தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வி” என்று உணர்த்தியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
இனி பாடல்-
பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரி னெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்க மெழுகென வீங்கே
வல்லா கூறி யிருக்கு முள்ளிலைத்
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.
-வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்
தோழி--, பசலையானது எனது மேனியின் கண்ணது; காதல் அவரது அன்பற்றநெஞ்சமாகிய செல்லுதற்கரிய இடத்தின்கண்ணது; எனது அடக்கமும், நெடுந்தூரத்தில்.நீங்கியது; எனது அறிவு, தலைவர் உள்ள இடத்திற்கே செல்வேம் அதன்பொருட்டு எழுவாயாக என்று, நம்மால் மாட்டாதவற்றைக் கூறி இங்கே தங்கி இருக்கும்; எந்தத் தன்மையில் உள்ளீரோ என்றுபரிவு கூர்ந்து வினாவிக் குறைதீர்ப்பராயின், முள் அமைந்த இலையை உடைய, பருத்த அடியை உடைய தாழையை உடையகடற்கரைத் தலைவருக்கு, இது தக்க செவ்வியாகும்.
(கருத்து) தலைவர் வரைவதற்கு ஏற்ற சமயம் இது.
(வி-ரை.) பகற்குறிக்கண் நிகழும் இடையீட்டால் வருந்திய தலைவி,தலைவன் வரைந்து கோடலை விரும்பிக் கூறியது இது. இதன்கண் தன்நிலையைப் புலப்படுத்தி, இது நீங்குதற்குரிய செவ்வி இதுவென்றுதலைவன் உணரும்படி கூறினாள், அவன் அதனை உணர்ந்து விரைவில் வரைந்து கொள்வான் என்பது கருதி.
No comments:
Post a Comment