தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
முல்லை திணை - பாடலாசிரியர் ஓக்கூர் மாசாத்தி
இனி பாடல்-
பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்
குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.
-ஓக்கூர் மாசாத்தி.
தோழி-, பொருள் ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர், பழைய மழையினால் தழைத்த, புனத்தில் உள்ள புதிய வரகினது, ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள், சேர்ந்த பக்கத்தில், மலர்ந்த முல்லைக் கொடியினது, காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், மலர்ந்த, நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில், வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார், இதனைக் கருதுவாயாக.
(கருத்து) தலைவர் தாம் கூறிச் சென்ற பருவம் வந்தும் வந்திலர்.
No comments:
Post a Comment