Showing posts with label சமூகம் - சிந்தனை. Show all posts
Showing posts with label சமூகம் - சிந்தனை. Show all posts

Tuesday, April 6, 2010

விவசாயியும்..தண்ணீர் பிரச்னையும்


சில ஆண்டுகளுக்கு முன்..ஊர் பக்கம் சென்று திரும்புகையில்..தாம்பரம் வந்தாலும் சென்னைக்குள் வந்தது போல இருக்காது..இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே என்றிருக்கும்..மாம்பலம் வந்தால்தான்..'அப்பாடா வண்டி சென்னை வந்துவிட்டது' என்ற எண்ணம் ஏற்படும்.

ஆனால்..இப்போதோ...செங்கல்பட்டு வந்தாலே சென்னை வந்தார் போல் தோற்றம்..பச்சை பட்டாடை உடுத்தி..வளர்ந்துவிட்ட பருவப் பெண்ணைப்போல தலை வணங்கி..காற்றின் ஓசையில் கல கல என சிரிப்பதுபோல் நெற்பயிர்கள்..ரயில் ஓடும் பாதையின் இரு பக்கங்களிலும் தோற்றம் அளித்தக் காலம் போய் விட்டது..இந்தப் பக்கமும் ஸ்ரீபெரும்புதூர் வரை இதே நிலை.

சென்னை தான் இப்படி வளர்ந்து விட்டது என்றால்..ஊர் பக்கங்களும் அப்படித்தான்.உதாரணத்திற்கு..முன்பெல்லாம்..திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வரை தான் கட்டிடங்கள்..பின்னர் நெல்வயல்கள் தான்..ஆனால் இன்று சமயபுரம் வரை கான்கிரீட் கட்டிடங்கள்..பசும் வயல்களை விழுங்கி விட்டன..கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே இப்படி ஆகி விட்டன..அது போதாது என..தென் தமிழகத்தில் நாம் பயணிக்கும் போது..ஆங்காங்கே..பல ஏக்கர் நெல்வயல்கள்..அரசியல்வாதிகளால்..பொறியியற் கல்லூரிகளாய் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது.சுவரிருந்தாலே சித்திரம் எழுத முடியும் என்னும் நிலையை மறந்து விட்டோம்.

உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொன்னாலும்..நகரங்கள் பெருகிவிட்டன..என்பதே நிதர்சனம்.

இது போன்ற நிலை ஏற்படும்போது..ஏன்..உணவுப்பிரச்னை..விலைவாசி ஏற்றம்..தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது..

விவசாயி தான் மக்களின் பசி தீர்ப்பவன்..மக்களின் வயிறு நிரம்பணும்னு..அவன் வெயிலில் உடலை வருத்திக் கொள்கிறான்..ஆனால் அரசு அந்த விவசாயியின் வயிறு நிரம்புவதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.அவனை நல்லபடியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை..ஒவ்வொரு வருடமும் அவன் உழைப்பால்..அவன் வியர்வையால் உருவான நெல்முத்துக்களுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடிவதில்லை..அரசே..கட்டுப்படியாகாத ஒரு விலையை நிர்ணயிக்கிறது.

விலைவாசி உயர்வுக்கேற்ப..அகவிலைப்படியை ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தும் அரசு..விவசாயியின் அகத்தைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.

தண்ணீர் பிரச்னையை எடுத்துக் கொண்டால்...ஒரு தொலை நோக்குப் பார்வையில்லை..ஆற்றுப்படுகை நிலத்தடி நீரையும்..ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீரை எடுத்து விட்டால்..கிராமங்களில் எந்த நாளிலுமே பயிரிட முடியாத நிலை ஏற்படும்.குடிக்கும் தண்ணீர் அடிப்படை உரிமை என்னும் நிலை மாறி..அடிப்படை தேவை என்னும் நிலைக்கு வந்து விட்டது..இனி வரும் நாட்களில் ..உலக அளவில் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக் கூட உண்டாக்கும் என ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது..

இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று..ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு..காவிரி ஆற்றுப் படுகையில் ராட்சசஷ கிணறுகள் தோண்டப்படும்..என்பது..

ஆனால்..உண்மையில் காவிரியில் அப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து வரும் நீரையே..தர்மபுரி மாவட்டங்களில் குடிநீராகக் கொடுப்பதே ஒகேனக்கல் திட்டம்..அதனால்தான் கர்நாடகா பிரச்னை எழுப்பியது..(நாம்..நம் பகுதியில் கிணறு நோண்டுவதற்கு அவர்கள் ஏன் தடை சொல்லப் போகிறார்கள்)

அரசு ..இந்நிலையில்..உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக..வயல்வெளிகள்..லேஅவுட் போடும் நிலங்களாக மாறுவதைத் தடை செய்ய வேண்டும்..நதிப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்..தண்ணீர் பிரச்னைக்கு மக்கள் ஒத்துழைப்போடு நிரந்தரத் தீர்வுக் காணவேண்டும்..

