Wednesday, November 28, 2012

"மின்சாரத் தாக்குதல்"



தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,

(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?

நன்றி- ஆனந்தவிகடன்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேடிக் கண்டுபிடித்து பதிவைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

இனி வாரம் மின்சாரம்-இருமுறை தான் என்று நல்ல தகவல்...tm2

Kathiravan Rathinavel said...

அண்ணே நான் மேட்டூர் தான், சுத்தமா அனைல தண்ணிர் குறைஞ்சு அடில இருந்த நந்தி சிலைலாம் வெளிய தெரிய ஆரம்பிச்சுருச்சு, மழையே இல்லை, சேலம் மாவட்டம் முழுக்க பெரிய தண்ணீர் பிரச்சனை வந்துரும்னு பயந்துகிட்டு இருக்கோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kathir rath