Friday, June 27, 2014

குறுந்தொகை - 24



மனைவியை விட்டு கணவன் பிரிந்து செல்கிறான்.மீண்டும் அவன் சொன்ன காலத்தில் திரும்பி வரவில்லை.இனி வருவானா? மாட்டானா? எனத் தெரியாது.உலகம் அம்
மனைவி மீது பழி போடுகிறது.அவளை வாழாவெட்டி என்கிறது.எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும்...ஆணாதிக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை எல்லாயிடத்தும்.இதே போன்ற நிகழ்ச்சிகள் சங்க காலத்திலிருந்து நடந்து வந்துள்ளதை இப்பாடல் தெரிவிக்கிறது.

 முல்லை திணை -  பாடலாசிரியர்- பரணர்

பாடல்-    

கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்

என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
   
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
   
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்

குழையக் கொடியோர் நாவே
   
காதல ரகலக் கல்லென் றவ்வே.

                            -  பரணர்.

உரை-


கரிய தாளை உடைய வேப்பமரத்தின் பூவின் வருகையானது(இளவேனில் காலம்)என் தலைவன் வராமல் சென்றுவிடுமோ!கொடிய வம்பு பேசும் அயலாரின் நாக்குகள், ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளிய கிளைகளை உடைய அத்தி மரத்தின் உண்ண விரும்பும் பழத்தின் மீது ஏழு நண்டுகளால் மிதிபட்டு குழைந்தது போல நான் வருந்தும் படி பேசுகின்றனவே!
 .
(பழிபேசும் ஊரார் அன்றிலிருந்து, இன்றுவரை அடங்கவில்லை)

No comments: