அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.
பாடல்
கரிக்காய் பொரித்தாள்கன்னிக்காயைத் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப்பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்டலாக்கினா ளத்தைமகள்
உப்புக்காண் சீசீ யுமி. (51)
கரிக்காய் பொரித்தாள் | காயைப் பொறித்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | காயைத் தீயிலிட்டு வாட்டினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் | காயைப் பச்சடி பண்ணினாள்
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள் | காயை நெய்யிலிட்டுத் துவட்டினாள்
அத்தைமகள் | அவள் யாருமன்று, என் அத்தைமகள்
உப்புக்காண் சீ சீ யுமி | அத்தனையிலும் உப்பு. சீ சீ உமிழ்ந்துவிடு.
அகப்பொருள்
உடலுறவுப் பொருள்
கரிக்காய் பொரித்தாள் | கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் | அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்| உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
அத்தைமகள் | அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
உப்புக்காண் சீ சீ யுமி | இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. அவளும் நானும் தழுவி எங்கள் உடம்பில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்றில் ஒன்று உமிழ்ந்துகொள்வதற்காக.
No comments:
Post a Comment