Monday, September 28, 2020

விச்சுளிப் பாய்ச்சல் - 2(ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)


 

தொண்டை மண்டலம் 24 கோட்டங்களைக் கொண்டதாகத் திகழ்ந்தது.அதில் ஒன்று புழல் கோட்டம்.அக்கோட்டத்தில் அயின்றை (இன்றைய சென்னையில் அயனாவரம் பகுதி) எனும் சிற்றூரில் வேளாண் குடிப் பிறந்த சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார்.

ஒருநாள் கிட்டத்தட்ட பத்து இருளர்கள் அவரது இல்லத்திற்கு வந்தனர்.

வள்ளலின் கணக்குப் பிள்ளை அவர்களைக் கண்டு, "நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் .

கூட்டத்தில் சற்று வயதான் இருளன், "ஐயா..நாங்க எல்லாம் கழைக் கூத்தாடிங்க.உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்தோமுங்க..ஒருமுறை வள்ளல் ஐயாவைப் பார்த்துட்டுப் போயிடறோம் சாமி"என்றான்.

"ஐயாவை..இந்த நேரத்திலா.."எனத் தயங்கினார் கணக்கு.

ஆனால் அதே நேரம் தந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்ற பெரும் கதவினைத் திறந்து வெளியே வந்தார் சடையநாத வள்ளல்.

கலியுகக் கர்ணனாய், கேட்போருக்கு அள்ளி வழங்கி வருபவர் அவர்.புலவர்களும், கலைஞர்களும் அவரை நாடி வந்து..ஆதரவினைப் பெற்று வந்தனர். 

"யார் இவர்கள்?"என்றவர் முன், அனைவரும் வணங்கி எழுந்தனர்.

மூத்த இருளன் சொன்னார், "அய்யா..நாங்க கழைக் கூத்தாடிங்க.இந்தக் களையின் குறைந்து வரும் சில கரணங்களை என் மகள் மிகவும் அநாசயமா செய்வாள் சாமி.உங்க முன் ஒருமுறை அவ திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கொடுக்கணும்"

அப்போதுதான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த அந்தச்சின்னப் பெண்ணைப் பார்த்தார் வள்ளல்.பதினாறு வயதே நிர்ம்பியவள்கொள்ளை அழகு.மினு மினுக்கும் கருப்பு நிறம்.அடர்ந்த கரு கரு கூந்தல்..காந்தக் கண்கள்..வண்டினம் நம் இனம் சேர்ந்த இருவர் அவள் கண்களில் புகுந்து விட்டனரோ..என எண்ணும் கருவண்டு கண்கள்.நீங்கள் எள்ளுப் பூவினைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில்  அது  இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்..கூர்மையான நாசி.மேல் தோல் பிரிந்தாற் போன்ற நாவல் பழ உதடுகள்.அதனுள் முத்துப் பரல்களா? மாணிக்கப் பரல்களா என வியக்க வைக்கும் வெந்நிற பற்கள்.இவள் கழுத்தினைப் பார்த்த பின்னர்தான் கழுத்திற்கு சங்கு என்ற சொல் வந்திருக்குமோ? என்ற சந்தேகத்தை உருவாக்கும் கழுத்து.தாமரை மொக்கு போன்ற மார்பகங்கள்..மொத்தத்தில்  அழகுச் சிலையாய் இருந்தாள் அவள்.

அந்தப் பெண்ணைப் பார்த்து வள்ளல்,"இந்த சிறு பெண்ணா?.இவளுக்கு என்ன வித்தைத் தெரியும்?"என்றார்.

"கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை சிறுவயதிலேயே இவளுக்குக் கற்பித்திருக்கிறோம் "

"விச்சுளிப் பாய்ச்சலா? அது என்ன வித்தை?"என்றார் வள்லல் ஆர்வத்துடன்.

(தொடரும்)

 

No comments: