தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)
பாலை திணை - பாடலாசிரியர் கொற்றன்
இனி பாடல் -
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின்
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.
-கொற்றன்
தோழி-, நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம்மை யின்றி, இமைப் பொழுது அளவேனும், பிரிந்திருத்தலைப் பொருந்தாத, நம்மை, மறந்து விட்டுத் தாம் சென்ற அவ்விடத்தே தங்குதலில்வல்ல தலைவர் திறத்தில், பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப் பக்கத்தில் வெற்றி பொருந்திய துர்க்கைக்கு, பலிக் கடன் கழித்தலைச் செய்வோம்; கையில் காப்பு நூலைக் கட்டோம் நிமித்தத்தையும் பாரோம்; நற் சொல்லைக் கேட்டற்குச் சென்று நில்லோம்; நினைத்தலையும் செய்யோம்.
(கருத்து) நம் அன்பு நிலை தெரிந்து விரைந்து வருதல் தலைவர் கடமையாகும்/
‘ஒருகணப் பொழுதேனும் அவரைப் பிரிந்து அமையேமாகிய நம்மைப் பிரிந்து, தாம் சென்ற இடத்தே நம்மை மறந்து இருக்கும் மனவலியை உடையர் தலைவர். அவர் நம் உயிருக்கு உயிர் போன்றவராதலின், நம் நிலையை உணர்ந்து விரைவில் வரும் கடப்பாடுடையர். அங்ஙனம் அவர் செய்யாராயின் நாம் கடவுளை வழிபட்டுப் பயன் என்?' என்று தலைவி கூறினாள்.
No comments:
Post a Comment