அதை விடுத்து..ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது

Wednesday, March 24, 2010

ஆனாலும் எனக்கு ஆசை அதிகம் தான்

சென்னை சின்மயாநகரில் உள்ள நிறுவனம் அது..மொத்தம் 600 ஊழியர்கள்..வேலை செய்கின்றனர்..அவர்களது விற்பனை பிரதிநிதிகளாக 250 ஊழியர்கள்....அவ்வளவு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்து..நிர்வாக செலவுகளையும் கவனித்துக் கொண்டு கோடிக் கணக்கில் லாபம் ஈட்டுகிறது..அந்த நிறுவனம்..

ஒரு சிடிஎஸ் ஸோ.டி.சி.எஸ் சோ இல்லை..அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் மீனாட்சி சுந்தரம் என்பவர்..நிறுவனத்தின் பெயர் 'மீனா ஹெல்த் கேர்'..இந்த நிறுவனம் விற்கும் பொருள்..போலியான..காலாவதி ஆன உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்வதுதான்.

இப்படிப்பட்ட நிறுவனம்..எப்படி காவல்துறை கண்களிலோ..சுகாதார..மருத்துவத் துறை கண்களிலோ படாமல் இருந்தது..அதன் நதிமூலம் என்ன..யாமறியோம் பராபரமே

காலாவதியாகும் மருந்து கசிவுகளை எரிக்கும் இடம்..சென்னை கொடுங்கையூரில் உள்ளது.அந்த காலாவதி கழிவுகளை வழியிலேயே மடக்கி..மருந்து..மாத்திரை..ஊசி மருந்து ஆகியவற்றை இந்த மோசடி கும்பல் வாங்குமாம்.மேலும் குப்பை பொறுக்குபவர்கள் அவற்றை பொறுக்கி எடுத்து வந்தால் அவர்களிடம் கிலோ 150 ரூபாய்க்கு வாங்குமாம் இந்த மோசடி கும்பல்...

அந்த மருந்துகளுக்கு வேறு wrapper வேறு Expiry date போட்டு மீண்டும் விற்பனைக்கு விடுமாம்.

இதில் பலர் கைது செய்யப்பட்டாலும்..நேரடி தொடர்புள்ள ஐவர் இன்னும் தலைமறைவாய் உள்ளனர். மீனாட்சி சுந்தரம்,பிரதீப் சோர்டியா,சஞ்செய் குமார்,வெங்கடேசன் ஆகியோரை ..வழக்கம் போல காவல்துறை வலை வீசி தேடி வருகின்றனராம்..(அவர்கள் சரணடைந்து இவர்களது வேலையை எளிதாக்கட்டும்.)

இந்நிலையில் , நேற்று 6 கிடங்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்துகளை காவல் துறை நேற்று கைப் பற்றியுள்ளது.இந்த மருந்துகளில் பெரும்பாலானவை குழந்தைகளுக்கான மருந்துகளாம்..அடப் பாவிகளா...

பொதுமக்கள்.. இது போன்ற இடங்கள் என சந்தேகப்படும்படியான இடங்கள் தெரிந்தால் உடன் 24335068 தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக் கொண்டு..தெரிவிக்கலாம் என மருத்துவக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

நாமும்..மருந்து வாங்குகையில் காலாவதி தேதி, அந்த மருந்து சரியானதுதானா என்றெல்லாம் சரி பார்ப்பதுடன்..கண்டிப்பாக அதற்கான ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள துரோகிகள்..அரக்கர்கள்..நாளை சரணடைந்தாலும்..விசாரணை முடிந்து..வழக்கு பதிவு செய்யப்பட்டு..வருடக் கணக்கில் வழக்கு நடை பெறும்..சம்பந்தப் பட்டவர்கள் பண பலத்தால்..ஜாமீனில் வந்து உல்லாசமாக இருப்பார்கள்.வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும்..கீழ் கோர்ட்.மேல் கோர்ட்,உயர் நீதி மன்றம், உயர் நீதி மன்ற பெஞ்ச்,உச்ச நீதி மன்றம்,உச்ச நீதி மன்ற பெஞ்ச் என விசாரணை தொடரும். அதற்குள் அவர்கள் உலகச் சிறையிலிருந்து கூட வெளியேறிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்..இவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளிக்க வேண்டுமானால்..இவர்களின் ஜாமீன் மனு அனைத்துக் கோர்ட்டிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.அவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது..

நடக்குமா...