Monday, February 19, 2018

நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ  வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வெங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

பொருள்
================
பாடல் - 1


தையொரு திங்களும்  - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத்  தூய்மைப்படுத்தி
தரை மண் தலம் இட்டு- குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில்
                                                   இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல்                                                                         கொண்டு (கோலம்)
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து- தெருவில் இட்டு
                                                                           அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா  - காம தேவனே
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி- உன்னைத்                                                                                                           தொழுவதால்
உய்யலாமோ என்று எண்ணி- இந்தத் துன்பத்திலிருந்து
                                                               தப்பிக்கலாமோ என எண்ணி

உன்னையும் உம்பியையும்- உன்னையும் உன் தம்பியான
                                                             சாமனையும்
தொழுதேன்   - தொழுதேன்
வைய்யதோர் தழலுமிழ்- வெப்பமுடைய நெருப்பை உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு  - சக்கரத்தைக் கையில்
                                                        கொண்ட வேங்கடவனுக்கு என்னை  - என்னை
விதிக்கற்றியே- விதித்து விடேன் (அவனுக்கே உரியவள்
                                                                            என்றாக்கி விடேன்)

தை மாதம் முழுவதும் தரையைத் தூய்மைப் படுத்தி. குளிர்ந்த நீர்த் தெளித்த மண்தரையில் மாசி முதல் நாள்..தெருவில் அழகிய கோலமிட்டு அலங்கரித்து , காமதேவனே! உன்னைத் தொழுவதால் , இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என எண்ணி, உன்னையும், உன் தம்பியுமான சாமனையும் தொழுதேன்.
வெப்பமுடைய நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கு என்னை உரியவள் ஆக்கிவிடு.

No comments: