
சில ஆண்டுகளுக்கு முன்..ஊர் பக்கம் சென்று திரும்புகையில்..தாம்பரம் வந்தாலும் சென்னைக்குள் வந்தது போல இருக்காது..இன்னும் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே என்றிருக்கும்..மாம்பலம் வந்தால்தான்..'அப்பாடா வண்டி சென்னை வந்துவிட்டது' என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால்..இப்போதோ...செங்கல்பட்டு வந்தாலே சென்னை வந்தார் போல் தோற்றம்..பச்சை பட்டாடை உடுத்தி..வளர்ந்துவிட்ட பருவப் பெண்ணைப்போல தலை வணங்கி..காற்றின் ஓசையில் கல கல என சிரிப்பதுபோல் நெற்பயிர்கள்..ரயில் ஓடும் பாதையின் இரு பக்கங்களிலும் தோற்றம் அளித்தக் காலம் போய் விட்டது..இந்தப் பக்கமும் ஸ்ரீபெரும்புதூர் வரை இதே நிலை.
சென்னை தான் இப்படி வளர்ந்து விட்டது என்றால்..ஊர் பக்கங்களும் அப்படித்தான்.உதாரணத்திற்கு..முன்பெல்லாம்..திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வரை தான் கட்டிடங்கள்..பின்னர் நெல்வயல்கள் தான்..ஆனால் இன்று சமயபுரம் வரை கான்கிரீட் கட்டிடங்கள்..பசும் வயல்களை விழுங்கி விட்டன..கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே இப்படி ஆகி விட்டன..அது போதாது என..தென் தமிழகத்தில் நாம் பயணிக்கும் போது..ஆங்காங்கே..பல ஏக்கர் நெல்வயல்கள்..அரசியல்வாதிகளால்..பொறியியற் கல்லூரிகளாய் ஆகிவிட்டதையும் பார்க்க முடிகிறது.சுவரிருந்தாலே சித்திரம் எழுத முடியும் என்னும் நிலையை மறந்து விட்டோம்.
உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொன்னாலும்..நகரங்கள் பெருகிவிட்டன..என்பதே நிதர்சனம்.
இது போன்ற நிலை ஏற்படும்போது..ஏன்..உணவுப்பிரச்னை..விலைவாசி ஏற்றம்..தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது..
விவசாயி தான் மக்களின் பசி தீர்ப்பவன்..மக்களின் வயிறு நிரம்பணும்னு..அவன் வெயிலில் உடலை வருத்திக் கொள்கிறான்..ஆனால் அரசு அந்த விவசாயியின் வயிறு நிரம்புவதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.அவனை நல்லபடியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை..ஒவ்வொரு வருடமும் அவன் உழைப்பால்..அவன் வியர்வையால் உருவான நெல்முத்துக்களுக்கு அவனால் விலை நிர்ணயிக்க முடிவதில்லை..அரசே..கட்டுப்படியாகாத ஒரு விலையை நிர்ணயிக்கிறது.
விலைவாசி உயர்வுக்கேற்ப..அகவிலைப்படியை ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தும் அரசு..விவசாயியின் அகத்தைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை.
தண்ணீர் பிரச்னையை எடுத்துக் கொண்டால்...ஒரு தொலை நோக்குப் பார்வையில்லை..ஆற்றுப்படுகை நிலத்தடி நீரையும்..ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீரை எடுத்து விட்டால்..கிராமங்களில் எந்த நாளிலுமே பயிரிட முடியாத நிலை ஏற்படும்.குடிக்கும் தண்ணீர் அடிப்படை உரிமை என்னும் நிலை மாறி..அடிப்படை தேவை என்னும் நிலைக்கு வந்து விட்டது..இனி வரும் நாட்களில் ..உலக அளவில் ஏற்படப் போகும் தண்ணீர் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக் கூட உண்டாக்கும் என ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது..
இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று..ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு..காவிரி ஆற்றுப் படுகையில் ராட்சசஷ கிணறுகள் தோண்டப்படும்..என்பது..
ஆனால்..உண்மையில் காவிரியில் அப்பகுதியில் கர்நாடகாவிலிருந்து வரும் நீரையே..தர்மபுரி மாவட்டங்களில் குடிநீராகக் கொடுப்பதே ஒகேனக்கல் திட்டம்..அதனால்தான் கர்நாடகா பிரச்னை எழுப்பியது..(நாம்..நம் பகுதியில் கிணறு நோண்டுவதற்கு அவர்கள் ஏன் தடை சொல்லப் போகிறார்கள்)
அரசு ..இந்நிலையில்..உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக..வயல்வெளிகள்..லேஅவுட் போடும் நிலங்களாக மாறுவதைத் தடை செய்ய வேண்டும்..நதிப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்..தண்ணீர் பிரச்னைக்கு மக்கள் ஒத்துழைப்போடு நிரந்தரத் தீர்வுக் காணவேண்டும்..
அதை விடுத்து..ஒரு தொலைநோக்குப் பார்வையின்றி..அவ்வப்போது ஏற்படும் நிலையை..அவ்வப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுமேயாயின்..இனி வரும் நாட்களில் தாகத்தாலும்..வறுமையாலும் வாடப்போகும் மக்களை யாராலுமே காப்பாற்ற முடியாது