Thursday, October 16, 2014

குறுந்தொகை-133



தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுங்காலம் இருந்ததால், வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)


 குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தன்

 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை

கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
   
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
   
உரஞ்செத்து முளெனே தோழியென்

நலம்புதி துண்ட புலம்பி னானே.


                   -உறையூர் முதுகண்ணன் சாத்தன்.

    உரை-
தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப்போன்ற சிறு தினையினது கதிரை கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையாகிய தாள் பெரிய மழை உண்டானமையால் மீண்டும் இலை தழைத்தாற் போல தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதுண்டமையால் உண்டாகிய தனிமை வருத்தத்தோடு எனது வலி அழிந்தும் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன்.




     (கருத்து) தலைவர் மணப்பார் என இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.

     பெரும்பெயல் நீட்டிப்பின் தினை மீண்டும் கதிர் விடுதல் போலத் தலைவன் வந்து மணப்பானானால்  என் நலனை மீண்டும் பெறுவேன் (எனத் தலைவி தோழியிடம் கூறினாள்).

     குறிஞ்சி நிலத்தினளாகிய தலைவி தினைப்புனங்காத்துக் கிளியோப்பிய பழக்கத்தினால் தான் அறிந்த உவமையையே கூறினாள்.

No comments: