Friday, November 27, 2020

யார் நல்லவர்..யார் கெட்டவர்

" டோக்கன் நம்பர் 24"


வெளியே பெஞ்சில் காத்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தின் காதுகளில் இது விழுந்தது.


தன் கைகளில் வைத்திருந்த அட்டை டோக்கனைப் பார்த்தார்.அவருடையது தான்..


எழுந்து டாக்டரைப் பார்க்க உள்ளே நுழைய இருந்த அவருக்கு உதவியாளர் கதவைத் திறந்து விட்டார்.


அவரைப் பார்த்ததும் சாம்பசிவம்.."உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியவில்லையே! வந்து உன்னை பேசிக் கொள்கிறேன்" என உள்ளே நுழைந்தார்.


அவரை டாக்டர் ரவீந்திரன் "வாங்க" என வரவேற்றார்.


"ஆமாம்..ஆமாம்..எங்களை வாங்க..வாங்கன்னு நீங்க கூப்பிடறதே எங்கக் கிட்ட இருந்து அநியாயத்துக்கு வாங்க..வாங்கதானே!" என்றார்.


இது போன்று பேசும் நோயாளிகள் பலரைப் பார்த்திருந்ததால், அவர் சொல்வதை சட்டை செய்யாமல் புன்முறுவலுடன் "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்றார்.


சிறிது நேரம் யோசித்தவர்"டாக்டர்..எனக்கு..இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் நல்லவங்களாத் தெரியறதில்லை" என்றார்.


"எவ்வளவு நாளாக இப்படி இருக்கு?"



"யாரைப் பார்த்து என்ன கேட்கற.நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன்.இப்படி கேடு கெட்டவனா இருக்கியே.நீ ஒரு ஃபிராடு.உங்கிட்ட வந்தேன் பாரு..என் புத்தியை செருப்பால அடிக்கணும்"      என்று சொல்லிய படியே வெளியேறினார்.

Wednesday, November 25, 2020

"காலத்தினால் செய்யா உதவி"

"கணேஷ்..ஒரு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடேன்.கண்டிப்பாக அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்.குழந்தைக்கு ஜுரம்.டாக்டர் கிட்ட உடனே எடுத்துட்டுப் போகணும்" என்றான் பாஸ்கரன்.


பர்ஸில் பணமிருந்தும்..பணத்தைக் கொடுக்க மனது இல்லாததால்.."சாரி பாஸ்கர்..எனக்கே கஷ்டம்."என்று சொல்லி விட்டேன்.பலமுறை இப்படி அவன் கேட்டு நான் கொடுத்திருக்கின்றேன்.ஆனால் கொடுத்த பணம் திரும்பி வராது அவனிடமிருந்து.


பாஸ்கர், "குழந்தைக்கு உடம்பு சரியில்லை" என பலரைக் கேட்டான்..யாரும் கொடுக்கவில்லை.அவனுக்கு கொடுக்கும் பணம் ஒரு வழிப் பாதை என்பதை அனைவரும் அறிந்திருந்ததால்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி "இல்லை" என்று சொல்லி விட்டனர்.


வெறும் கையுடன், அலுவலகத்தில் லீவு சொல்லி விட்டுச் சென்று விட்டான் அவன்.


இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்.அவன் மனைவியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.."கணேஷ் சாரா..பாஸ்கர் உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.குழந்தை.....டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக பணம் இல்லாததால்..ஜுரம் அதிகமாகி.....இறந்து போச்சு.ஆஃபீஸ்ல எல்லார் கிட்டேயும் சொல்லச் சொன்னார்.."என்று அழுதபடியே சொல்லி முடித்தாள்.


பகீரென்றது எனக்கு.எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டேன்.


உடனே..ஆஃபீஸில் ஒவ்வொருவரும் பணம் போட்டு..ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனோம்


"என் குழந்தையைக்  காப்பாற்ற பணம் கேட்டேன்..ஆனா..ஆனா..அடக்கத்துக்கு கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்களே!"என்று அழும் அவனை எங்களால் தேற்ற முடியவில்லை     

Monday, November 2, 2020

அம்மா என்றால் அம்மாதான்

 


தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.


அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.

அதெல்லாம் பழைய கதை.

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.


ஆனால்...மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.

அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.

அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.

***** ***** ****** ***** *****

அன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.

அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.

அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.

அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...

ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.

அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.