Wednesday, June 3, 2020

"பாசிடிவ் ரங்கநாதன்"

என் பெயர் ரங்கநாதன்.

ஆனால், நட்பு வட்டத்தில் என்னை "பாசிடிவ்" ரங்கநாதன் என்றால்தான் தெரியும்.

ஏனெனில் "ஏந்த ஒரு விஷயத்தினையும்.."பாசிடிவ்" வாக நினைத்தால்தான்..நம்மால் அவ்வேலையில் வெற்றி பெற முடியும்..என்பதனை உறுதியாய் நம்புபவன் நான்.அதையே மற்றவருக்கும் போதிப்பவன்.ஆகவே நண்பர்கள் "பாசிடிவ்" எனும் அடைமொழியுடன் என்னை அழைத்தனர்.

அதில் சிலர் கிண்டலுக்காகக் கூட அப்படி அழைப்பதுண்டு.

அன்று அப்படித்தான்.எனதுஅலுவலகத்தில் ஒரு நண்பருக்கு, அதிகாரி.. புதிய வேலை ஒன்றை செய்யச் சொன்னார்.அந்த நண்பர் பயந்தார்..தன்னால் முடியுமா? என என்னிடம் கேட்டார்.

நானும் எல்லோருக்கும் சொல்வது போல, அவரிடமும் பாசிடிவாக உன்னால் முடியும் என்று நினை..கண்டிப்பாக முடியும் என்றேன்.

நண்பரும், அப்படியே எண்ணியதால், அந்த வேலை அவருக்கு எளிதில் முடிந்தது.

அவ்வளவு ஏன்..என் மகனுக்கும், அவன் நண்பர்களைப் போல கணக்குப் பரிட்சையில், நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசை.உன்னால் நூறு மதிப்பெண்கள் பெறமுடியும் என "பாசிடிவாக"  எண்ணச் சொன்னேன்.என் மகனும் அப்படியே எண்ணி அடுத்து நூறு மதிப்பெண்களைப் பெற்றான்.

ஒருநாள் என் மற்றொரு நண்பர் "எல்லோரையும் "பாசிடிவ்..பாசிடிவ்:"னு திங்க் பண்னச்சொல்கிறீர்களே.ஒருநாள் "நெகடிவ்" என்னும் சொல்லை நீங்கள் சொல்வீர்கள்" என்றார்.

என் வாழ்வில் நெகடிவ்வே கிடையாது என்றேன்.

ஆனால் இப்போது..

"கொரோனா தாக்கியிருக்கக்கூடும் "ஏன் என்னை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"இறைவா..ரிசல்ட் "நெகடிவ்" வாக் இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கின்றேன் இந்த "பாசிடிவ்" ரங்கநாதன். 

No comments: