Tuesday, September 29, 2020

"விச்சுளிப் பாய்ச்சல் - 3 (ஓருகழைக்கூத்தாடி பெண்ணின் கதை)

 



"விச்சுளிப் பாய்ச்சலா?" அது என்ன வித்தை?" வள்ளல் ஆர்வத்துடன் கேட்டார்.


"சாமி..விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் ஆபத்து நிறைந்த வித்தை.ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள்.அங்கிருந்தபடியே தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.அல்லது யாராவது கையில் ஒரு மோதிரத்தை வைத்திருப்பார்கள்.."


"அப்புறம்.." வள்ளலுக்கு ஆவல் அதிகமானது.


"எறியப்பட்ட காதணி..நிலத்தில் விழு முன்னர்..மின்னலாய்க் கீழே பாய்ந்து..அதை கைக் கொண்டு ஒரு நொடியுள் மீண்டும் மூங்கில் உச்சிக்கு பழையபடி சென்றிருப்பாள்.அல்லது, மோதிரம் வைத்திருப்பவர் கையில் உள்ள மோதிரத்தைப் பறித்து மேலே மீண்டும் சென்றிடுவாள்'


"அதெப்படி சாத்தியம்?"



"உச்சத்தில் ஏறிய பின், ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல லேசாக எடுத்துக் கொள்வாள்"


"ஆச்சர்யம்...கொஞ்சம் ஆபத்தான வித்தைதான்.."வள்ளல் ஒப்புக் கொண்டார்.


'ஆபத்து கொஞ்ச நஞசம் இல்லை சாமி.உயிரையே பறித்து விடும் அபாயம் உண்டு.ஒருமுறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாகச் செய்ய வேண்டும்.ஒருமுறை இப்பாய்ச்சலை செய்து விட்டால் மீண்டும் இந்த வித்தையை ஆறு மாதத்திற்குப் பின்னர்தான் செய்ய வேண்டும்.அப்படியில்லாமல் உடனே செய்யத் துணிந்தால் அந்தக் கணமே மரணம் உண்டாகும்" என்றார் இருளன். 


'இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்கு மட்டுமே இவளைத் தயார் செய்து, வேறொன்றிற்கும் லாயக்கில்லாமல் செய்து விட்டாயா?"


"இல்லை சாமி! இவள் வயது பெண்கள் கற்க முடிந்ததெல்லாம்..இவளும் கற்று வந்திருக்கிறாள்.அதுமட்டுமல்ல..பாக்கள் புனைவதிலும்..முறையாக தமிழாசாங்களிடம் பாடம் பயின்றிருக்கிறாள்"


"ஓஹோ...பாபுனையவும் தெரியுமோ? அதைச் சொல்லு.நீங்கள் அனைவரும் இன்று என் விருந்தினர்.விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள்.நாளைமுதல் காலை வேளைகளில் சிறிது நேரம் இவளின் தமிழைனை ரசிக்கிறேன்"


"சாமி..விச்சுளிப் பாய்ச்சலை எப்போ வைத்துக் கொள்ளலாம்?"


"சொல்கிறேன்.."என்ற வள்ளல்..அன்று முதல் அந்தப் பெண்ணின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துகளிலும் தன்னை மறந்தார்.அந்தப் பெண்ணின் மேல் அவருக்கு அபிமானமும், அளவற்ற வாஞ்சையும் ஏற்பட்டது.அவளைத் தன் மகளைப் போலவே நடத்த முற்பட்டார்.


பின் ஒருநாள்..இருளன் மீண்டும் கேட்டுக் கொண்டதால்  "வருகின்ற வெள்ளிக் கிழமை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.


அன்றே பறை மூலம் ஊர் முழுதும் அறிவித்து..வெள்ளியன்று மக்கள் அந்த வித்தையினைக் காணக் கூடினர். 


இருளன் கணீர்க் குரலில், பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தார்..


"மாபெரும் மக்கள் கூட்டமே..இச்சிறு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து,ஒரு நொடியில் கீழே விழும் தன் காதணியை கைக் கொண்டு மீண்டும் மூங்கில் உச்சிக்கே சென்றிடுவாள்.ஆகவே அனைவரும் அவளதுகவனம் சிதறாமல் இருக்க மௌனமாகவும்அதே நேரத்தில் தக்கையில் வைத்த கண்களைப் போல பாய்ச்சலையும் கண்டு ரசியுங்கள்" என்றார்.

No comments: