Thursday, October 23, 2014

குறுந்தொகை-139



தோழி கூற்று
(விலைமகள் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் விலைமகள் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வர வேண்டாம்.” என்று கூறியது.)

மருதம் திணை-பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தியார்


இனி பாடல்-


மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
   
வேலி வெருகின மாலை யுற்றெனப்
   
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
   
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்

கின்னா திசைக்கு மம்பலொடு
   
வாரல் வாழிய ரையவெந் தெருவே.

                               -ஒக்கூர் மாசாத்தியார்.

   உரை-

இல்லத்தில் வாழும் கோழியினது குறிய காலையுடைய பேடையானது , வேலிக்கு வெளியில் காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினற் போல இன்னாததாகி  விலைமகளால் கூறப்படும்பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக! நீ வாழ்க.


  (கருத்து) எம் தெருவிற்கு வந்தால் விலைமகள் பழி கூறுவார்.


     தன்னாற் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை  கவருமோ வென்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ வென்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினரென்று கொள்க.

No comments: