Showing posts with label தமிழ் இலக்கியம்- TVR. Show all posts
Showing posts with label தமிழ் இலக்கியம்- TVR. Show all posts

Sunday, November 29, 2015

பயனில சொல்பவன்



அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Monday, December 22, 2014

வறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)


சனிப் பெயர்ச்சி.
உன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.
அவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.
இவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..
சனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.
ஆனால் இப்பதிவு அதுஅல்ல.

வறுமைக் குறித்து.

ஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.

அப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.

இராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.

"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியார் மெய்நோக அடிமை சாக

,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"


அவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உதவிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால் அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.

(இப்படியெல்லாம் நடக்குமா? என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)

Wednesday, July 2, 2014

குறுந்தொகை -29



அவன் காதலிக்கிறான். தன் காதலியை வழக்கம் போல இரவில் சந்திக்க விரும்புவதாகக் கூறி..அச் செய்தியை அவளது சிநேகிதி மூலம் காதலியிடம் சொல்லச் சொல்கிறான்.அவளோ, அதெல்லாம் முடியாது என மறுக்கிறாள்.இவனோ..நம் ஆசையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே...என் காதலுக்கு ஆதரவானவர் யாரும் இல்லையே என மன வேதனைப்படுகிறான்.இதையே சொல்கிறது கீழே சொல்லியுள்ள பாடல்..

காதலியை இரவு சந்திக்க விரும்புவதாக வரச்சொல்லச் சொல்லி தோழியிடம் சொல்கிறான்.அவளோ மறுக்கிறாள்.அதனால்...தலைவன், தன் நெஞ்சிற்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறானாம்.

 குறிஞ்சிதிணை  - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
 
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
 
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
 
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
 
மகவுடை மந்தி போல
 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

                       - ஔவையார்

உரை -

தன் விருப்பப்படி இரவில் வராது மறுப்பது, பெய்யும் மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தை போல. உள்ளத்தால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தாமல் நின்று, பெருதற்கரியதை பெற விரும்புகிறாய்.உயர்ந்த மரக்கிளையில் பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல உன் கருத்தை ஏற்று,உன் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரைப் பெறின் உன் போராட்டமும் நன்றாயும், பெருமையாயும் அமையும்.
 (என தன் நெஞ்சிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான்)

(தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி இப்பாடல்)  

பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல  ,பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல....உவமைகளைப் பாருங்கள்..

Tuesday, July 1, 2014

.குறுந்தொகை - 28



நமக்கு ஒரு கவலை எனில் அதை பங்கு பெற யாரும் வரமாட்டார்.ஆனால், நம் மனமோ...ஆறுதலை எதிர்ப்பார்க்கும்.இன்னும் சிலர் உள்ளனர்...நாம் வேதனைப் பட்டாலும் பரவாயில்லை, நமக்கு வேண்டாதவன் இரட்டிப்பு வேதனைப் பட வேண்டும் என நினைப்பர்.

அதாவது எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என நினைப்பர்

தனக்குத் தூக்கம் வராமல் இருந்தால், பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் பார்த்து, "எப்படி தூங்குகிறான் பார்" என பொறாமைப் படுவார்கள்.

இந்த பாடலின் தலைவியும், கிட்டத்தட்ட அதே நிலையில் இருக்கிறாள்.தலைவனைப் பிரிந்து, அவன் வராததை எண்ணி தூக்கம் இன்றி இருக்கிறாள். ஆனால், ஊர் உறங்குகிறதே என கோபப்படுகிறாளாம்.

இனி பாடல்-

பாலை திணை -  பாடலாசிரியர் ஔவையார்


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
 
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
 
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
 
அலமர லசைவளி யலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

                       -ஔவையார்

உரை-

சுழன்று அசைந்து வரும் தென்றல் காற்று வருத்தாது நிற்க,, என் தலைவனை நான் பிரிந்து வருந்துவதை உணராமல், தூங்கும் இந்த் ஊரில் உள்ளோரை நான்(சுவர் முதலியவற்றில்) முட்டுவேனா?(ஏதேனும் கருவி கொண்டு) தாக்குவேனா? ஓலமிட்டு கூப்பிடுவேனா? என்ன செய்வேன் என தெரியவில்லையே!