Saturday, November 17, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 11

----------------------
குடந்தை மாலி
-----------------------

என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி, 1959ல் துர்கா டிராமாடிக் அசோசியேஷன்ஸை ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என பெயர் மாற்றம் அடைந்தது.இன்று அதே குழு மாலி ஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.

மகாலிங்கத்தை குடந்தை மாலி என ஆக்கியவர்  ம.பொ.சி ஆவார்

இதுவரை இக்குழு கிட்டத்தட்ட 40 நாடகங்களை மேடையேற்றியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய மாபெரும் வெற்றி நாடகங்களாக திகழ்ந்தது.20 நாடகங்கள் மாலி எழுதியது.மீதி நாடகங்கள் இவர் குழுவிற்காக மற்றவர்கள் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்",ஆர்.சூடாமணியின் , "ஆழ் கடல்", திருப்பூர் கிருஷ்ணனின் 'பொய் சொல்லும் தேவதைகள்", ஷ்யாமளாராவின்"மன்னிக்க வேண்டுகிறேன்" ஆகியவற்றை மேடைநாடகமாக்கியப் பெருமை மாலிக்கு உண்டு.

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர், நாணு,மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராஜன்,நவாப் கோவிந்தராஜன், கரூர் ரங்கராஜன் ,எஸ் பி ஐ முரளிஆகியோர் இவர் குழுவில் நடித்த சில நடிகர்கள்.

இவரது ஞானபீடம் மிகவும் புகழ் பெற்ற நாடகம்.125 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள நாடகம்.

ஆனந்தவிகடனில் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ கே பட்டுசாமியின் "கடவுள் எங்கே?" என்று சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் மாலி.

அன்னை சாரதா தேவியின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் அவரது வாழ்க்கையை "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக்காவலர் ஆர் எஸ் மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள், சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள்(இந்நாடகம் 350 முறை மேடையேறியது),நம்மவர்கள்,ஆத்மவிசாரணை, நிதர்சனம், சம்மதம் ஆகியவை.

2017ஆம் ஆண்டு மாலியின் 60 ஆண்டு சேவையை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.

மாலி, தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் எனச் சொல்லலாம்.
பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.20க்கும் மேற்படட் விருதுகளைப் பெற்றவர் இவர்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருதைப் பெற்றவர்.

No comments: