தலைவி கூற்று
(திருமணத்திற்காக பொருளீட்ட தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)
குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனொ
டொன்றேன் றோழி யொன்ற னானே.
-கபிலர்.
தோழி...நான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; பொருந்தும் இயல்பினேன்; ஆயினும், நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால், மலையினிடத்து,
ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரிந்த அடியையுடைய வேங்கைமரம், குறமகளிர், தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு, ஏறவேண்டாமல் நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி, தாழ்ந்துமலர்தற்கிடமாகிய, - நாட்டையுடைய தலைவனோடு, பொருந்தேன்.
(கருத்து) தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று நான் ஆற்றேனாயினேன்.
(பொருத களிறு மிதித்தலால் வேங்கைமரம் சாய்ந்து மகளிர் ஏறாமேலே மலர் பறித்தற்கு எளிதாக மலர்ந்தது. )
1 comment:
மிகவும் அருமை
Post a Comment