Wednesday, October 24, 2012

மானுடம் பொய்க்குதம்மா! - தலையங்கம் (கண்டிப்பாய் படிக்கவும்)

(தினமணி பத்திரிகைச் செய்திகள் குறித்து எனக்கு கருத்து வேறுபாடுண்டு.ஆனால் அவர்கள் எழுதும் தலையங்கம் பௌல சமயங்களில்

அருமையாய் இருக்கும்..இது அவற்றில் ஒன்று)


எல்லா வீடுகளிலும் பால் வாங்கப்பட்டிருக்கும்.  பண்டிகை நாளில் பால் இல்லாமல் இருக்காது. அந்தப் பால் கலப்படம் இல்லாததுதானா?

இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட மாதிரிச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது என்பதும், இந்த மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் தெரிந்ததுதான். இத்தகைய ஆய்வு முடிவுகளைப் 10 விழுக்காடு கூடுதலாக அல்லது குறைவாக மதிப்பிடலாமே தவிர, இந்த ஆய்வு முடிவுகளை முழுவதுமாகத் தவறு என்று குறை சொல்லிவிட முடியாது. இந்தியாவில் விற்கப்படும் பாலில் கலப்படம் மிக அதிக அளவில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இன்றைய சூழ்நிலையில், பால் என்பது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. பால் இல்லாமல் குழந்தை உணவு இல்லை. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் பால் மிகவும் அவசியமான உணவாக ஆகிவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் இடம்பெற்றுவிட்ட தேநீர்க் கடைகளில் பால் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அனைவரும் ஏதோ ஒருவகையில் பால் மற்றும் பால் பொருள்களை உண்கிறோம்.
இவ்வாறாக நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பாலில் 68 விழுக்காடு கலப்படம் என்றால், நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் பாலின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2009-10-ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 11.60 கோடி டன். 2010-11-ஆம் ஆண்டில் இது 12.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நிகழாண்டிலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலுக்கான சந்தைத் தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப கலப்படமும், எடை, அளவுக் குறைபாடுகளும் அதிகரிக்கின்றன.
பால் உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களால் அனைவரது தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் இந்த இடைவெளியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இவர்களில் பிரபலமான முத்திரை நிறுவனங்கள் சில இருப்பினும், பல நூறு நிறுவனங்கள் யாரும் கேள்விப்படாத பெயரில் செயல்படுவன. இவற்றின் மீது அரசின் கண்காணிப்பு மிகவும் குறைவு.
ஊரகப் பகுதிகளில் நடத்திய ஆய்வுகளில் கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்ட பாலில் 83 விழுக்காடு கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை. நகர்ப்புறங்களில் 66 விழுக்காடு கலப்படப் பால் கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை.
இந்தக் கலப்படத்தில் தண்ணீர் கலப்படம்தான் அதிகம். தண்ணீர் கலப்பதால் பாலின் சத்து குறைந்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்தத் தண்ணீர் தூய்மையான தண்ணீராக இல்லை என்பதுதான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் பால் அடர்த்தியாக இருக்க சோப்புநீர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பால்பவுடர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பாலின் தன்மையை சமன்படுத்த வேதிப்பொருள்களைச் சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது என்று இந்த உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாகிய ஆவின் கூட்டுறவு பால் உற்பத்திக் கூடத்தைத் தவிர மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தான். இவற்றில் எத்தனை நிறுவனங்களை நம்பலாம், அல்லது கேன் மூலம் பால் விநியோகிப்போரில் எத்தனைப் பேரை நம்புவது?
தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, குளிரூட்டு வசதி இல்லாததால் ஆவின் பால் உள்பட அனைத்துப் பாலும் விரைந்து கெட்டுப்போய், திரிந்து விடுகின்றன என்று புகார்கள் எழுகின்றன. பால் விரைந்து கெட்டுப்போவதற்கு மின்தடையால்  குளிரூட்டு வசதி இல்லை என்பது ஆணித்தரமாகச் சொல்ல முடிவதைப்போல, இந்தப் பால் தரமானதாக இல்லை என்பதால்தான் விரைந்து கெட்டுப்போனது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நாம் நம்புகிறோம். நமக்கு வழங்கப்படும் பால் உண்மையிலேயே தரமானது என்று!
இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பால் உற்பத்தி செய்கிறது. தமிழகம் வெறும் 60 லட்சம் டன் மட்டுமே! இதிலும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் கிடைக்கும் அளவு மிகவும் குறைவு.
ஆவின் பால் விநியோக சேவையில் குறைபாடு இருந்தாலும், அவர்கள் கலப்படம் செய்தார்கள் என்பதாக முறைகேடு இல்லை. ஆவினைப் பொருத்தவரை, நிர்வாக ஊழல்கள் உண்டே தவிரக் கலப்படம் இல்லை. ஆனால் ஆவின் நிறுவனம் ஏன் வளரவில்லை, அதை வளர விடவில்லை என்கிற கேள்விக்கு சரியான பதிலில்லை.
இன்று தமிழகத்தில் தனியார் பால் விநியோகம்தான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு பால் தரத்தைச் சோதிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பால்பண்ணைகளிலும் வாரம் ஒருமுறையாகிலும் திடீர் ஆய்வுகள் நடத்தி, பால் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் விற்பனை முகவர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
மனிதனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் இயற்கை, குழந்தைகளுக்குத் தாயுருவில் பாதுகாப்பு அளிக்கிறது. போஸ்டர்களையும், குப்பைக் கூளங்களையும் தின்கிற அவலம் ஏற்பட்டாலும் பசு தனது கன்றுக்குக் கலப்படம் இல்லாத பாலைத்தான் வழங்குகிறது. ஆனால் மனிதன்...?

No comments: