Monday, June 1, 2020

வள்ளுவர் பெண்களைப் போற்றவில்லையா - 6

கணவனும், மனைவியும் இல்வாழ்க்கையில் இணைந்து, மகிழ்ந்து இல்வாழ்க்கையில் சிறந்த பேறாக நல்ல அறிவில் சிறந்த பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள்.

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்ந்து உடலுக்கு இன்பத்தையும்,அக்குழந்தைகளின் மழலை மொழி கேட்டு செவிக்கு இன்பத்தினையும் பெறுகின்றனர்.

குழலோசை, யாழோசையை விட தம் மக்கள் மழலை இனிமை வாய்ந்ததாய் எண்ணுகின்றனர்.

 குழந்தை வளர்கிறது.இப்போது, தந்தை மகனுக்குக் கல்வி கற்க வைத்து, அறிஞர்கள் நிறைந்த அவையில் தன் மகனையும் அறிவிற் சிறந்தவனாய் புகழுடன் விளங்க வைக்கும் பொறுப்பினை ஏற்கின்றான்.

அம்மகனை ஊரார் சான்றோன் என பாராட்டுகிறார்கள்.அப்போது அவனது தாய் அவனை ஈன்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட பெரு மகிழ்ச்சியை அடைகிறாள்.

ஆனால்..அந்நிக்ழ்விற்குப் பின்னால் தந்தையின் உழைப்பு எவ்வளவு இருக்கிறது.ஆயினும், தாய் மகிழ்ச்சியடைகிறாள் என தய்மையை, பெண்மையை வள்ளுவர் போற்றுகிறார்.இன்னமும் சொல்வதானால் தாய்ப் பாசத்தை உயர்த்தி சொல்கிறார்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (69)

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என ஊரார் பாராட்டும்பொழுது, அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் பெறுகிறாள்.

அடுத்த பதிவில் மேலும் சில குறள்களுடன் சந்திப்போம். 

No comments: