Showing posts with label காத்தாடி ராமமூர்த்தி - டி வி ஆர். Show all posts
Showing posts with label காத்தாடி ராமமூர்த்தி - டி வி ஆர். Show all posts

Wednesday, October 24, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி 3)



காத்தாடியின் குழுவில் அவருடன் நடித்து வந்த, T D சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ராமபத்ரன், மணக்கால் மணி, சுந்தரராஜன்(ரெயில்வேஸ்), பம்மல் பாச்சா, மேகலா, ஸ்ரீ லலிதா, எஸ் என் பார்வதி என அனைவரும் மிகவும் திறமைசாலிகளாய் திகழ்ந்தனர்

பின்னர்

எஸ்.லட்சுமி நாராயணன் . சென்னை டெலிஃபோன்சில் அதிகாரியாய் பணிபுரிந்து வருபவர்.

அவர், காத்தாடிக்கு  நாடகங்கள் எழுத ஆரம்பித்தார் எஸ் எல் நாணு என்ற பெயரில்..

அவரின் சில நாடகங்கள்..

"நீங்க யார் பக்கம்" 'அப்பா..அப்பப்பா', சூப்பர் குடும்பம், ஐக்கிய முன்னணி, பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு, நினச்சது ஒன்னு,  நீயா நானா,வீடு வரை உறவு ,நன்றி மீண்டும் வாங்க,ஏ டி எம்.,ஜுகல் பந்தி ஆகியவை அவற்றில் சில

நாணுவும் உடன் நடித்தார்.அவரைத் தவிர்த்து எஸ்பி ஐ முரளி, ஸ்ரீனிவாசன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இன்று காத்தடியுடன் நடித்து வருபவர்கள்

இவரது நாடகக்குழு 53 ஆண்டுகளில் 47க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.கிட்டத்தட்ட 7500 முறை இவரது நாடகங்கள் நடந்துள்ளன.

கலைமாமணி, நாடகக் கலா சிரோன்மணி,நாடக சூடாமணி, நாடக ரத்னம் ஆகியவை இவர் வாங்கியுள்ள கணக்கில்லா விருதுகளில் சிலவாகும்

சங்கீத நாடக அகடெமி இவருக்கு சமீபத்தில் அம்ரித் விருது வழ்னகியுள்ளது 

மேடை நாடகங்களைத் தவிர்த்து இதுவரை காத்தாடி 70படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நட்புக்கு முதலிடம் கொடுப்பவர் காத்தாடி.அதற்கான ஒரே ஒரு உதாரணம்..

இவருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவினை ஆரம்பித்த இவர் நண்பர் Bobby  மறைந்தாலும், இன்னமும் அறிவிப்புகளில் நாடகத் தயாரிப்பாளர்கள் பெயர் சொல்லும் போது அவரையும் சேர்த்தே சொல்லுவார்

தன் குழுவினைத் தவிர பிறக் குழுவினருக்கும் அவ்வப்போது ஆபத்பாந்தவனாய் நடித்து உதவுவார் காத்தாடி.

ஸ்ரத்தா குழுவினருடன் இவர் இணைந்துள்ளார்.அந்த நாடகங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார்.

ராதுவின், கல்யாணத்தில் கலாட்டா நாடகத்திலும் நடித்துக் கொடுத்துள்ளார்

சமீபத்தில் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் , தன் தந்தை பெயரில் கோமல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கி, பிரபல் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மேடையேற்றினார்

அவற்றில் ஒன்று தி ஜானகிராமனின் "விளையாட்டு பொம்மைகள்" சிறுகதை.அதில் காத்தாடி நடித்துக் கொடுத்தார்.

இமாலய நடிகரான அவரின் நடிப்பு இந்நாடகத்தில் சிகரத்தைத் தொட்டது எனலாம்.

நகைச்சுவை நடிகன் ஒருவனால் எந்த பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என நான் அடிக்கடி என் குழுவினருக்குக் கூறுவேன்.

அது, எந்த அளவிற்கு உண்மை என்பது இந்நாடகத்தில் காத்தாடியின் நடிப்பைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

காத்தாடி மேன் மேலும் பறந்திட நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக

(அடுத்த பகுதி..அடுத்தவீட்டு இரண்டாம் ஜன்னல் பார்வை) 

Tuesday, October 23, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி -2)



(காத்தாடி ராமமூர்த்தி...தொடர்ச்சி)

1965ஆம் ஆண்டில் ஒருநாள், நண்பர்கள் சிவாஜி சதுர்வேதி,T D சுந்தரராஜன்,Bobby ரகுநாதன் ஆகியோருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினைத் தொடங்கினார் காத்தாடி.

தி ஹிந்து பத்திரிகையில் வேலை செய்து வந்த கோதண்டராமன் என்பவர் நண்பர் ஒருவர் மூலம் காத்தாடிக்கு அறிமுகமானார்.

அந்த கோதண்டராமன்தான் , அனைவராலும் பின்னாளில் அறியப்பட்ட situation comedy மன்னன் கே கே ராமன் ஆவார்.அவர் ஸ்டேஜ் கிரியேஷன்ஸிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.அந்நாடகம் "இணையில்லா ஜோடிகள்" (Matchless Matches)

மாபெரும் வெற்றி நாடகமாக அது அமைய, பின்னர் அவர் எழுத்தில், "Good bye to Love", Runaway Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ராமமூர்த்தி அரங்கேற்றினார்.

இந்நிலையில் விசுவின் நட்பு கிடைக்க..காத்தாடியின் குழுவிற்கு விசு நாடகங்கள் எழுதினார்.முதல் நாடகம் "டௌரி கல்யாண வைபோகமே".விசு இயக்கிய முதல் நாடகமும் இதுதான்.அடுத்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவர் சாம்ராஜ்ஜியம்தான்.

:சிரித்துக் கொண்டே அழுகின்றேன்", சத்தியவான் சாவித்திரி", "பட்டினப்பிரவேசம்" ஆகியவை சில முக்கியமான நாடகங்களாகும்.

பட்டினப்பிரவேசம் நாடகத்தை இயக்குநர் கே பாலசந்தர் பலமுறை சென்று பார்த்தார்.பின்னர் அதை திரைப்படமாக்க எண்ணினார்.

இந்நாடகத்தில் தான் டில்லி கணேசன் நாடக உலகிற்கு அறிமுகமானார்.அவர் மேடையில் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் அவருக்கு அளித்தார் கேபி.தவிர்த்து அந்நாடகத்தில் இன்னசெண்ட் தண்டபாணியாக நடித்த காத்தாடியும் திரையில் அவ்வேடத்தை ஏற்றார்

பின்னர் காத்தாடி குழுவினருக்காக கிரேசி மோகன் அய்யா அம்மா அம்மம்மா என்ற நாடகத்தை எழுதினார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த நாடக உலக ஜாம்பவான்களில் ஒருவரான நடராஜன் , காத்தாடியை தொலைபேசியில் அழைத்தார்.

இந்த நடராஜன் , தேவரின் "துப்பறியும் சாம்பு" கதையை நாடகமாக்கி புகழ் பெற்றவர்.மக்களால் "சாம்பு" நடராஜ ஐயர் என ஆழைக்கப்பட்டவர்.அவர் தொலைபேசியில் காத்தாடியிடம் "சாம்பு நாடகத்தை மீண்டும் நடத்த இருப்பதாகவும், மூப்பின் காரணமாக தான் நடிக்க முடியாது என்றும், சாம்பு வேடத்தை காத்தாடி நடத்தித் தர வேண்டும்" என்றும் கூறினார்.

காத்தாடியும் சம்மதித்தார்.நாடகம் நடந்து முடிந்த அன்று நடராஜ ஐயர், காத்தாடியை அன்புடன் அணைத்து, "என்னை விட அருமையாக அப்பாத்திரத்தில் நடித்தாய்" என பாராட்டினார்

பின்னர் அந்த சாம்புவின் மைந்தனாக "Son of Sambu"என்ற நாடகத்திலும் காத்தாடி நடித்து பாராட்டினைப் பெற்றார்.

(ஜன்னல் பார்வை 1 மேலும் தொடரும்)

Monday, October 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 1

(நம் வீட்டில் ஆயிரம் குற்றம் ,குறைகளை வைத்துக் கொண்டு..அடுத்தவீட்டு ஜன்னல் வழியே..அந்த வீட்டு வம்புகளை அறியும் ஆவல், சாதாரணமாக அனைவருக்கும் உண்டு.ஆனால்..இத்தொடர்..மற்ற நாடகக் குழுக்களின் சாத்னையாள நண்பர்களைக் குறித்த விவரங்களை அளிப்பது.பல இளைஞர்களுக்கு இது பலனளிக்கும் என்று எண்ணுகின்றேன்)




காத்தாடி ராமமூர்த்தி....

1953ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பாணாத்துறை உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பை முடித்த சுந்தரேச ராமமூர்த்தி, மேலே படிக்க சென்னை வந்தார்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார்..

கல்லூரியில், முதலாம் ஆண்டு முடிவில் ஆண்டு விழாவில், அமரர் தேவனின் "கோமதியின் காதலன்" நாடகம் நடந்தது.அதில் வரும் வில்லன் பக்கிரிக்கு அடியாள் வேடத்தில் நடித்தார் ராமமூர்த்தி.

அவருடன், கல்லூரித் தோழர்களான ஜெயஷங்கர், அம்பி (சோ அவர்களின் சகோதரர்) ஆகியோரும் அந்நாடகத்தில் நடித்தனர்


பின் ஒருநாள் ராமமூர்த்தி ஆர் ஆர் சபாவின் செயலாளராய் இருந்த நடேச ஐயரை சந்தித்தார்.அப்போது, பிரபல எழுத்தாளர் பகீரதன் தனது "தேன்மொழியாள்" நாவலைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.பகீரதன்.

உடனே, நடேச ஐயர், ராமமூர்த்தியிடம் "தேன்மொழியாள்' நாவலை நாடகம் ஆக்க முடியுமா? என்று பார்" என்றார்.

ராமமூர்த்தியும், அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் . குழந்தைகள் நிகழ்ச்சிகள் தயாரித்து, அனைவராலும் "ரேடியோ அண்ணா" என்று அழைக்கப்பட்ட கூத்தபிரானிடம் (இயற்பெயர் நடராஜன்) இதைச் சொல்ல..அவர் இயக்கத்தில் தேன்மொழியாள் மேடை நாடகமாக்கப்பட்டது.

"சோ" இந்நாடகம் மூலமே மேடைக்கு அறிமுகமானார்.தவிர்த்து இந்நாடகத்தில் அவரின் பாத்திரத்திற்குப் பெயர்"சோ'. அதுவே பின்னாளில் அவரின் பெயராகவும் ஆனது

ராமமூர்த்தி, இந்நாடகத்தில் பண்ணையாருக்கு உதவியாளராக நடித்தார்

1959ல் சோவின் "If I Get it"( என்னிடம் கிடைத்தால்) என்ற நாடகம் மேடையேறியது

அதில் வந்த மூன்று பாத்திரங்கள்

இடும்பன் என்ற பத்திரிகை ஆசிரியர்
ஆட்டாம்பாம் என்ற உதவி ஆசிரியர்
கார்ட்டூனிஸ்ட் காத்தாடி

இதில் கார்ட்டூனிஸ்ட் காத்தாடி பாத்திரத்தில் ராமமூர்த்தி நடித்தார்.

இந்நாடகத்திற்குப் பின்னர் அவர் "காத்தாடி"ராமமூர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பின் சம்பவாமியுகே யுகே நாடகத்தில் காசி என்ற பாத்திரத்தில் நடித்தார்

(ஜன்னலின் முதல் பார்வை தொடரும்)