Sunday, June 22, 2014

குறுந்தொகை - 19



மருதம் திணை - பாடலாசிரியர் பரணர்

(தலைவன் தன் நெஞ்சிற்குரைத்தது-
விலைமகளுடன் வாழ்ந்தவன் இல்லம் மீண்டான். தலைவி ஊடினாள். தலைவன் ஏதேதோ சொல்லி உணர்த்திப் பார்த்தான். அவளது ஊடல் தணிந்தபாடில்லை. இவள் என்னை விட்டு பிரிந்து விடுவாளோ? என வருந்துகிறான்)

பாடல்-

எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவ னாறும்

பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே.

                        பரணர்



(எவ்வி என்பவன் பாணர்களைப் பேணும் சிறந்த வள்ளல். அவன் இறந்தபோது பாணர் மகளிர் பூச்சூடாமல் இருந்து தம் இரங்கலைத் தெரிவித்தனர். மனைவியை அடையமுடியாத கணவன் நெஞ்சம் எவ்வியை இழந்த பாணர் நெஞ்சம் போலக் கலங்கிற்றாம்)


செய்யுள் உரை -


பாணர்களைப் பேணும் எவ்வியை இழந்ததும் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்க பூச்சூட மறுத்த பெண்டிரைப் போல,என் நெஞ்சே!மனை எனும்மரத்தின் மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுவதற்கிடமான கரிய கூந்தலை உடைய இவள், இனி எனக்கு உறவில்லாமல் போய் விடுவாளோ..(என தலைவன் வருந்துகிறான்)

No comments: