Wednesday, March 17, 2010

வள்ளுவனும் கண்ணழகும் - 2

இதன் முதல் பகுதி

தலைவியின் மை தீட்டப்பட்ட கண்கள் பார்க்கும் பார்வையில் இரண்டு வகை உண்டாம்.ஒரு பார்வை தலைவனுக்கு காதல் நோயை ஏற்படுத்தும் பார்வையாம்..ஆனால் அதே பார்வை அந்த நோய்க்கு மருந்தாகும் பார்வையாயும் ஆகுமாம்..அந்த அளவு சக்தி அவளின் பார்வைக்கு உண்டாம்..

இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்தோய் மருந்து

தலைவி பார்க்கும் கள்ளத்தனமான கடைக்கண் பார்வை..காம இன்பத்தின் போது ஏற்படும் இன்பத்தின் பாதி அளவைவிடக் கூடுதலாம்..இதைத்தான் பின்னாளில் வந்த கவிஞர் ஒருவர் 'பார்வை ஒன்றே போதுமே..பல்லாயிரம் சொல் வேண்டுமா' என்றாரோ? வள்ளுவனின் வார்த்தைகளில்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

ஆனால் அதே பார்வைதான் அவளுக்கு நாணம் கலந்ததாகவும்..காதலனினிடம் அன்பு வளர காரணமாகவும் அமைகிறதாம்..

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

.இப்படியெல்லாம் பார்வை பற்றியும்..கண்ணழகையும் சொல்லும் வள்ளுவன்..தலைவி காதலன் பார்க்கும் போது தரையைப் பார்க்கிறாளாம்..அவன் அவளைப் பார்க்காத போது அவனைப் பார்த்து மகிழ்கிறாளாம்....இப்படியும் முரண்பாடோடு சொல்கிறானே ஏன்?

ஒரு நிமிஷம் யோசித்தால்..புலப்படும்..

அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கையில் அந்த சக்தியால் செய்வதறியாது நிலைகுலைந்து போகிறான் தலைவன்..அதைப் புரிந்துக் கொண்டவள்..அவன் தன்னை நன்கு பார்த்து ரசிக்கட்டும் என்ற எண்ணத்தில் நிலத்தைப் பார்க்கிறாள்.ஒரு சமயம் அவள் அவனைப் பார்த்தால்..அவன் மனம் அலைக்கழிக்கப் படுவதை அவள் தவிர்க்க எண்ணுகிறாள்..ஆகவே தான் வள்ளுவன் அப்படி கூறியிருப்பான் என்று தோன்றுகிறது.

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

இதையே பின்னாளில்..'உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே..விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே' என எளிமைப்படுத்தினார் கவியரசு.

ஆனால் தலைவன் அவள் தன்னை நேருக்கு நேர் பார்க்காததற்கு தன் மேல் உள்ள அன்புதான் காரணம்..என்றும் அவள் தன்னை ரகசியமாய் பார்த்து ரசிப்பதாக எண்ணுகிறான்..

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

அவள் என்னை நேராக பார்க்கவில்லையே தவிர..ஒரு கண்ணை சுருக்கி பார்த்து தனக்குள் மகிழ்கிறாள்..என எண்ணி இவன் மகிழ்கிறான்..

(வள்ளுவனும் ..கண்ணழகும் தொடரச் சொன்னால் தொடருகிறேன்)

19 comments:

Chitra said...

"கண்"டிப்பாக தொடர வேண்டும்.

vasu balaji said...

/(வள்ளுவனும் ..கண்ணழகும் தொடரச் சொன்னால் தொடருகிறேன்) /

பின்னூட்டப் போராட்டம் ஏதாவது நடத்தணுமா?:)). அருமை சார்! தொடர்ந்தேயாக வேண்டும்.

நர்சிம் said...

அற்புதம் அய்யா அற்புதம். அதிலும் அந்த யாப்பினுள் அட்டிய நீர் குறளுக்கு ஆயிரம் விளக்கம் இருக்கிறது..

என்ன கேள்வி இது.. தொடருங்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
"கண்"டிப்பாக தொடர வேண்டும்.//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அருமை சார்! தொடர்ந்தேயாக வேண்டும்.//

நன்றி Bala

ஆனால்..இடுகையை படிப்பவர் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை..அதனால்தான் அந்தக் கேள்வி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
அற்புதம் அய்யா அற்புதம். அதிலும் அந்த யாப்பினுள் அட்டிய நீர் குறளுக்கு ஆயிரம் விளக்கம் இருக்கிறது.. என்ன கேள்வி இது.. தொடருங்கள்..//

ஆம்..நர்சிம்..ஒவ்வொரு முறை படிக்கும் போதும்..நமக்கு வேறு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன..
யாப்பினுள் அட்டிய நீர்'

வள்ளுவனுக்கு உரை எழுதியவர்கள் இப்படித்தான் வள்ளுவன் எழுதியிருப்பான் என்ற உரையையே எழுதியுள்ளனர்.

கaதலன் மீது அவள் கொண்ட அன்பு..வயலில் பசுமையாக வளரும் பயிரைப் போன்றதாம் (இது காதல் பயிர்)..அவள் அவனைப் பார்த்த கடைக்கண் பார்வை அந்த (காதல்) பயிருக்கு..பயிர் வளர பாய்ச்சும் நீராய் இருக்கிறதாம்..

அந்த பார்வை அவனுக்கு அவள் மீதான காதலை மேன்மேலும் வளர்க்கும் பார்வையாம்.

நன்றி நர்சிம்

மங்குனி அமைச்சர் said...

சாரி தல நமக்கு கொஞ்சம் தூரமான விஷயம் , சோ நோ கமெண்ட்ஸ் .
ஆனா நல்ல விஷயம் நீ தொடர்ந்து பதிவ போடு தல ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மங்குனி அமைச்சர்

சிநேகிதன் அக்பர் said...

அழகு எப்போதும் தொடரத்தான் விருப்பம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவள் என்னை நேராக பார்க்கவில்லையே தவிர..ஒரு கண்ணை சுருக்கி பார்த்து தனக்குள் மகிழ்கிறாள்..என எண்ணி இவன் மகிழ்கிறான்..
//

பிண்ணூட்டம் இல்லாவிட்டாலும் ஹிட் இருப்பதைப் பார்த்து மகிழும் பதிவர் போல..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அவள் என்னை நேராக பார்க்கவில்லையே தவிர..ஒரு கண்ணை சுருக்கி பார்த்து தனக்குள் மகிழ்கிறாள்..என எண்ணி இவன் மகிழ்கிறான்..
//

பிண்ணூட்டம் இல்லாவிட்டாலும் ஹிட் இருப்பதைப் பார்த்து மகிழும் பதிவர் போல..,///


:-)))

DREAMER said...

குறளுக்கு விளக்கங்கள் பலவிதத்தில் படித்து வியந்திருக்கிறேன். இங்கு நீங்கள் கொடுத்துள்ள யதார்த்த நடையும், அதை சமீப கால பாடல்களுடன் ஒப்பிட்ட விதமும், மிக அருமை.

தயவு செய்து தொடருங்கள..!

-
DREAMER

T.V.ராதாகிருஷ்ணன் said...

//DREAMER said...
குறளுக்கு விளக்கங்கள் பலவிதத்தில் படித்து வியந்திருக்கிறேன். இங்கு நீங்கள் கொடுத்துள்ள யதார்த்த நடையும், அதை சமீப கால பாடல்களுடன் ஒப்பிட்ட விதமும், மிக அருமை.

தயவு செய்து தொடருங்கள..!//-
DREAMER///

நன்றி DREAMER

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நேசமித்ரன்

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க தொடருங்கள் ..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪

இரசிகை said...

thodarungal sir........:)