Tuesday, October 16, 2012

ஊழலோ..ஊழல்...




பல தியாகங்களைச் செய்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ் என நாம் படித்திருக்கிறோம்..

ஆனால்..நாடு போகும் போக்கைப் பார்த்தால்...ஊழல் கட்சி காங்கிரஸ்..நாட்டு வளங்களை அழித்தது காங்கிரஸ் என அடுத்த தலைமுறையினர் படிக்க வேண்டுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ..கடந்த நான்கு வருட காங்கிரஸ் ஆட்சியைப் பாருங்கள்..

காமென்வெல்த் ஊழல்..கோடிக்கணக்கில்..

2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்..கோடிக்கணக்கில்

நிலக்கரி சுரங்க ஊழல் கோடிக்கணக்கில்

மத்திய அமைச்சர் அறக்கட்டளை ஊழல் 76 லட்சங்கள்..

இவையெல்லாம் வெறும் புகார்கள்தான் என்று கூறினால்..ஆம்..புகார்கள் தான்..ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்..

கண்டிப்பாக பத்திரிகைகள் சொன்ன அளவு கோடிகள் ஊழல் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் ஊழல் நடந்திருப்பது என்னவோ உண்மை..

இதுபற்றி சமீபத்தில் ஒரு மத்திய அமைச்சர் பேசுகையில்...மக்கள் ஃபோஃபர்ஸ் ஊழலை மறந்துவிடவில்லையா...அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்து விடுவார்கள்...எனப் பேசுகிறார்.என்னே..ஒரு பொறுப்பற்ற பேச்சு..

நேற்று ஒரு மைய அமைச்சர் 76 லட்சம் ஒரு மத்திய அமைச்சர் செய்த  ஊழலா..ஜுஜுபி...இந்த  பணம் சர்வசாதாரணம் ஒரு மத்திய அமைச்சருக்கு..கோடிக்கனக்கில் என்றாலும் பரவாயில்லை என்ற பொருள் பட பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் மருமகன் மீது சொல்லப்பட்ட ஊழல் விசாரணை அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..

என்னவோ...மாதவா..நம்ம தலையெழுத்து இவர்களை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என புலம்புவதைத் தவிர சாதாரண குடிமகனால் என்ன செய்ய முடியும்?

வசூல் படங்கள் தோல்வியைத் தழுவுவதேன்?




கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள் வசூலில் வேண்டுமானால் வெற்றி பெறுகின்றன.ஆனால் உண்மையில் அவை தோல்வி படங்களே.

பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகும் போதே 1000 ப்ரிண்டுகளுக்கு மேல் போடப்பட்டு..1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் (குறிப்பாக மல்டிபிளக்ஸ்- டிக்கெட் 120 ரூபாய்) திரையிடப்படுவதால், வெளியான சில நாட்களில், படத்தைப் பற்றிய விமரிசனம் வருவதற்குள் ஓரளவு பணத்தை ஈட்டிவிடுகின்றன.

சமீபத்தில் வெளிவந்த, பில்லா-2, தாண்டவம், சகுனி ஆகியவை சில உதாரணங்கள்.சமீபத்தில் மாற்றானும் இப்பட்டியலில் சேர்ந்து விட்டது.

இதற்குக் காரணங்கள் என்ன?

கதையில் புதுமையாக ஏதும் கிடையாது..

அப்படியே இருக்கும் பட்சத்தில்...அதற்கான காரணம்..வழக்கமான பழிவாங்கல்.

படம் வெளிவருவதற்கு முன் ஏராளமான எதிர்பார்ப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிடுதல்.(படம் வெளிவந்த பின் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்)

அதைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை..எங்கள் குறியே கலெக்க்ஷன்தான் என்றால்...

மன்னித்துக் கொள்ளுங்கள்...

நீங்கள் செய்வதும் விபச்சாரம் தான்.

ஆகவே..தயாரிப்பாளர்களே, நடிகர்களே, இயக்குநர்களே..புதிதாக சிந்தியுங்கள்...

தமிழில் ஏராளமான நாவல்கள் உள்ளன.அவற்றை படியுங்கள்..

எங்கள் வழி இதுதான் என்றால்..மக்கள் EXITஐ காட்டிவிடுவார்கள்..

Monday, October 15, 2012

தயாரிப்பாளரும்...சினிமா கதாசிரியரும்...




தயாரிப்பாளர் - என்ன கதாசிரியரே! நம்ம் படத்திலே கிளைமாக்ஸ் என்ன எழுதியிருக்கீங்க..

கதாசிரியர் _ மூணு நாலு கிளைமாக்ஸ் எழுதியிருக்கேன்..உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வைச்சுக்கலாம்..

            முதல் கிளைமாக்ஸ்..வில்லன் கதாநாயகியை தூக்கிக் கிட்டு கார்ல வேகமா போயிடறான்...கதாநாயகனுக்கோ கார் இல்லை...அதனால தெருவில இருந்த ரோடு            ரோலர்ல அவனை சேஸ் பண்ணி பிடிச்சு..நாயகியைக் காப்பாத்தறான்..

தயாரிப்பாளர் - இது சாதாரணமாய் எல்லாப் படத்திலேயும் வரது தானே..புதுசா..மக்கள் நம்பறாப்போல சொல்லுய்யா..

