Wednesday, July 2, 2014

குறுந்தொகை -29



அவன் காதலிக்கிறான். தன் காதலியை வழக்கம் போல இரவில் சந்திக்க விரும்புவதாகக் கூறி..அச் செய்தியை அவளது சிநேகிதி மூலம் காதலியிடம் சொல்லச் சொல்கிறான்.அவளோ, அதெல்லாம் முடியாது என மறுக்கிறாள்.இவனோ..நம் ஆசையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே...என் காதலுக்கு ஆதரவானவர் யாரும் இல்லையே என மன வேதனைப்படுகிறான்.இதையே சொல்கிறது கீழே சொல்லியுள்ள பாடல்..

காதலியை இரவு சந்திக்க விரும்புவதாக வரச்சொல்லச் சொல்லி தோழியிடம் சொல்கிறான்.அவளோ மறுக்கிறாள்.அதனால்...தலைவன், தன் நெஞ்சிற்கே ஆறுதல் சொல்லிக் கொள்கிறானாம்.

 குறிஞ்சிதிணை  - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-

 
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
 
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
 
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
 
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
 
மகவுடை மந்தி போல
 
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

                       - ஔவையார்

உரை -

தன் விருப்பப்படி இரவில் வராது மறுப்பது, பெய்யும் மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தை போல. உள்ளத்தால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தாமல் நின்று, பெருதற்கரியதை பெற விரும்புகிறாய்.உயர்ந்த மரக்கிளையில் பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல உன் கருத்தை ஏற்று,உன் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரைப் பெறின் உன் போராட்டமும் நன்றாயும், பெருமையாயும் அமையும்.
 (என தன் நெஞ்சிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான்)

(தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி இப்பாடல்)  

பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல  ,பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல....உவமைகளைப் பாருங்கள்..

No comments: