Sunday, December 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 16

கே.விவேக் ஷங்கர்
------------------------------

2000ஆம் ஆண்டு விவேக் ஷங்கர் என்ற திறமைமிக்க இளைஞர் ஒருவர் பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை, அமரர் வி.கோபாலகிருஷ்ணனின் நினைவு நாளன்று (29-4-2000) துவக்கினார்.
தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றினார்.

நரேந்திரா,ID, நதிமூலம் ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் அஃப்சர்,கௌஷிக், கிரீஷ் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என்று அழைக்கப்பட்ட சுந்தரராஜனை (காத்தாடியின் நாடகக் குழுவின் ஆரம்பகால நடிகர்) தன் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க வைத்தார்.தவிர்த்து காத்தாடியின் குழுவினருக்கு இரு நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

"பிரம்மேந்திரர்" இவரது சமீபத்திய நாடகம்.இதில் கிரீஷ் அய்யப்பன் பிரம்மேந்திரராகவே வாழ்ந்திருப்பார்.

விவேக் ஷங்கர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

மேலும் :ஷ்ரத்தா: நாடகக்குழுவினருக்காக "தனுஷ்கோடி" என்ற நாடகத்தை எழுதி இயக்கி இருந்தார்.இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர்  கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன் படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு மேலாக மழையைக் காட்டி சாதனையை உண்டாக்கினார்.

மேடையில் ஒரு சுனாமி என்ற பெயரில் 10-11-2010  அண்ரு விகடனில் வந்த அவரது இந்த விமர்சனம் ஒன்றே இவர் திறமையை நிரூபிக்க போதுமானது.

சுற்றி சுழன்றடிக்கும் சுனாமி, இடைவிடாமல் கொட்டும் மழை, அவ்வப்போது உறுமும் புயல்காற்று…. இவை அனைத்தையும்  ஓரு நாடக மேடையில் கொண்டு வர முடியுமா?… “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறது ஸ்ரத்தா நாடகக் குழுவின் ‘தனுஷ்கோடி’ நாடகம்!
பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியை புயல் விழுங்கிய பின்னனியில், நகைச்சுவையும் த்ரில்லரும் கலந்த கதை.  ஒரு கண்டிப்பான வங்கி அதிகாரி, அதே வங்கியின் மற்றொரு கிளையில் பணிபுரியும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோருகிறார் அந்த ஊழியர். மறுக்கிறார் அதிகாரி.  உடனே, ஆஸ்துமா நோயாளியான அதிகாரியை கட்டிப் போட்டு மிரட்டுகிறார் ஊழியர்.  அதிகாரியின் நண்பர், ஒரு போலீஸ் ஏட்டு, ஒரு காதல் ஜோடி….இவர்கள் மூலம் அந்த அதிகாரி எப்படி மீட்கப்படுகிறார் என்பதே கதை.
ஒரே செட்டில் கதை நடப்பது புதிது அல்ல.  ஆனால், பெரியதொரு வீட்டிலும், அதைச் சுற்றியும், அதன் தாழ்வாரங்களிலும் உட்புறத்திலும், இடைவிடாமல் மழை ஒழுகுவதும், இடியும் மின்னலும், ஒலியும் ஒளியுமக அரங்கத்தையே கிடுகிடுக்க வைப்பதுமான தொழில்நுட்பத்தை இத்தனை சீராக இதுவரை எந்த நாடகமும் தந்தது இல்லை.
சுவையான, கெட்டிக்காரத்தனமான காம்பியர் போல கதையை நடத்திச் செல்லும் காத்தாடி ராமமூர்த்திக்கு ஸ்பெஷல் பாராட்டு.  ஆஸ்துமா நோயாளியான டி.டி. சுந்தர்ராஜன், குறும்புக்கார இளைஞனாக கெள்சிக் ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.
இழுத்துக் கட்டப்பட்ட ஸ்வரக் கம்பியை மீட்டுவது போல, தொட்ட இடம் எல்லாம் தொடர் சஸ்பென்ஸ்.  ஒரு சாதுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாலாஜி.  கதையையும் உயிரோட்டமாக உள்ளே சஞ்சரிக்க வைத்த இயக்குநர் கே. விவேக்சங்கருக்கு வாழ்த்துக்கள்.  தனுஷ்கோடியில் இடி மழையுடன் கடல் பொங்கி வந்து கதவைத் தட்டுவதை கண் முன்னே காட்டிய ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ பாலச்சந்தர் கவனிக்கப்பட வேண்டியவர்.
அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் தாங்கள் நனைந்துவிட்டோமோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் வெற்றி

No comments: