Thursday, March 22, 2018


கொஞ்சி விளையாடும் தமிழ்
-------------------------------------------------
நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...
வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.
மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்
முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)
இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...
என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.
மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.
இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.
பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு பக கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.
அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..
யானைத் தந்தம் போல
பிறை நிலா
வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா
அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா
இப்படி சொன்னதுடன் நிற்காவில்லை புத்துக்கவிதைகள்
ஒரு கவிஞர் சொல்கிறார்..
பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..
பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
-என்கிறார்..
யார் நிலை என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..
அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்

No comments: