Thursday, October 4, 2012

அன்னிய மோகம்! (தினமணி தலையங்கம்-கண்டிப்பாக படிக்கவும்)


அன்னிய மோகம்!


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு "எழில் நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் குறிப்பிடுகையில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நகரங்களில் போக்குவரத்து, சாலை வசதி, தகவல் தொழில்நுட்பம், கரியமில வாயு கட்டுப்பாடு, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்தேவை இல்லாமல் வீடுகள் தற்சார்புடன் கதிரொளி ஆற்றல் பெறுதல், வீடுகளுக்கு பகலில் மின்விளக்கு எரியாமலேயே வெளிச்சம் பெறும் வகையில் வடிவமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். முதல்கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி, ஜபல்பூர் ஆகிய இரு நகரங்களில் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரியா நாட்டின் அமைச்சர் டோரீஸ் பர்ஸ் குறிப்பிடும்போது, இத்தகைய பசுமை நகரம், எழில் நகரம் அமைக்கப்படும் பணியில் ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரியாவும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளும் என்கிறார் அமைச்சர் கமல்நாத். எல்லாம் சரிதான். ஏன் இதற்குப்போய் ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தம்போட வேண்டும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தியாவில் இல்லாத தொழில்நுட்பமா? இந்தியாவில் இல்லாத முன்மாதிரி நகரங்களா? இதையெல்லாம்விட, இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மிகத்திறமையான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளின் நகர் வளர்ச்சிக்குப் பங்காற்றிக்கொண்டிருக்கையில் நாம் ஏன், ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தின் தயவைப் பெற வேண்டும்?
ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்பது அரசு நிறுவனம் அல்ல. இது ஒரு கூட்டு நிறுவனம். ஆஸ்திரிய குடியரசு 50.46%, தொழில் கூட்டமைப்புகள் 49.54% எனும் விகிதத்தில் அரசு - தனியார் பங்கேற்பில் செயல்படும் நிறுவனம். இது ஒரு ஆய்வு மற்றும் ஆய்வைச் செயல்படுத்தும் நிறுவனம். இவர்கள் யாருக்கான ஆய்வைச் செய்வார்கள் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்?
இவர்கள் ஆஸ்திரியா நாட்டின் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமே தவிர, இவர்களது நோக்கம் இந்தியாவில் எழில் நகரங்களை உருவாக்குவதுதான் என்பதை நம்ப இயலவில்லை.
இவர்கள் உருவாக்க இருக்கும் எழில் நகரத்தின் சாலைகள் அவர்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். வீட்டின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு, மெட்ரோ ரயில், அதிவிரைவு போக்குவரத்துப் பாதை, வீடுகளுக்கான மின்ஆற்றல் சுயச்சார்பு எல்லாமும் அவர்கள் தீர்மானிப்பார்கள். அவர்களது பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையே இங்கே உருவாக்குவார்கள். இந்த ஒத்துழைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் பணம் பெறுவார்கள் என்பது குறித்து அமைச்சர் கமல்நாத் குறிப்பிடவில்லை.
இன்றைய இந்திய நகரங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விரிவடைந்ததற்கு யார் காரணம்? அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள் முறையாகச் செயல்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டுமானங்களை தயக்கமின்றி இடிக்கத் தொடங்கியிருந்தால், இன்று இந்திய நகரங்கள் இத்தகைய நெரிசலாக அமைந்திருக்குமா?
பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு சிறு நடைமேடை அமைத்து, அதில் கடைகள் ஆக்கிரமிக்கும்போதே தடுத்து நிறுத்தவும் செய்யாமல் வளரவிட்டு, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்கள் யார்?
வீடுகளுக்கு சூரிய ஆற்றல் மூலம்தான் வென்னீர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்காமல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பைக் கட்டாயமாக்காமல் இருந்ததற்கு யார் காரணம்?
முறையின்றி கட்டப்பட்ட வீடுகளையும் பணம் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ள சட்டம் தீட்டியதற்கு அரசியல்வாதிகள்தானே காரணம்?
இந்தியாவில், அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் தரமான வீடுகளை, குடியிருப்புகளை அமைக்க முடியும் என்று லாரி பேக்கர் போன்றோர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவும், உதவிகள் வழங்கவும் கட்டட மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆஸ்திரியாவிலிருந்து ஒரு நிறுவனம் தரும் ஆலோசனைப்படி எழில் நகரம் அமைக்கப்போகிறோம் என்று அமைச்சர் கமல்நாத் சொல்லும்போது, "கேப்பையிலே நெய் வழிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு அறிவு எங்கே போயிற்று?' என்கிற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
நமக்கான எழில் நகரை நாம் அமைத்துக்கொள்ள முடியாதா? அதற்கான தொழில்நுட்பமும், அறிவும் இந்தியர்களிடம் இல்லையா என்பதுதான் பதில் வராத கேள்வியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிட்டு மதுரை மாநகரம் அமைக்கப்பட்டபோது, ஆஸ்திரியா என்கிற நாடு எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் நகர வடிவமைப்பில் நமது மேலாண்மைக்குச் சான்றாக இருக்கும் சரித்திரச் சுவடுகள். நகரக் கட்டமைப்பைப் பற்றி நமக்குக் கற்றுத் தருவதற்கு அன்னிய நாட்டை நாடுவானேன்? இதற்குப் பின்னால் என்ன ஊழலோ, என்ன திட்டமோ யார் கண்டது?
இந்தியாவின் எந்த நகரத்தையும் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் எழில் நகரமாக மாற்றிவிட முடியும். இதற்கு ஆஸ்திரியா நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் வந்துதான் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// வீடுகளுக்கு சூரிய ஆற்றல் மூலம்தான் வென்னீர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்காமல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பைக் கட்டாயமாக்காமல் இருந்ததற்கு யார் காரணம்? ///

முக்கிய கேள்வி... நன்றி...