கதாசிரியர் - .வில்லன் எலிகாப்டர்ல போறான்...கதாநாயகன்...ஏர்போர்ட்ல நுழைஞ்சு...அங்க புறப்படத் தயாராயிருந்த பிளேனை எடுத்துக் கொண்டு எலிகாப்டரை துரத்தறான்.வில்லனோட நடுவானில சண்டை..பிளேன்ல இருந்த பயணிகள் முகத்திலே அதிர்ச்சி...கடைசியிலே எலிகாப்டர்ல இருந்த வில்லனை..பிளேன்லே இருந்து தாவித் தாவிப்போய் அழிக்கிறான்.

தயாரிப்பாளர்- இது  நம்பறமாதிரி  இருக்கு..வேற ஏதாவது வைச்சிருக்கியா..

கதாசிரியர்- வில்லன் கதாநாயகனை மின்சார நாற்காலில கட்டிப்போட்டுட்டு...மின்சாரத்தை ஆன் பண்ணிட்டு ஓடிப்போயிடறான்...கதாநாயகன் செத்துட்டதா...மக்களை நம்ப வைக்கிறோம்.ஆனால் அவன் சாகலை.. அந்தக் காட்சியை மக்கள் நம்பவைக்க...தமிழக மின்சார வாரியத்தோட போர்டைக் காட்டறோம்.

தயாரிப்பாளர்- அடடா..அற்புதம்..பிரமாதம்..நம்பறமாதிரியான கிளைமாக்ஸ்...இதையே வச்சுப்போம்.

Saturday, October 13, 2012

அபி அப்பாவும்..காவல்துறையும்...




அபி அப்பா..சென்னையில் அவரது செல் ஃபோனை தவறவிட்டதாகவும்..அதை காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும்..காவல்துறை அக்கறையுடன் கண்டுபிடித்துக் கொடுத்ததாக ஒரு பதிவிட்டு..அவர்களை நண்பர்கள்தான் என வாழ்த்தியிருந்தார்.

காவல்துறை இன்று முதல்வர் ஜெ யிடம் உள்ளது.அத்துறை சிறப்பாக செயல்பட்டதாக அபியப்பா எழுதியிருந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

அபி அப்பா..ஒரு திமுக என்பது காவல்துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படி தெரிந்திருந்தால்..அவர் செல்ஃபோனும் கிடைத்திருக்காது...அவரையும் ஏதேனும் அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் (அபி அப்பா ஒல்லியாக இருந்தாலும்) கைது செய்திருப்பார்கள்.

ஆகவே..அவர் அவசரப்பட்டு காவல்துறையை அணுகியது அவரது அசட்டுத் துணிச்சலையேக் காட்டுகிறது என்கிறார் ஒரு திமுக முக்கியப் புள்ளி.

தவிர்த்து..காவல்துறையை அபி அப்பா பாராட்டிவிட்டதால் கலைஞர் சற்றே வருத்தத்தில் உள்ளதாக நம்பத் தகுந்த வட்டார செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

தமிழகத்தை சீனா கைப்பற்றும்- சிங்கள தலைவர்




தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.
இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.

தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.

(தகவல் - தட்ஸ்தமிழ்)




Friday, October 12, 2012

மாற்றான்..(ஒரு மாற்றான விமரிசனம்)




விமல்,அகில் என ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் .இந்த இரட்டை குழந்தைகளுக்கு எல்லா உறுப்புகளும் வேறு வேறாக இருந்தாலும்..இதயம் மட்டும் ஒன்றுதான்.இதயம் விமலின் உடலில் உள்ளதாம்.விமல் வல்லவன், நல்லவன்.அகில் நேர்மாறானவன்.

இந்நிலையில் இவர்கள் தந்தையின் அலுவலகத்தில்..குழந்தைகள் பானத்தில் கலக்கப்படும் ..கெடுதலான ஊக்க மருந்து பற்றி விமல் கண்டுபிடிக்க..அவன் கொல்லப்படுகிறான்.விமலின் உடலில் இருந்த இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது.

விமலின் இதயம் கிடைத்ததுமே அகில் குணம் மாறி நல்லவனாக ஆகிறான்.(மனிதர்களில் நல்லவன்..கெட்டவன் ஆகியவற்றை தீர்மானிப்பது இதயமோ..?!)

பின் அகில் தன் காதலியுடன் வெளிநாடு சென்று...ஊக்க மருந்து விஷயங்களை கண்டுபிடித்து...நடந்த தவறுகளை திருத்துகிறான்..

இப்படியாக போகிறது கதை.ரொம்பவும் மெனக்கட வேண்டாத கதை.

முழுக்க ,முழுக்க படத்தை சூர்யா தன் தோள்களில் சுமக்கிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.

கிராஃபிக்ஸ் வேலைகள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காதலியாக வரும் காஜல் 'பளீச்" என அனைவரையும் வசீகரிக்கிறார்.

பாடல்கள் சுமார் ரகம் தான்.

மொத்ததில்..சாதாரணமாக படம் பார்க்கும் அனைவரும் ஒரு முறை பார்க்கலாம்.சூர்யா ரசிகர்கள் பலமுறை பார்ப்பர்.வசூலில் படம் வெற்றி பெறும்.

(டிஸ்கி- கண்ணதாசன் நடத்தி வந்த பத்திரிகையில் ராசிபலன் எழுதுபவர் அந்த வாரம் எழுதவில்லையாம்.உடனே கண்ணதாசன் முந்தைய வார இதழ்கள் சிலவற்றை எடுத்து..ராசி பலன்களை அதில் இருந்தபடி ராசிகளுக்கு மாற்றி மாற்றி எழுதி வெளியிட்டாராம்.
அப்படியே..நாமும்..படம் பார்க்காமல்..சில விமரிசனங்களைப் படித்து விமரிசனம் எழுதினால் என்ன? எனத் தோன்றியதன் விளைவே இவ்விமரிசனம்)

Thursday, October 11, 2012

கொடிது..கொடிது..ஃபேஸ்புக் கொடிது...




இளமையில் வறுமை கொடிது... என்பார்கள்..

ஆனால்..இப்போது எல்லாவற்றையும் விட ஃபேஸ்புக் பழக்கம் கொடிது என ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறதாம்.
 
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்ததாம்.
.
ஆன்லைன் மூலமாக நடந்த இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனராம்.. அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம்.

செக்ஸ், சிகரெட்டை விட பேஸ்புக்கும், டிவிட்டரும்தான் அனைவரையும் அதிகம் தூண்டுகிறதாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். மேலும் ஒரு நாளைக்கு சராசரி 14 மணி நேரத்தை இதற்காக செலவிடுகிறார்களாம்.

இன்னும் படுக்கை அறையில்  கூட பேஸ்புக் அல்லது டிவிட்டர் பற்றி நினைக்கிறார்களாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செக்ஸ், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்துத்
 தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

Wednesday, October 10, 2012

புற்றுநோய்... பாலசந்தர் மற்றும் விகடன்..




தமிழ் சினிமாக்களில் ஒரு கட்டத்தில்..கதாநாயகன் மீதோ, நாயகி மீதோ இரக்கம் வரவேண்டுமெனில் அவர்களுக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டு..இறுதியில் அவர்களை சாகடித்துவிடுவதுண்டு.
அதிகம் இப்படி ஆரம்ப காலங்களில் பாலசந்தர் படங்கள் இருந்ததுண்டு.
அவர் கதை,வசனத்தில் வந்த நீலவானம் பட நாயகிக்கு கேன்சர்..அப்படத்திற்கு விளம்பரமும்..."ஆறில் சாகலாம்..அறியாத வயசு..அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு..இருபதில் சாவது..?' என்று இருந்தது.
அடுத்து அவரது  நீர்க்குமிழி நாடகத்திலும்/படத்திலும் நாகேஷ் பாத்திரம்..கேன்சரில் மடியும்.
அதே போன்று சிவசங்கரியின் நண்டு படமும்..
அக்காலகட்டத்தில்..பாலசந்தர் படம் ஒன்றை விமரிசித்த குமுதம்..இனி இவர் 'பு.பாலசந்தர்' என்றது.
அதே போன்று..விகடனும் ..இனி கேன்சர் பற்றி  கதைகள் இனி விகடனில் வராது என அறிவித்திருந்தது.(இப்போது விகடன் டெலிவிஸ்டாசின் ஒரு மெகாசீரியலில் ஒரு பாத்திரம் புற்றுநோயால் தவிக்கிறது..தனி விஷயம்)
இப்படி புற்றுநோய் என்றாலே..மரணம்தான் என்பது எழுதப்படாத விதியாக உருவாக்கப்பட்டது.
ஏன்..சிறுநீரகம்..சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் இல்லையா?
ரத்த அழுத்தத்தால்..மாரடைப்பு ஏற்பட்டு இறப்பதில்லையா?
எந்த வியாதி மனிதர்களுக்கு வந்தாலும்..ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணமாகிவிடும்..புற்றுநோயும் இதற்கு விலக்கல்ல.
ஆகவே..இன்று பல விஷயங்கள் இணைய தளம் மூலமும், அனுபவத்திலும், படிப்பிலும் அறிந்துள்ள நாம்..நமக்கும்..நம்மை நெருங்கியவர்களுக்கும் வரும் நோயின் அறிகுறியை சில முன்னறிவிப்புகளிலேயே அறிந்து விடலாம்..உடனே சரியான சிகிச்சைக்கும் சென்றிடலாம்.எப்பேர்பட்ட நோய்க்கும் இது பொருந்தும்.
எல்லோரும் மனதில்  வைக்க வேண்டிய ஒன்று..
சிறிய காயம் வந்து மரித்தவர்களும் உண்டு..
தீராத வியாதி வந்து பிழைத்தவர்களும் உண்டு...
என்பதைத்தான்.
 மனோதைரியம், நம்பிக்கை, முயற்சி இவை மூன்றும் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும்செய்யாது.

Tuesday, October 9, 2012

மத்திய அமைச்சர் செய்தது தவறு - கலைஞர்





 தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டுமென்று மத்திய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறாகும் என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காக மாநில உணர்வோடு நடந்து கொள்வது தவறாகும்.

ஒருவேளை இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை மனதிலே கொண்டு வாக்கு வாங்கவேண்டுமென்பதற்காக கிருஷ்ணா மாநில மக்களைக் கவருகின்ற வகையில் அந்தக் கடிதத்தை எழுதியிருப்பார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மக்களும், தலைவர்களும் கட்சி உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். அந்த மாநில அரசும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிலே முடிவெடுத்து, அதன்படி செயல்படுகிறார்கள். அதன் விளைவாகத்தான் கர்நாடக மாநிலத் தலைவர்கள் எல்லாம் பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டிலோ தனக்கே எல்லாம் தெரியும், யாருடைய ஆலோசனையும் தயவும் தேவையில்லை என்று கருதுகின்ற அரசு நடக்கின்றது. எப்படியிருந்தாலும், காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தில் பிரதமர் அறிவித்த முடிவுக்கு மாறாக நண்பர் கிருஷ்ணா பிரதமருக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதியது தவறு, கண்டிக்கத்தக்கது.

