Sunday, September 27, 2020

"விச்சுளிப் பாய்ச்சல்" - 1 (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)



முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பொன்று சொல்கிறது.

இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில் தோன்றிய யோகா வாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள் ஏராளம்..ஏராளம்...அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயு ஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளை செய்து காட்டி,வியக்க வைத்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.

விச்சுளி...அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்.

வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விச்சுளி என்பது.அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை விச்சுளிபறவை.அதாவது நாமெல்லாம் அறிந்த மீன் குத்திப் பறவையின் பெயர்.சுள் என்றால்..விரைந்து எனப் பொருள்.

கழையாட்டத்தில் ஒரு ஆட்டமாகத் திகழ்வது விச்சுளிப் பாய்ச்சல்.ஓரிடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்ணேறி ஓரிடத்தில் தாவிப் பிடித்து பற்றுவது விச்சுளிப் பாய்ச்சல்.

கழைக்கூத்து என்பது தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து எனும் கலை.பழைய பாரம்பரியம் மிக்க கூத்துகளில் கழைக்கூத்தும் ஒன்று.

வலிமையும்,உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு ,அவற்றிற் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி ஆடவரும், பெண்களும் அதன் மீது நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதேக் கழைக்கூத்தாகும்.

இந்தக் கழைக்கூத்தினுள் "விச்சுளிப் பாய்ச்சல்" இருந்ததாக தனிப்பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது.உயிரைப் பெரிதாக மதிக்காதவர்கள் மட்டுமே நிகழ்த்திபடக் கூடியதாகும்.

கூத்தாடுபவர் கழை மீது ஏறி அதிலிருந்த படியே பல வித்தைகள் செய்து காட்டுவர்.பின் யோகப் பயிற்சியால் மூச்சினை அடக்கித் தம் உடலின் பளுவை கயிற்றின் பளுவிற்கு சமன் செய்து கொண்டு வர வேண்டும்.பின்னர், கயிற்றினின்று மேலே தாவி,பறவை போல சிறகு விரித்து..முப்பது இமைப்பொழுதுகளில் அந்திரத்தில் நிலைத்துக் காட்டிய பின்னர் கணப்பொழுதும் யோசிக்காமல் கயிற்றுக்கு வந்து விட வேண்டும்

இந்த அபாய வித்தையை எந்தக் காரணம் கொண்டும், ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது.மீறிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்பது இவ்வித்தையப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் முதல் எச்சரிக்கையாக இருக்குமாம்.

இந்த எச்சரிக்கையையும் மீறி.பெண் ஒருத்தி..மன்னரின் ஆணையால்..இரண்டாம் முறையாக அந்த வித்தையை நிகழ்த்தி..உயிரினைத் தியாகம் பண்ணிய வரலாறும் தனிப்பாடல் ஒன்றின் மூலம் சொல்லப் படுகிறது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத கலை.இப்படி விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்பதே நமக்கு ஆச்சரியத்தினைத் தருகிறது.

அடுத்தப் பதிவில் அந்தப் பெண்ணினைக் குறித்துப் பார்க்கலாம். 



 

No comments: