Saturday, October 31, 2009

இந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க

பாட்டின் வரிகளை மட்டும் பாருங்கள்..நான் ரசித்த பாடல்.

படித்ததும் கேட்டதும்...

1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..

'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.

2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.

3.the sufferings of the past and the fears of the future shouldnot be allowed to disturb the pleasure of the present.

4.பொன்னை எறிந்தாலும்...பொடிக்கீரையை எறியாதே! பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.

5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி
இயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.

6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை
நாங்கள்
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!

Friday, October 30, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 6

இளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..

கணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..

புது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..

புத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..

ஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா? நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..

ஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..

(முல்லைத்திணை-தலைவி கூற்று)

வாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு
யார் ஆகியரோ? தோழி! நீர
நீரப்பைம்போ துளரி, புதல
பீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையோடு
என் ஆயினாள் கொல் என்னா தோரே
என்னா யினல்கொல் என்னா தோரே...
- கிள்ளி மங்கலங்கிழார்

மழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..

இதற்கான அர்த்தம்..

அவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அசைத்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ? என்று வருந்தாதவன் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?

பாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.

குறுந்தொகையில் வரும் பாடல் இது.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (30-10-09)

1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.

2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.

3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்

4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.

5)யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்.

6)வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று புகார் செய்வார்.பெரியநாயக்கன் பாளயத்தில் உண்மையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.மனுநீதி நாள் முகாமில் பங்குப்பெற்ற விவசாயி ஒருவர் தெருவில் இருந்த ஆறு புளியமரங்களைக் காணவில்லை..அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புகார் செய்துள்ளாராம்.

7)இந்தியாவில் அஜந்தா, எல்லோரா குகைகள் பிரசித்திப் பெற்றவை..மிக நீளமான குகை அமெரிக்காவின் கேடுகி மாநிலத்தில் உள்ள ஃப்ளீட் ரிஜ்கேல் சிஸ்டம் தான்..இதன் நீளம் 116.3 கிலோ மீட்டர்.

8) ஒரு ஜோக்
மெகா சீரியல் ஒன்றிற்கு கதை எழுத சான்ஸ் கிடைச்சிருக்காமே..என்ன கதை வைச்சிருக்க
ஆயா வடை வித்த கதை..காக்கா தூக்கிண்டுண்டு போச்சே..அதுதான்..சின்ன சீ ரியலாம்..அதைத்தான் 500 எபிசோடிற்குள் சொல்ல முடியும்.

Thursday, October 29, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 6

இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.

1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.
அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.

ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.

பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.

கலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது

பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.

1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.

1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு

1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்

1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்

1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.

1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை

அடுத்த பதிவில் சந்திப்போம்

வாய் விட்டு சிரியுங்க

என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

Wednesday, October 28, 2009

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

எனது பதிவுகள் அவ்வப்போது யூத்ஃபுல் விகடனில் வருவது உண்டு..ஆனால் இப்போது எனது 'காதலாவது கத்திரிக்காயாவது..'சிறுகதையும்...வாய் விட்டு சிரியுங்க..பதிவும்..ஒரே சமயம் இரண்டும் யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளன.மேலும் சிறுகதை அதிகம் படிக்கப் படுவ தாயும் உள்ளது.
விகடனாருக்கு நன்றி

கொஞ்சி விளையாடும் தமிழ் - 5

'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இதற்கான அர்த்தம்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலயும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்)

Tuesday, October 27, 2009

Orphan ஆங்கிலப் படம்

தங்களின் மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்ததால்..9 வயது எஸ்தர் என்னும் ரஷ்யன் பெண்ணை தத்தெடுக்க முடிவெடுக்கின்றனர் அந்த தம்பதிகள்.ஆனால் அப்பெண் வீட்டிற்கு வருவதை மகன் விரும்பவில்லை.ஆனால்..வாய் பேசமுடியாத ,காது கேட்காத இளைய மகள் விரும்புகிறாள்.

ஆனால் எஸ்தர் பள்ளியில் யாருடனும் ஒட்டுவதில்லை.அவளால் உடன் படிக்கும் பெண் விழுந்து கால் காயம் எற்படுகிறது.அவள் போகும் இடமெல்லாம்..ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதால்..அதைப் பற்றி அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கேட்க..அதன் தலைவி அதை ஒப்புக் கொண்டு..மேலும் சில தகவல் தர அவளை எஸ்தர் கொன்று விடுகிறாள்.பின் அவள் பற்றி ரகசியம் தெரியும் மகனை கொல்ல முயற்சிக்கிறாள்..ஒரு நாள் இரவு தந்தை கொல்லப்படுகிறார்.

பின் தாயும்..இளைய மகளையும் கொல்ல முயலுகிறாள்.

இந்த ஹாரர் திரில்லர் படத்தில் இதற்கு மேல் கதையைச் சொன்னால் பார்க்கும் இன்டெரெஸ்ட் போய் விடும்

படத்தின் கடைசிக் காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வந்து..நகைத்தை கடித்துக் கொண்டிருப்போம்..இது இயக்குநரின் வெற்றி.

கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

படத்தின் இயக்கம் jaune collet serra
இசை john ottman
ஒளிப்பதிவு jeff Cutter

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு

படத்தில் எஸ்தராக நடித்த 12 வயது Isabella Fuhrman நடிப்பு சூப்பர்



உன்னுடன் வாழ்வது அரிது...

பராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.

எல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...

ஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.

பசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

வயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

முறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..

அளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்
எந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது

இன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும் .

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...


வாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.
1.நல்ல உணவு
2.நல்லதூக்கம்
3.அன்பான வாழ்க்கைத்துணை.

முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.

இரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..

உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.

தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.

ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.

மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.

இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..

மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.

Monday, October 26, 2009

குறுந்தொகையில் ஒரு பாடல்

தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.

அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.

தலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.

அதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.

திரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..

துரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.

அந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.

அதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா" என்றும் பாடல் உண்டு.

தூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.

அப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்

குறிஞ்சி- தோழிக்கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

- திருப்புத்தேளார்

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.

இதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.

Sunday, October 25, 2009

வாய் விட்டு சிரியுங்க..

பழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன?
பழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்

2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா?
சேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா?

3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே!!
சமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்

4)நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே!
நம்பிக்கைத்துரோகின்னு பேசுங்க
அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...
நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.

5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..
ஏன் அப்படி..
பின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு

6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்
என்ன சொல்ற நீ
நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.

Saturday, October 24, 2009

நான் நீயாக ஆசை ..


நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Friday, October 23, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 4


நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..

கலைஞர் என்னும் கலைஞன் - 5

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.

1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்

1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.

1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, October 22, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(23-10-09)

இந்தியாவில் நூறில் ஏழு பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதாம்.குறைந்த உடலுழைப்பு,மோசமான உணவு முறைகள்,பரம்பரை தன்மை உள்ளிட்ட காரணங்களினால்.. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறதாம்..

2)கேரளாவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40லட்சம் பேரின் உயிரை பணயம் வைத்துத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம்.இந்த மக்கள் அனைவரையும் அரபிக்கடலில் தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க வெண்டுமா அல்லது புதிய அணை கட்ட வேண்டுமா என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி என்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.

3)நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா..ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 சதவிகிதத்திற்கு மேல் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் பலர் கேரள மாநிலத்தில் பணியாற்றியபின் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.

5)நாம் ஒரு அடி எடுத்துவைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறதாம்.

6)கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா? கந்தசாமிக்குத் தெரிந்திருக்கும்..ஒரு சேவல் கூப்பிட்டால் (கூவினால்) எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்புடு தூரம்.

7)ஒரு ஜோக்..
டாக்டர்- உங்களுக்கு தூக்கத்தில நடக்கற வியாதின்னு யார் சொன்னாங்க
நோயாளி- எனக்கேத் தெரியும் டாக்டர்..ஆஃபீஸ்ல உட்காராம நடந்துக்கிட்டே இருக்கேனே

Wednesday, October 21, 2009

வைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி..

அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது தன் இடது உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு..சிறிது நீர்விட்டு கலக்கி..சிறு குச்சியில் அதைத் தோய்த்து..நெற்றியில் நீண்ட கோடு ஒன்றை இட்டுக் கொண்டார்.குழாயைத் திறந்து இடது கையை கழுவிக் கொண்டார்.பக்கத்து துவாலையில் கைகளைத் துடைத்துக் கொண்டார்.

அப்பாவின் செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த வைதேகி..அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையும்..தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

நைட் ஷிஃப்ட் முடிந்து வந்து நேரமாகியும்..இன்னும் காஃபிக்காக அடுக்களையில் நுழையா மகளை அழைத்த படியே வந்தாள் ரங்கநாயகி.

அங்கு..தன் கணவனையும், மகளையும், நிசப்தத்தையும் கண்டு.."ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்..

'என்ன ஆச்சு..அப்பாவுக்கும்..பொண்ணுக்கும்' என மௌனத்தை உடைத்தாள்.அதற்கு பதில் வராததால்..'யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து சொன்னால்தானே தெரியும்..' என்றபடி வைதேகியை நோக்கி.."ஏண்டி..ரெஷசன்ல வேலை போயிடுச்சா?' என்றாள்.

வைதேகி தலையைக் குனிந்துக் கொண்டாள்.கண்ணீர்த் துளிகள் இரண்டு..கால் கட்டைவிரல்களில் விழுந்தது.

'அது ஒண்ணுமில்லடி..அவளுக்கு..இந்த அரவாமுதனோட..அப்பாவோட "ஏ' ங்கிற இனிஷியல் வேண்டாமாம்..ஆமாம்..என்ன பேர் சொன்ன.." என்றார் வைதேகியிடம்.

"ஜேம்ஸ்" தன் செப்பு வாயைத் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள் வைதேகி..அது அவளுக்கேக் கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை..

'ஜேம்ஸ்..அவளுக்கு இப்ப ஜே ங்கற இனிஷியல் வேணுமாம்..வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு போயிண்டு இருந்தவள்..இனிமே ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போகட்டான்னு கேட்கறா.பெருமாள் பிரசாதம்..துளசியை மென்னவளுக்கு..அப்பம் முழுங்க ஆசையாம்..'கோபத்துடன்..அதே சமயம் அது வெளியே தெரியா நக்கலுடன் கூறினார்.

சற்றே..தைரியம் வந்த வைதேகி..'அம்மா..என் கூட கால்சென்டர்ல வேலை செய்யற ஜேம்ஸை எனக்குப் பிடிச்சு இருக்கு..அவரைக் கல்யாணம் பண்ணிக்க அப்பாவோட பர்மிஷனைக் கேட்டேன்..'என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..அவள் கன்னங்களில் 'பளார்..பளார்..' என நாலு அறை அறைந்த ரங்கநாயகி 'அடிப்பாவி..எவ்வளவு லேசா சொல்ற..நாம என்ன ஜாதி..அவன் என்ன ஜாதி..நம்ம குடும்பம் சாஸ்தோஸ்ரமான குடும்பம்..நம்ம ஜாதியைத் தவிர யார் வந்தாலும்..அவா தண்ணீ கேட்டாக் கூட..சொம்புல கொண்டு வந்து கீழ வைப்போம்.அவா குடிச்சுட்டு கீழ வச்சதும்..தண்ணீ தெளிச்சு எடுத்து வைப்போம்..அப்படி ஒரு குடும்பத்துல வந்து பொறந்துட்டு..அப்படிப்பட்ட அப்பாவுக்கு வந்து பொறந்துட்டு..உன் மூளை ஏண்டி இப்படிப் போச்சு..' என அழத் தொடங்கினாள்.

'அம்மா..இப்ப என்ன ஆச்சு..அப்பா சரின்னாதான்..இந்த கல்யாணம் நடக்கும்..இல்லேனா..காலம் பூரா நான் கல்யாணம் பண்ணிக்காமலேயே இருப்பேன்.வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...ஆனா ஒன்னு சொல்லட்டா..எனக்கு இருபத்தெட்டு வயசாச்சு..எனக்குக் கீழ நாலு பொண்ணுங்க..எல்லாருக்கும் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு பணம் தேவை..நாம இருக்கற நிலைல அது எவ்வளவு கஷ்டம் யோசனைப் பண்ணுங்க..இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..நம்ம குடும்பத்துக்கு ஒரு மகனா இருந்து ஒத்தாசை பண்ணுவான்' என்றாள்.

'இனிமே இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது..வேற மதத்துக்காரன்..வேற ஜாதிக்காரன் தயவு எனக்குத் தேவையில்லை.பணமாம்..பணம்..யாருக்கு வேண்டும் பணம்..பணம்னதுமே அப்பா வாயை இளிப்பான்னு நினைச்சியா..அப்படி ஒரு பெயரைச்சொல்லி வரப் பணம் எனக்கு வேண்டாம்..கடைசிவரை நம்ம ஜாதிதான் உயர்ந்ததுங்கற எண்ணம் இருக்கணும்.அன்னிக்கு டி.வி.ல பார்த்தியே..அந்த பொண்ணு என்ன சொல்லித்து..நான் இந்த ஜாதில பொறந்ததுக்கு பெருமாளுக்கு நன்றி சொல்லறேன்னுத்தே..அது பொண்ணு..உனக்கு கடைசியா சொல்றேன்..இனிமே என் மூச்சுக் காத்திலக் கூட அவன் பெயர் படக்கூடாது..' என்றார் கறாராக.

***** ***** ***** *****
அன்று இரவு நைட் ஷிஃப்டிற்கு வந்த வைதேகி..அலுவலகத்தில்..அவள் பதிலுக்குக் காத்திருந்த ஜேம்ஸை நளினமாக தவிர்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டாள்.

முதல் அழைப்பு வந்தது..

"குட் மார்னிங் சார்..கேத்ரின் ஹியர்..வாட் கேன் ஐ டு ஃபார் யு சார் " என்றாள் இயந்திரமாக....

கொஞ்சி விளையாடும் தமிழ்..- 3

கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.

இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..

எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.

உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து