நல்லவேளையாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமரும், உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டுமென்று சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, October 8, 2012

பேசும் போது ஜாக்கிரதை ..எச்சரிக்கை பதிவு


தவளை தன் வாயாலேயே கெடும் என்பார்கள்..

தவளை கெடுமோ இல்லையோ...சாமன்யர்களாகிய நாம் கெடுவதுண்டு...

உதாரணத்திற்கு என் கேசையே எடுத்துக் கொள்ளுங்கள்...

வழக்கமாக கடன் கேட்டுக்கொண்டிருக்கும் நண்பனின் செய்கை ஒரு வழிப் பாதையாய் இருந்ததால்..இனி அவன் கேட்கும்போது நாமும் ;'இல்லை' பாட்டு பாட வேண்டுமென தீர்மானித்து..ஒரு முறை அவனிடம்..'நானே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்..இதில் உனக்கு வேறு எப்படி கடன் கொடுப்பது' என்று கூறப்போக அவன் கண்ணில் பட்ட நண்பர்களிடம் எல்லாம், என் பெயரைச் சொல்லி..'பாவம் அவன் கஷ்டத்தில் இருக்கிறான்' என்று சொல்லப் போக..என்னைப் பின்னர் பார்த்தவர்கள்..'பாவம் உனக்கே கஷ்டம்' என வருத்தப்பட..'போதுமடா சாமி..அவன் கேட்ட போது கடன் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றிவிட்டது.

அடுத்து இப்படித்தான்...ஒரு நண்பர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது..'சமையல் எப்படி?' என்றார்.அவர் மனைவி மனம் நோகக்கூடாது என...ரொம்பவும் சுமாராய் இருந்த கத்திரிக்காய் கூட்டை..'பிரமாதமாக இருக்கிறது''தனி கைவண்ணம்' என புகழப் போக..இப்போதெல்லாம்..என்று அந்த நண்பன் வீட்டில் கத்திரிக்காய் கூட்டு என்றாலும்'அவருக்குப் பிடிக்கும்..கொண்டு போய் கொடுங்கள்..என அவர் மனைவி சொல்லப் போக,எனக்கு பார்சல் வந்துக் கொண்டிருக்கிறது.இனி அடுத்தமுறை அவர் வீட்டுக்கு சாப்பிடச் சென்றால்..தவறி ஏதும் நன்றாய் இருக்கிறது எனச் சொல்லக் கூடாது என தீர்மானித்து விட்டேன்.

அடுத்து ஒரு நாள் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து நடத்துநரிடம்..சில்லறை 50 காசு இல்லாததால் 'அதனால் பரவாயில்லை' என நான் கூறப்போக, இப்போதெல்லாம் சில்லறை இருந்தாலும் 50 காசுகளை அவர் எனக்குத் திரும்பத் தருவதில்லை.

இப்படித்தான் ஒரு சமயம்..வீட்டு பொறுப்பிலிருந்து அன்று தப்பிக்க, 'சற்று தலை சுற்றுகிறாப்போல இருக்கு' என மனைவியிடம் கூறப்போக,'இந்த நிமிஷமே டாக்டரைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதம் பிடித்து, (நானும் கூறிய பொய்யை மெய்யென நிரூபிக்க வேண்டி இருந்ததால், நானும் வாளாயிருக்க) அன்று..தேவையில்லா டெஸ்டுகள் என 1500 ரூபாய்வரை வீணடிக்கப்பட்டது.

முடிவெட்டுக் கடையில் முடிவெட்ட 80 ரூபாயும், முடிவெட்டும் ஊழியருக்கு தனியாக 10 ரூபாயும் கொடுப்பேன்.இது அறிந்த கடை முதலாளி, கடந்த சில மாதங்களாக அவரே முடி வெட்டிவிட்டு 90 ரூபாய் எடுத்துக் கொண்டு விடுகிறார்.

இப்போது என்னதான் சொல்ல வருகிறாய்? என்கிறீர்களா?

வேண்டாம்..நான் ஏதாவது சொல்லப்போக..நீங்கள் ஏதாவது புரிந்துக் கொள்ளப்போக,,,,,ம்ஹூம்..வேண்டாம்.நான் சொல்ல வருவது..என்னுடனே இருந்துவிட்டு போகட்டும்.


Sunday, October 7, 2012

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

Saturday, October 6, 2012

பாக்டீரியா உருவாக்கும் சுத்தத் தங்கம்!




 


தங்கம் என்ற மஞ்சள் உலோகம் இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. மண்ணில் சுரங்கம் அமைத்து தோண்டி பின்னர் சுத்திகரிக்கப்பட்டுதான் தங்கம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மிகத் தூய்மையான தங்கமான 24 கேரட் தங்கத்தை பாக்டீரியா ஒன்று உருவாக்குகிறது என்ற ஆச்சரியமான தகவலை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகலத்தின் மைக்ரோ பயாலஜி மற்றும் மாலிக்யூலர் ஜெனடிக்ஸ் துறை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் பாக்டீரியா ஒன்று சுத்தமான தங்கம் உருவாக்குவதை கண்டறிந்தனர். இந்த பாக்டீரியாவுக்கு ‘குப்ரியாவிடஸ் மெட்டாலிடியுரன்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.
தங்களின் கண்டுபிடிப்பை ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற ‘பிரிக்ஸ் ஆர்ஸ் எலக்ட்ரானிக்கா' என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு தங்க முலாம் பூசப்பட்ட ஒரு பொருளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். ‘த கிரேட் ஒர்க் ஆஃப் மெட்டல் லவ்வர்' என்ற பெயரில் பாக்டீரியா உருவாக்கிய தங்கம் காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த மைக்ரோ பயாலஜி விஞ்ஞானிகள் இதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆய்வு முடிவு பற்றி பல்கலைக்கழக மைக்ரோபயாலஜி பேராசிரியர் கசம் கஷேபி கூறியதாவது: பொதுவாக பாக்டீரியாக்கள் நச்சுத்தன்மையுள்ள பொருட்களில் வளர்வதில்லை. ஆனால் இந்த பாக்டீரியா இயற்கையில் காணப்படும் நச்சுத்தன்மையுள்ள தங்க குளோரைடு என்ற வேதிப்பொருளில் வளர்கிறது. இந்த தங்க குளோரைடு நீர்ம தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவை தங்க குளோரைடில் வளர்த்தபோது ஒரே வாரத்தில் தங்க குளோரைடு நீர்மமானது தங்கக்கட்டியாக மாற்றமடைந்தது. இயற்கையில் தங்கம் எப்படி உருவாகிறதோ, அதேபோன்ற ரசாயன வினை இங்கும் நடந்திருக்கிறது என்று கூறினார்.
24 கேரட் பரிசுத்தமான தங்கத்தை பாக்டீரியா உருவாக்குகிறது என்ற கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. அதே நேரம், இந்த தொழில்நுட்பத்தில் தங்கத்தை உருவாக்குவது சவாலானது, அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது. பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது செலவு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தொழில் ரீதியான உற்பத்திக்கு பாக்டீரியா என்ற உயிரை பயன்படுத்தலாமா?. சுரங்கம் அமைத்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை பாக்டீரியாவை கொண்டு உருவாக்கினால் உலக அளவில் பொருளாதாரத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா.. என பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஆராய்ச்சி

(தட்ஸ்தமிழ்)

Friday, October 5, 2012

ஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....


கடலூர் மாவட்டத்தில் கிராமம், ஊராட்சி, நகரம், ஒன்றியம் வாரியாக பாமக கட்சிக் கொடிக் கம்பங்களை ஏற்றி வைத்துச் செல்லும் வழியில் நெய்வேலி வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை முன்னர் ஆண்ட கட்சியும், தற்போது ஆளுகிற கட்சியும்தான். இதில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம்.

÷காவிரி நீர்ப் பிரச்னைக்காக அன்றாடம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

÷காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வுசெய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.

÷பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ் மட்டுமே.

÷எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அன்புமணி ராமதாஸ்.


Thursday, October 4, 2012

அன்னிய மோகம்! (தினமணி தலையங்கம்-கண்டிப்பாக படிக்கவும்)


அன்னிய மோகம்!


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு "எழில் நகரம்' (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் இணைந்து செயல்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் குறிப்பிடுகையில், ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நகரங்களில் போக்குவரத்து, சாலை வசதி, தகவல் தொழில்நுட்பம், கரியமில வாயு கட்டுப்பாடு, இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்தேவை இல்லாமல் வீடுகள் தற்சார்புடன் கதிரொளி ஆற்றல் பெறுதல், வீடுகளுக்கு பகலில் மின்விளக்கு எரியாமலேயே வெளிச்சம் பெறும் வகையில் வடிவமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்படும். முதல்கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி, ஜபல்பூர் ஆகிய இரு நகரங்களில் இதைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரியா நாட்டின் அமைச்சர் டோரீஸ் பர்ஸ் குறிப்பிடும்போது, இத்தகைய பசுமை நகரம், எழில் நகரம் அமைக்கப்படும் பணியில் ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரியாவும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நகர்ப்புற மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளும் என்கிறார் அமைச்சர் கமல்நாத். எல்லாம் சரிதான். ஏன் இதற்குப்போய் ஆஸ்திரியாவுடன் ஒப்பந்தம்போட வேண்டும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இந்தியாவில் இல்லாத தொழில்நுட்பமா? இந்தியாவில் இல்லாத முன்மாதிரி நகரங்களா? இதையெல்லாம்விட, இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மிகத்திறமையான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளின் நகர் வளர்ச்சிக்குப் பங்காற்றிக்கொண்டிருக்கையில் நாம் ஏன், ஆஸ்திரியா நாட்டின் தொழில்நுட்ப நிறுவனத்தின் தயவைப் பெற வேண்டும்?
ஆஸ்ட்ரியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி என்பது அரசு நிறுவனம் அல்ல. இது ஒரு கூட்டு நிறுவனம். ஆஸ்திரிய குடியரசு 50.46%, தொழில் கூட்டமைப்புகள் 49.54% எனும் விகிதத்தில் அரசு - தனியார் பங்கேற்பில் செயல்படும் நிறுவனம். இது ஒரு ஆய்வு மற்றும் ஆய்வைச் செயல்படுத்தும் நிறுவனம். இவர்கள் யாருக்கான ஆய்வைச் செய்வார்கள் என்பதை நாம் சொல்லியா தெரிய வேண்டும்?
இவர்கள் ஆஸ்திரியா நாட்டின் பல்வேறு தொழில்நிறுவனங்களுக்காக ஆய்வுசெய்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்குமே தவிர, இவர்களது நோக்கம் இந்தியாவில் எழில் நகரங்களை உருவாக்குவதுதான் என்பதை நம்ப இயலவில்லை.
இவர்கள் உருவாக்க இருக்கும் எழில் நகரத்தின் சாலைகள் அவர்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். வீட்டின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு, மெட்ரோ ரயில், அதிவிரைவு போக்குவரத்துப் பாதை, வீடுகளுக்கான மின்ஆற்றல் சுயச்சார்பு எல்லாமும் அவர்கள் தீர்மானிப்பார்கள். அவர்களது பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையே இங்கே உருவாக்குவார்கள். இந்த ஒத்துழைப்புக்கு எத்தனை கோடி ரூபாய் பணம் பெறுவார்கள் என்பது குறித்து அமைச்சர் கமல்நாத் குறிப்பிடவில்லை.
இன்றைய இந்திய நகரங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விரிவடைந்ததற்கு யார் காரணம்? அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகள் முறையாகச் செயல்பட்டு, விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டுமானங்களை தயக்கமின்றி இடிக்கத் தொடங்கியிருந்தால், இன்று இந்திய நகரங்கள் இத்தகைய நெரிசலாக அமைந்திருக்குமா?
பாதசாரிகள் நடக்க முடியாத அளவுக்கு சிறு நடைமேடை அமைத்து, அதில் கடைகள் ஆக்கிரமிக்கும்போதே தடுத்து நிறுத்தவும் செய்யாமல் வளரவிட்டு, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்கள் யார்?
வீடுகளுக்கு சூரிய ஆற்றல் மூலம்தான் வென்னீர் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்காமல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பைக் கட்டாயமாக்காமல் இருந்ததற்கு யார் காரணம்?
முறையின்றி கட்டப்பட்ட வீடுகளையும் பணம் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ள சட்டம் தீட்டியதற்கு அரசியல்வாதிகள்தானே காரணம்?
இந்தியாவில், அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் தரமான வீடுகளை, குடியிருப்புகளை அமைக்க முடியும் என்று லாரி பேக்கர் போன்றோர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அத்தகைய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு தர மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவும், உதவிகள் வழங்கவும் கட்டட மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆஸ்திரியாவிலிருந்து ஒரு நிறுவனம் தரும் ஆலோசனைப்படி எழில் நகரம் அமைக்கப்போகிறோம் என்று அமைச்சர் கமல்நாத் சொல்லும்போது, "கேப்பையிலே நெய் வழிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு அறிவு எங்கே போயிற்று?' என்கிற கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
நமக்கான எழில் நகரை நாம் அமைத்துக்கொள்ள முடியாதா? அதற்கான தொழில்நுட்பமும், அறிவும் இந்தியர்களிடம் இல்லையா என்பதுதான் பதில் வராத கேள்வியாக இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிட்டு மதுரை மாநகரம் அமைக்கப்பட்டபோது, ஆஸ்திரியா என்கிற நாடு எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் நகர வடிவமைப்பில் நமது மேலாண்மைக்குச் சான்றாக இருக்கும் சரித்திரச் சுவடுகள். நகரக் கட்டமைப்பைப் பற்றி நமக்குக் கற்றுத் தருவதற்கு அன்னிய நாட்டை நாடுவானேன்? இதற்குப் பின்னால் என்ன ஊழலோ, என்ன திட்டமோ யார் கண்டது?
இந்தியாவின் எந்த நகரத்தையும் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதன் மூலம் எழில் நகரமாக மாற்றிவிட முடியும். இதற்கு ஆஸ்திரியா நாட்டிலிருந்து ஒரு நிறுவனம் வந்துதான் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்பதில்லை.

Wednesday, October 3, 2012

உணவகம் - ஆரோக்கிய பவன்




அடையாறு சிக்னலில் இறங்கி, சற்று கிழக்கு நோக்கி நடந்தால்..ஒரு பழைய கட்டிடம் இருக்கும்.அக்கட்டிடத்தின் வாசலில் சென்னை மாநகராட்சியின் குப்பைத்தொட்டியைப் பார்க்கலாம்.கட்டிடத்தில் ஒரு அழுக்கேறிய..வாசகங்கள் மறைந்து போன போர்ட் ஒன்று இருக்கும்.அதை சற்று எக்ஸ்ரே கண்ணுடன் பார்த்தால்..ஆரோக்கிய பவன் என்பதை கண்டுபிடித்து விடலாம்.உள்ளே நுழைந்தால்..கல்லாவில் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கும், அவ்வப்போது இருமலுடன்.இருமும் போதே தொண்டையில் சளி இருப்பதைக் காணலாம்.அவருக்கு டிபி யாய் இருக்கலாம்.அதனாலென்ன..

நாம் உள்ளே போய் அமர்ந்தால்..எல்லா மேசையிலும் ஈக்கள் குவிந்து இருக்கும்.அதனால் என்ன நாம ஈக்களையா சாப்பிடப் போறோம்.என்ன ஒன்று..அவை பக்கத்து தட்டில் அமர்ந்து, நம் தட்டில் அமராவண்ணம் இடது கையால் நாம் வீசிக்கொண்டிருக்கலாம்.காற்றுக்கு காற்று ஆச்சு...ஈக்களும் நம் தட்டை அண்டாது.சர்வர்..அவனது விரல்கள் அனைத்தையும் உள்ளே விட்டு..தண்ணீர் கொணர்ந்து வைப்பான்.

இரண்டு இட்லி ஆர்டெர் செய்தால்...அத்துடன் மஞ்சள் கலரில் ஒரு திரவம் (சாம்பார்?)..சற்று வெண்மையும் ,பச்சையும் சேர்ந்த கலரில் ஒரு சட்னி வைக்கப் படும்.இட்லியை சற்று கஷ்டப்பட்டுதான் விள்ள வேண்டும்.கல் போல இருக்கும்.இட்லி மலிவாய் இருப்பதால், வீடு கட்டும்சிலர்..செங்கல்லுக்கு பதிலாக இவற்றை வாங்கி உபயோகிப்பதும் உண்டு..என செவி வழிச் செய்தி.

கஷ்டப்பட்டு..இட்லி சாப்பிட்டுவிட்டு தோசை ஆர்டர் செய்தால்...நாயின் தொங்கவிட்ட நாக்கு போல் தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள்.கடையில் ஃபேனோ, ஏசியோ இல்லை எனினும், தோசை மட்டும் ஏசியில் வைத்திருந்தாற் போல சில்லென்றிருக்கும்.

கடைசியில் காஃபி சாப்பிடலாம் என்றால்..காஃபி என்னும் வெந்நீர் வரும் டபராவில் உள்ள அழுக்கை, கையினாலேயே அகற்றலாம்.அந்த அளவு சுத்தம்.

ஆரோக்கிய பவனில் உணவருந்துவோர் தேவைக்கென...கடையை ஒட்டி..சில மருத்துவர்கள் கிளீனிக் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்த கிளீனிக்கில் சம்பாதித்து தலைக்கு இரு வீடு வாங்கிவிட்டார்களாம்.

டெங்கு,சிக்கன்குன்யா போன்றவை வருபவர்கள்..உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள இந்த ஓட்டலுக்கு செல்லலாம் என சிபாரிசு செய்கிறேன்.


இரு நிலவுகள் (கவிதை)






பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

Tuesday, October 2, 2012

விகடன் சொன்னது உண்மையா?




ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன் டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச் செய்தி வெளியாகியுள்ளது..

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய வருகையின் போது பாதுகாப்புக்காக இருந்த இந்திய படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இவை'

இது உண்மையா?

யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய இயலுமா?

இது உண்மையாயின்..தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய் மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.

தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்:



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தமிழில் எழுதுதல் மற்றும் படிக்கும் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தமிழில் எழுத, படிக்க திணறுவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியரின் கற்றல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 96 அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் பலரும், தமிழை பிழையின்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து கூடுதல் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பி்த்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில் மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது. தமிழ் மொழியை வாசிக்க திணறும், இந்த மாணவர்கள் மற்ற பாடங்களை படிப்பது கடினமாகும். எனவே தனி கவனம் எடுத்து தமிழில் தவறின்றி வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் கற்று கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அரசு பள்ளிகளும் 9ம் வகுப்பு மாணவர்களை தனித்தனியே தமிழில் வாசிக்க செய்து சரியாக வாசிக்க தெரியாத மாணவர்களையும், பிழையோடு எழுதும் மாணவர்களையும் தரம் பிரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தமிழை படிக்க திணறும் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்தி அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். இதற்காக தினமும் 1 மணி நேரம் தனி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தகவல் - தட்ஸ்தமிழ்)

Monday, October 1, 2012

பட்டுக்கோட்டை பிரபாகரும், சரித்திரக் கதையும்..




ஆனந்த விகடனில்..நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்பு என்ற வரிசையில் பல சிறந்த எழுத்தாளர்கள் கதைகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.

பத்திரிகைகள் சிறுகதைகளையே பிரசுரிக்க மறந்துள்ள நிலையில்..தரம் வாய்ந்த ஒரு கதையாவது விகடனில் படிக்கமுடிகிறதே என வாசகர்கள் மகிழ்கின்றனர்.

இந்நிலையில் சென்ற வாரம் விகடனில் பட்டுக்கோட்டை பிரபாகரனின் சரித்திரக்கதை 'ஆனந்தவல்லியின் காதல்' பிரசுரமானது.

அதைப் படித்ததும்..எனக்குத் தோன்றிய முதல் கருத்து..இக்கதையில் என்ன இருக்கிறது என நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே..

மிகவும் அமெச்சூர்த்தனமான கதை.

பல தவறுகள்..

அநிருத்தன் என்னும் மன்னன் வலுவான சேனையைக் கொண்டு ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்துபவனாம்.அவன் விஜயநந்தன் என்னும் குறுநில மன்னனிடம் கப்பம் கட்டுகிறானா...அல்லது போரைச் சந்திக்க வேணுமா? என்கிறானாம்.அந்த வருத்தத்தில் அவன் இருக்கையில் 'அவனது மகளை தனக்கு கேட்கிறானாம்' அநிருத்தன்.அதற்கு விஜயநந்தன் சம்மதிக்கிறானாம் மகிழ்ச்சியுடனும்..போரிலிருந்தும் தப்பிக்கலாம் என.

ஆனால் இளவரசியோ நந்தகுமாரன் என்னும் கட்டியக்காரனை விரும்புகிறாளாம்.அவளும், நந்த குமாரனும் ஒரு சிறு நாடக மாடி தப்பித்து இலங்கை சென்று மணமுடித்து வாழ நினைக்கிறார்களாம்.

அதற்காக அவன் விஜயநந்தனிடம் மாட்டிக்கொண்டு, இளவரசியை காதலிப்பதாகக் கூற, இளவரசி இல்லை என மறுக்க, மன்னன் அவனுக்கு உயிருடன் கல்லறைக் கட்ட அவன் கல்லறைக் கட்டும் நபர்களில் ஒருவனான அவன் நண்பனிடம்...ஒரு கல்லுக்கு பதில் அங்கு வெறும் சுண்ணாம்பு வைத்து கட்டிவிடு என்கிறானாம்.அவன் நண்பனோ, அவனுக்கும் இளவரசி மீது ஆசைவர அப்படிச் செய்யவில்லையாம்.ஆனால் நந்தகுமாரனின் தங்கை பொன்னி , கல்லறையை முடிக்கும் முன் கோழிக்கறி ஊட்டுகிறாளாம் நந்தகுமாருக்கு.

அன்று பௌர்ணமி ஆனதால்..இளவரசி தோழியுடன் கடலில் குளிக்க..கடல் அவளை இழித்துச் செல்கிறதாம்.அவள் உடன் வந்த வீரர்கள் அவளை காப்பாற்ற முடியவில்லையாம்.அவள் உடலும் கிடைக்கவில்லையாம்.

ஆனால் நந்தகுமாரன் நண்பன் துரோகமிழைத்தாலும், பொன்னி ஊட்டிய கோழியின் எலும்பில்மஜ்ஜை நீக்கி அதில் சிறு கத்தி வைத்து அனுப்ப, அதன் மூலம் நந்தகுமார் தப்பித்து, நண்பனின் படகில் மறைந்து கொள்கிறானாம்.இதற்கிடையே, கடலில் மூழ்கியது போல நடித்த இளவரசி , நந்தகுமாரின் மற்றொரு நண்பனின் படகில் ஏறி காத்திருக்க.நந்தகுமாரை ஏமாற்றும் நண்பன் அங்கு வந்து..இளவரசி மீதான காதலைச் சொல்லி தன் துரோகச் செயலை கூற, அந்த படகில் மறைந்திருந்து வந்த நந்தகுமார் அவனைக் கொன்று இளவரசியுடன் இலங்கை பயணிக்கிறானாம்.

மெகாசீரியலுக்கு ப.பி., வசனம் எழுதுவதால்..இதிலும் அங்கங்கே சின்னச்சின்னத் திருப்பங்களை வைத்துள்ளார்... மனதில் அவை எதிர்பாரா திருப்பங்கள் என எண்ணி.

இந்தக் கதையை வேறு சாதாரணமான எழுத்தாளன் எழுதியிருந்தால்..'பிரசுரிக்க தகுதியில்லை' என விகடன் திருப்பி அனுப்பியிருக்கும்.

 இந்தப் பதிவிற்கு பல மைனஸ் ஓட்டுகள் விழலாம்..ஆனால் என் மனதில் இக்கதைப் பற்றி தோன்றியது.

அமெரிக்காவில் வினாயகர் சிலை கரைப்பு




டல்லாஸில் உள்ள இந்து கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. முதல் முறையாக விநாயகர் சிலைக் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மும்பையிலிருந்து வரவழைக்கப் பட்ட 5 அடி விநாயகர் சிலைக்கு பதினோரு நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீச்சல்குளத்தில் கரைக்கப்பட்டது.


மும்பையில் விநாயகர் ஊர்வலம் நிறைவடையும் நாளில், பருவ மழையும் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம். பெரும்பாலும் அவ்வாறே நடந்து வருகிறது. டெக்சாஸ் மாகாணம் முழுவதும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மழையை காணாமல் வறட்சியில் இருந்த நிலையில், சனிக்கிழமை டல்லாஸ் மட்டுமல்லாமல், மாகாணம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மும்பையில் முடிவடையும் பருவமழை, டெக்சாஸில் ஆரம்ப மாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. அந்த மழையிலும் ஐநூறுக்கும் மேலான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மும்பை ஊர்வலத்தில் பாட்டுகளுடன், ஆட்டம் பாட்டம் என ஆண்களும் பெண்களும் கடற்கரை வரை சென்று சிலையை கரைப்பது வழக்கம். அதே போல் இங்கும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் இறுதியில், ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நீச்சல் குளத்தில் சிலை கரைக்கப் பட்டது.
களிமண் சிலை போலில்லாமல், தானாகவே நீரோடு நீராக கரையக்கூடிய சிறப்பு அம்சத்துடன் மும்பையிலிருந்து தருவிக்கப் பட்டிருந்த்து. சித்தி விநாயக் கணேஷ் மண்டல் என்ற அமைப்பை சார்ந்தவர்கள் இந்து கோவில் நிர்வாகிகளுடன் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்கள். தமிழர்கள் உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.
டெக்சாஸில் இதுதான் முதல் முறையாக நடந்த விநாயகர் ஊர்வலம், சிலை கரைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

டிஸ்கி- இறைவன் எதிர்ப்புக்குக்கு இணையாக இறைவனை வேண்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துத்தான் வௌகிறது.என்றும் மக்களிடையே டிபாசிட் இழக்காத ஒரே தலைவன் இறைவன்தான் போல் இருக்கிறது.