுகள்..வாழ்த்துகள்.

நான் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் அல்ல..ஆனாலும்..முதன் முதலாய் வாக்குரிமை எனக்கு வந்தது முதல் தி.மு.க.,விற்கே வாக்களித்து வருபவன் (என் முதல் வாக்கு A.V.P.ஆசைத்தம்பி அவர்களுக்கு)என்ற முறையில் இக்கடிதம் எழுதுகிறேன்..சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க., விற்கே என் வாக்கு என்ற என் இடுகைக்கு இங்கே செல்லவும்.இங்கேசெல்லவும்

மூதறிஞர் ராஜாஜிக்குப் பின் அரசியல் சாணக்கியர் நீங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

விஷயத்திற்கு வருவோம்..நீங்கள் சமீபத்தில் சட்ட மன்றத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.


"அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.

என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்."

இப்போது எனது கேள்வி..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்த M.G.R.,கழகத்தின் பொருளாளராய் இருந்தக் காரணத்தால்..அவரது கடமையைச் செய்தார்..கணக்குக் கேட்டார்..அதனால் அவரை கழகத்திலிருந்து வெளியேற்றினீர்களே..அது சரியா..

அவர் பிறப்பால் மலையாளி என்று ஆரம்பித்து..மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டினீர்களே...அது முறையா..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்தவரை பதவி இறக்க என்னவெல்லாம் நடந்தது..அது நியாயமா..

அறிஞரான நீங்கள் இவ் விஷயத்தில் நன்றி மறந்தே செயல் பட்டுள்ளதாகவே எண்ணுகிறேன்..

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

என்ற குறளுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது..

சமீபத்தில்..பிரிந்தவர்கள் மீண்டும் கழகத்திற்கே வர வேண்டும்..என்ற உங்கள் அழைப்பு உண்மையாய் இருக்கட்டும்

நன்றி

அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்