தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட பிரிந்த தலைவன் வராததால்,தலைவி தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று கூறியது.)
குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பா லார மாந்திப்
பெருவரை நீழ லுகளு நாடன்
கல்லினும் வலியன் றோழி
வலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே.
-கபிலர்.
உரை-
செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய, எண் கால் வருடையினது குட்டி, தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை, வயிறு நிறைய உண்டு, பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில், துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்; கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்;என் நெஞ்சு , அவன் வன்மையையுடையா னென்று கருதாமல், அவன் திறத்துமெலிவை அடையும்.
(கருத்து) தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.
(வி-ரை.) வரை பொருளுக்காகப் பிரிந்த தலைமகன் நீட்டித்தானாக,தலைவி அன்பு மிகுதியினால் ஆற்றாளாயினாள்; அது கண்ட தோழி,அவளை ஆற்றுவிக்க எண்ணி, “தலைவன் தான் நினைந்து சென்றபொருளைப் பெற்றிலன் போலும்! உரிய காலத்தே அதனைப் பெற்றுவருதற்குரிய வன்மையிலன் போலும்!” என்று தலைவனுக்கு இழிபு தோன்றக் கூறினாள். அதுகேட்ட தலைவி, தலைவனைக் குறைகூறுவதைக் கேட்கப் பொறாத கற்புடையவளாதலின், “அவன் வலியன்;தான் நினைந்த பொருள் பெற்று மீள்வன். என் நெஞ்சு அவன் வன்மையை நினையாது அறியாமையால் வருந்துகின்றது. என் ஆற்றாமைக்குக் காரணம் தலைவன் செயலன்று; எனது நெஞ்சின் அறியாமையே” என்று தலைவன் திறத்திற் குற்றம் சாராதவாறு மொழிந்தாள்.
(வருடை - எட்டுக் காலையுடையது ஒரு விலங்கு;இதற்கு முதுகிற் கால்கள் இருக்கும் என்பர்; )
No comments:
Post a Comment