Wednesday, August 1, 2018

நாடகப்பணியில் நான் - 18

சென்னையில் அந்த காலகட்டத்தில் 150க்கும் மேற்பட்ட சபாக்கள் இயங்கி வந்தன..

சபாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, "Federation of city Sabhas" என்ற அமைப்பினைத் தொடங்கினர்.நாடங்களுக்கு சன்மானம் தீர்மானம் செய்வது..சபாக்கள் எப்படி நடைபெறுகிறது, நாடகக் கலைஞர்களை பாராட்டுவது..போன்றவற்றை இந்த ஃபெடெரேஷன் கவனிக்கும்.

சென்னை நான்காக பிரிக்கப்பட்டது...வடக்கு, தெற்கு, கிழக்கு , மேற்கு என ஒவ்வொரு பிரிவிலும் 35க்கும் மேற்பட்ட சபாக்கள்.ஒவ்வொன்றிற்கும் ஒரு  செயலாளர், ஒரு இணைச்செயலாளர்.

மேற்கு சென்னைக்கு நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடெமி லயன் எஸ்.நடராஜன் செயலர்.நான் இணைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அப்படியெனில், அன்று என் சபா எவ்வளவு சக்தி வாய்ந்ததாய் இருந்தது என்பதை சொல்லவே இத் தகவலையும் தந்துள்ளேன்.

அடுத்து விஷயத்திற்கு வருகிறேன்..

1950களின் தொடக்கத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார் ஒரு இளைஞர்.இது ஒரு செய்தியா? என வினவுவோருக்கு , கண்டிப்பாய் இது ஒரு முக்கிய செய்தியே! என்கிறேன்.

காரணம், அந்த நாளில் படித்தவர் அதிகம் ஈடுபடாதத் துறை நடிப்புத்துறை.அப்போதே முதுநிலை பட்டதாரியான இவர் (M.A.,) "ஏழை படும் பாடு" திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.இவர் அறியாத விஷயங்களே இல்லை எனலாம்.

நாடக வெறியரான இவர் தமிழ் நாடகங்களை மட்டுமல்ல, Madras Players என்ற பெயரில் பல ஆங்கில நாடகங்களையும் போட்டு நடித்தார்.

சென்னையில் ஒரு அரங்கை ஒருமாதம் வாடகைக்கு எடுத்து தினம் ஒரு நாடகம் நடத்தினார்.

ஆம்..அவர் வி கோபாலகிருஷ்ணன் என்பவர்.

அவர்தான் எங்களது சபாவை ஆரம்பித்து வைத்தார் என நான் முன்னதாகச் சொல்லியிருக்கிறேன் அல்லவா?

அவரது நாடகம் கே கே ராமன் எழுதிய ராஜயோகம்.அதை எங்கள் சபாவில் நடத்தினோம்.

நாடகத்தன்று மாலை 6-30 வரை அவர் வரவில்லை.இந்தநாள் போல தகவல் தொடர்பும் இல்லை.ரசிகர்கள் வர ஆரம்பித்து விட்டனர்.

6-45க்கு அவர் கார் வந்தது.ஷூட்டிங்கில் காலை முதல் மாட்டிக் கொண்டதாகச் சொல்லி தனது தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்தவர், "ராதாகிருஷ்ணன், எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?காலையில் சாப்பிட்டது.நேரமாகிறது என சாப்பிடாமல் வந்துவிட்டேன்.ரொம்ப பசிக்கிறது.யாரையாவது அனுப்பி ஏதாவது டிஃபன் வாங்கி வரச்சொல்லமுடியுமா?" என்றார்.

என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு.

நாடகம் சற்று தாமதமாய் ஆரம்பித்தாலும் பரவாயில்லை என ஹோட்டலில் இருந்து டிஃபனை வரவழைத்து, அவர் சாப்பிட்டு முடித்ததுமே நாடகத்தைத் தொடங்கச் சொன்னேன். 

No comments: