Tuesday, June 24, 2014

குறுந்தொகை - 21



சாதாரணமாக பெண்கள் ஒருவனை எளிதில் நம்பமாட்டார்கள்.ஆனால்..நம்பிவிட்டால், அவனே "நான் செய்தது தப்பு "என்று சொன்னாலும் அதை நம்பமாட்டார்கள்.அப்படிப்பட்ட மென்மையான மனம் கொண்டவர்கள். இந்த குணத்தில் சங்ககால பெண்கள் முதல்..இன்றைய தலைமுறை பெண்கள் வரை ஒன்றுதான்.

அப்படி தன் தலைவனை நம்பிய சங்ககால பெண் பற்றிய பாடல் இது.கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லை.ஆனால் அதை நம்ப மறுக்கிறது பெண் உள்ளம்.அதனால் இயற்கையே கார்காலத்தை மாற்றிவிட்டது என உரைக்கிறாள்.

இனி பாடல்...

முல்லை திணை - பாடலாசிரியர் ஓதலாந்தையார்

வண்டு படத் ததைந்த, கொடி இணர் இடை இடுபு,
பொன் செய், புனை இழை, கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், ”கார்” எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே

                         - ஓதலாந்தையார்


வண்டு வந்து அமரும் பூங்கொத்தின் இடையிடையே கட்டிய பொன் இழையால் ஆன தலை அணியை சேர்த்து தலையில் சூடியிருக்கும் பெண் , கார்காலம் வந்தும், அதற்கான கொன்றைப் பூ பூத்து குலுங்கி இருந்தும், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் வரவில்லையெனில், அவர் பொய் சொல்லமாட்டார்.. இன்னும் கார் காலம் வரவில்லை இது இயற்கையின் மாற்றம் (என்கிறாள்)

(அந்த அளவு இயற்கையின் பருவ காலங்களைவிட தலைவன் வார்த்தைகளை நம்புகிறாள்)

No comments: