Wednesday, May 17, 2017

இன்னா நாற்பது - பாடல்கள் 1,2,3

பாடல்: 01 (பந்தம்...)
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.


சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பாடல்: 02 (பார்ப்பார்...)
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

பாடல்: 03 (கொடுங்கோல்)
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

No comments: