Wednesday, November 25, 2020

"காலத்தினால் செய்யா உதவி"

"கணேஷ்..ஒரு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடேன்.கண்டிப்பாக அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்.குழந்தைக்கு ஜுரம்.டாக்டர் கிட்ட உடனே எடுத்துட்டுப் போகணும்" என்றான் பாஸ்கரன்.


பர்ஸில் பணமிருந்தும்..பணத்தைக் கொடுக்க மனது இல்லாததால்.."சாரி பாஸ்கர்..எனக்கே கஷ்டம்."என்று சொல்லி விட்டேன்.பலமுறை இப்படி அவன் கேட்டு நான் கொடுத்திருக்கின்றேன்.ஆனால் கொடுத்த பணம் திரும்பி வராது அவனிடமிருந்து.


பாஸ்கர், "குழந்தைக்கு உடம்பு சரியில்லை" என பலரைக் கேட்டான்..யாரும் கொடுக்கவில்லை.அவனுக்கு கொடுக்கும் பணம் ஒரு வழிப் பாதை என்பதை அனைவரும் அறிந்திருந்ததால்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி "இல்லை" என்று சொல்லி விட்டனர்.


வெறும் கையுடன், அலுவலகத்தில் லீவு சொல்லி விட்டுச் சென்று விட்டான் அவன்.


இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்.அவன் மனைவியிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.."கணேஷ் சாரா..பாஸ்கர் உங்களுக்கு ஃபோன் பண்ணச் சொன்னார்.குழந்தை.....டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக பணம் இல்லாததால்..ஜுரம் அதிகமாகி.....இறந்து போச்சு.ஆஃபீஸ்ல எல்லார் கிட்டேயும் சொல்லச் சொன்னார்.."என்று அழுதபடியே சொல்லி முடித்தாள்.


பகீரென்றது எனக்கு.எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டேன்.


உடனே..ஆஃபீஸில் ஒவ்வொருவரும் பணம் போட்டு..ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனோம்


"என் குழந்தையைக்  காப்பாற்ற பணம் கேட்டேன்..ஆனா..ஆனா..அடக்கத்துக்கு கொண்டு வந்து கொடுத்து இருக்கீங்களே!"என்று அழும் அவனை எங்களால் தேற்ற முடியவில்லை     

No comments: