தலைவி கூற்று
(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்!” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் இளவேட்டனார்
இனி பாடல்-
நுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்
தின்ன ளாகுத னும்மி னாகுமெனச்
சொல்லி னெவனாந் தோழி பல்வரிப்
பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக்
கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்
கன்மிசைக் கவியு நாடற்கென்
நன்மா மேனி யழிபடர் நிலையே.
-இளவேட்டனார்.)
உரை-
பல பத்திக்கீற்றுக்களையுடைய பாம்பினது, படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கீழ் காற்றால் வீழ்த்தப்பட்ட, ஒள்ளிய செவ்விய காந்தள் மலர், பாறையின்மேல், கவிந்து கிடக்கும், நாட்டையுடையதலைவனுக்கு, எனது நல்ல மாமையையுடைய மேனியினது, மிக்க துயரை உடைய நிலையை, நெற்றி பசலைபரந்து, தேமல் ஒளியிழந்து, நெடிய மெல்லிய பருத்த தோள்கள்,மெலிந்து, வளைகள் நெகிழப்பெற்று, இத்தகைய வேறுபாட்டையுடையளாகுதல், உம்மால் ஆகியதென,விளங்கச் சொன்னால் என்ன குற்றம் உளதாகும்?
(கருத்து) தலைவன் இராவந் தொழுகுவதனால் நான் வேறுபட்டமையை அவனுக்கு நீ அறிவிப்பாயாக.
(“இரவிலே தலைவன் வந்து அளவளாவும் பொழுதுஅதனால் மனமகிழ்ந்து இருத்தற்கு மாறாக நீ இங்ஙனம் வேறுபட்டாயே!”என்ற தோழியை நோக்கி, “இங்ஙனம் என்னிடம் கூறுவதினும் என்நிலையைத் தலைவனிடம் கூறுதல் நலம்” என்று தலைவி கூறினாள்.)
No comments:
Post a Comment