Thursday, April 9, 2015

குறுந்தொகை-209



பாலை திணை-பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-

அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறு நடை பல உள்ளலமே நெறி முதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே.

குறு நடையுடன் நடக்கும்  பெண்ணே!  வலுவான புலிக்குட்டிகள், பாதையில் செல்வோர்க்கு உதவும்படி, மரத்திலிருந்து உதிரும், அழகிய பசுமையான நெல்லிக் கனிகளை உண்ணும் பாதையில் நான் வரும்பொழுது, பலவற்றைப் பற்றி நான் எண்ணவில்லை.  வளைந்த கிளைகளையுடைய வெட்சி செடிகளின் அரும்பு அவிழ்ந்து மலரும் பொழுது உள்ள நறுமணத்தை உடைய கருமையான அழகிய கூந்தலை உடைய இளம் பெண்ணின் நட்பைப் பற்றி மட்டுமே நினைத்தேன்.

No comments: