Wednesday, May 20, 2020

நான் அறிந்த கோமல் - 2



கோமல் எளியவர் என்று சொன்னேன் அல்லவா?

கதர் வேட்டி, கதை ஜிப்பா வையே தரித்து வந்த கோமலிடம் வாகனங்கள் ஏதும் இல்லை.

இன்னமும் சொல்ல வேண்டுமானால்..அவர் செல்லும் வாகனம் எது தெரியுமா? ஆட்டோகூட இல்லை.சைக்கிள் ரிக்க்ஷா மட்டுமே.

இது குறித்து ஒருமுறை கோமலிடம் கேட்டேன், "ஏன் சார்..நீங்க ஒரு பாபுலர் பெர்சன்..இப்படி ரிக்க்ஷாவுல நீங்க வந்தா நல்லாவயிருக்கு?"
அதற்கு கோமல் பதில் என்ன தெரியுமா? "பாபுலர்னா ரிக்க்ஷாவுல வரக்கூடாதா என்ன.மக்களை நம்பிதானே உடலால உழைக்கிற அவன் பொழப்பு ஓடுது. அவனை வாழவைக்கற அந்தத் தொழிலும் தெய்வம்தானே.அதனால அவன் ரிக் ஷாவுல நம்ம போல ஆட்கள் வந்தா அவன் பொழப்பும் கஷ்டமில்லாமல் இருக்கும் இல்லையா?" என்றார்..

பொதுவுடமை சிந்தனைவாதி என்பதற்கு இதைத்தவிர வேறு என்ன வேண்டும்.

அவர் போஸ்டல் காலனியில் இருந்த வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கின்றேன்.அவர் கதை எழுத அமரும் நாற்காலி எது தெரியுமா? தரைதான். தரையில் அமர்ந்து, தனக்கு முன்னால் ஒரு சிறு கணக்குப் பிள்ளை ஸ்டூலை வைத்துக் கொண்டு..அதில் ஒரு பேடில் வெள்லத்தாள்களுடன் அமர்ந்து எழுத ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாது எழுதிக் கொண்டே இருப்பார்.

 அவர் வலியவர் என்றேன் அல்லவா?

நான் சொன்னது உடல் வலிமை அல்ல..மன வலிமை..திடமான மனம் கொண்டவர் அவர்.

சரி,அவரது வசன வலிமையைப் பார்ப்போம்.அவர் வசனங்களின்
 கூர்மை தீப்பொறி போன்றவை..ஆகவேதான் அவர் நாடகங்களை வெளிநாட்டவர்களூம் விரும்பிப் பார்த்தனர் எனலாம்..

என..வெளிநாட்டவரா? என நீங்கள் கேட்கலாம்.ஆம்..அதற்கும் ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும்

ICF அம்பேத்கார் அரங்கில் அவரது "செக்கு மாடுகள்" நாடகம்.அதைப் பார்க்க நான் சென்றிருந்தேன்.என்னைப் பார்த்தவர் உடனே, "நல்லவேளை நீ வந்து இருக்க..இன்னிக்கு ரஷ்யாவுல இருந்து வந்திருக்கிற சிலர் நாடகத்தைப் பார்க்க வர்றாங்க..நீ என்ன செய்யற..அவங்கப் பக்கத்துல உட்கார்ந்துண்டு அவங்களுக்கு நாடகத்துல எதாவது புரியலேன்னா எக்ஸ்பிளைன் பண்ணு "என்றார்.

ஆனால்..வந்திருந்தோர் என்னைவிட நாடகத்துடன் ஐக்கியமாகி ரசித்தனர்.

"கோமல்" மற்ற குழுவினரின் நாடகங்களையும் மனதார பாராட்டுவார்.

1981ஆம் ஆண்டு எனது "சௌம்யா"குழு "புதியதோர் உலகம் செய்வோம்"என்ற நாடகத்தை அரங்கேற்றம்  செய்தோம்.அந்நாடகம்அரங்கேறி சில நாட்கள் புதிய தேதிகள் ஏதும் கிடைக்கவில்லை.அப்போது கோமல் சொன்னார்.."நீ ஒரு அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறாய்..இதற்கு உனக்கு தேதியில்லை என்றால்..நீ நாடகங்களே இனிப் போடாதே" என்றார்.

அவர் வாய்முகூர்த்தம்..அடுத்த சில தினங்களில் மடமடவென வாய்ப்புகள் குவிந்தன.

அது கண்டு என்னைவிட மகிழ்ந்தவர் அவர்.

கோமல் மறைந்தபோது..ஒரு இலக்கியவாதியை,இதழாசிரியரை நாடு இழந்திருக்கலாம்..

ஆனால்..என்னைப் போன்றோர் ஈடு செய்யமுடியா ஒரு அருமை நண்பரை இழந்தோம்.

அவர் மறைந்து 25ஆண்டுகள் ஓடிவிட்ட போதும் அவர் நினைவு நம்மை விட்டு ஓடாது தவிக்கிறோமே..அதுவே கோமலின் மாபெரும் வெற்றியாகும்.

No comments: