Saturday, March 3, 2018

குருதிப்புலன்

மனப் புண்ணை
நினைவுகள் எனும்
காக்கைகள்
கொத்திக்
கொத்திக்
குருதியை
கொட்டவைத்தன

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


திருவள்ளுவ நாயனார் தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.
இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ
என்தூங்கும் என்கண் இரா.

Wednesday, February 28, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்


அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

ஆ(ற)ரத் தழுவினேன்



கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

Tuesday, February 27, 2018

வறுமைக் கோடு



குச்சிக் கால்கள்

எலும்பு துருத்தியகைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்று சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

வெற்றியை அடையும் வழி

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.
எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.
ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..
என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.
ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.
எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.
எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.
வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை
(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)
பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.
வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Monday, February 26, 2018

உணவும் செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

நாச்சியார் திருமொழி -3

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்தமலர்
முருக்கமலர் கொண்டு - (கல்யாண) முருங்கை மலர் கொண்டு
முப்போதும் முன்னாடி வணங்கி(த்)- மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று- உண்மையில்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து- மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை-(நீ  சொன்ன சொல் காப்பாற்றுபவன் எனும் எண்ணத்தை) உனை நெஞ்சிலிருந்து அகற்றி
வைதிடாமே- உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை-மலர்க் கொத்துக் கொண்ட அம்புகள் தொடுத்து
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி- கோவிந்தன் என அதில் பெயரினை எழுதி
வித்தகன்- பல வித்தைகள் கற்றவன்
வேங்கடவாணன் என்னும்- வேங்கடவன் என்ற பெயர் பெற்ற
விளக்கினில் புக என்னை-(என் வாழ்விற்கு வெளிச்சம் தரும்)விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே- எய்து விடேன்

(தனக்குக் கிடைத்த) ஊமத்த மலர், முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதும் அவனது திருவடிகளை வணங்கி தொழுதவனை, பொய்யானவன். சொன்ன சொல் தவறியவன் என திட்டிவிடும் முன்னர் பூங்கணையைத் தொடுத்து வேங்கடவனிடம் என்னைப் புக வைத்துவிடு என் கிறார்

(முதல் இரண்டு பாடல்களில் கெஞ்சும் தோரணையில் சொன்னவர், இதில் சற்றே மிரட்டல் பாணியில் சொன்னது ரசிக்க வைக்கிறது)

Saturday, February 24, 2018

விதுர நீதியும்..வள்ளுவ நீதியும்


பீஷ்மர்..அம்புப் படுக்கையில் இருந்தபடியே தருமருக்குச் சொன்னது பீஷ்ம நீதி
கண்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்த நீதி ஸ்ரீமத் பாகவதம்
ஆனால்..
விதுரர், திரிதராஷ்டிரருக்குச் சொன்னவை விதுர நீதி
அதே போன்று..
வள்ளுவன் மக்களுக்கு சொன்ன நீதி திருக்குறள் என்ற பெயரில்..வள்ளுவ நீதி..
விதுரர் சொன்னதையும், வள்ளுவர் சொன்னதையும் தொகுத்து எளிய அழகுத் த்மிழில் நான் எழுதி வெளி வந்துள்ள நூல்
:விதுர நீதியும், வள்ளுவ நீதியும்"
திருவரசு பதிப்பகம் வெளியீடு
இப்புத்தகம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம்

நாச்சியார் திருமொழி= 2


பாடல் - 2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு - வெள்ளைநிறக் கோலப்பொடியைக் கொண்டு
வெள்வரைப்பதன் முன்னம்- வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்னர்
துறை படிந்து - குளத்தின் படித்துறைக்குச் சென்று.
முள்ளுமில்லாச் சுள்ளி எரி மடுத்து-முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை- முயன்று உன்னை
நோற்கின்றேன் காமதேவா-நோன்பு இருக்கின்றேன் காமதேவா
கள் அவிழ்- தேன் வடியும்
பூங்கணை- பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி-கடலின் நிறம் கொண்ட நீலவண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்- பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு வடிவம் எடுத்து வந்த போது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் பகவென்னை- இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே- எய்து விடேன்


தெருவில் அழகான வெள்ளை நிறக் கோலப்பொடிக் கொண்டு கோலமிட்டு ,வெளிச்சம் வரும் முன் குளத்தின் படித்துறைக்குச் சென்று குளித்து, முட்களற்ற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தீ மூட்டி காமதேவா! உன்னை நோற்கின்றேன் (நோன்பு இருக்கின்றேன்).தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு தொடுத்து அதில் கடல் நிறம் கொண்ட நீலவண்ணனின்   பெயர் எழுதி.புள்ளெனவந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை இலக்காகக் கொண்டு அடையுமாறு அதில் என்னையும் வைத்து எய்துவிடேன்

Monday, February 19, 2018

நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ  வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வெங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

பொருள்
================
பாடல் - 1


தையொரு திங்களும்  - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத்  தூய்மைப்படுத்தி
தரை மண் தலம் இட்டு- குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில்
                                                   இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல்                                                                         கொண்டு (கோலம்)
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து- தெருவில் இட்டு
                                                                           அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா  - காம தேவனே
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி- உன்னைத்                                                                                                           தொழுவதால்
உய்யலாமோ என்று எண்ணி- இந்தத் துன்பத்திலிருந்து
                                                               தப்பிக்கலாமோ என எண்ணி

உன்னையும் உம்பியையும்- உன்னையும் உன் தம்பியான
                                                             சாமனையும்
தொழுதேன்   - தொழுதேன்
வைய்யதோர் தழலுமிழ்- வெப்பமுடைய நெருப்பை உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு  - சக்கரத்தைக் கையில்
                                                        கொண்ட வேங்கடவனுக்கு என்னை  - என்னை
விதிக்கற்றியே- விதித்து விடேன் (அவனுக்கே உரியவள்
                                                                            என்றாக்கி விடேன்)

தை மாதம் முழுவதும் தரையைத் தூய்மைப் படுத்தி. குளிர்ந்த நீர்த் தெளித்த மண்தரையில் மாசி முதல் நாள்..தெருவில் அழகிய கோலமிட்டு அலங்கரித்து , காமதேவனே! உன்னைத் தொழுவதால் , இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என எண்ணி, உன்னையும், உன் தம்பியுமான சாமனையும் தொழுதேன்.
வெப்பமுடைய நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கு என்னை உரியவள் ஆக்கிவிடு.

Saturday, February 3, 2018

அடங்காத கை

சொன்னால்
கேட்பதில்லை
என் கை
எப்போதும்
ஏதேனும்
எழுது
எழுது
என
தொல்லை
கொடுத்துக்
கொண்டிருக்கிறது
எழுதுகோலோ
ஓய்வு
கேட்கிறது

Wednesday, January 10, 2018

காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

Saturday, December 23, 2017

திருச்சிற்றம்பலம்

யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ
காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா
ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா
தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா
மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே
வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே
யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா
ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ
காணீகாலே மேலேகா

வேரியுமேணவ
காழியொயே
யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே
யேயொழிகாவண
மேயுரிவே

நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி
ளாயுழிகா
காழியுளானின
யேனினயே தாழிசயா
தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்

Tuesday, May 30, 2017

நீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)


--------------------------------------
"முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை
தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார்
"நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன்
எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார்
அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை
தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கமலத்தை மனைவியாக்கினார்.
லட்சுமி, ஈன்ற கன்றுகளாலும் பயன் அடைந்தார்
.
கிட்டத்தட்ட அந்த வீடே அந்த லட்சுமியால் லட்சுமிகடாட்சத்துடன் இருந்தது
இந்நிலையில்..
எழுமலைக்கும் வயது ஆகிவிட்டபடியால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
லட்சுமிக்கும் வயதாகியதால் பால் முற்றும் வற்றிவிட்டது.அக்குடும்பத்திற்கு அதனால் இப்போது பயனில்லை
வறுமை வாட்ட...முனுசாமியும், செங்கமலமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினர்
முனுசாமியும், தன் தந்தையை கவனிக்க ஆளில்லாததால் முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணினான்.லட்சுமியையு ம் அடிமாடாக விற்க த்யாரானான்
பொன்னுசாமி சொன்னவற்றைக் கேட்ட ஏழுமலை. வாசலில் கட்டியிருந்த லட்சுமியைப் பார்த்தார்
தன்னை வாங்கத்தான் பொன்னுசாமி வந்திருக்கிறான் என லட்சுமிக்கும் தெரிந்தது.இதுநாள் வரை தன்னால் முடிந்ததைக் கொடுத்துவிட்டோம்.இனி, தன் இறைச்சியை உண்டு மக்கள் பசியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சற்று மகிழ்ந்தாலும்..அதன் கண்களில் கண்ணீர்
அதைப் பார்த்த ஏழுமலைக்கு, "இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்கு உழைத்த என்னை..இப்படி அனுப்புகிறாயே!" என்று லட்சுமி சொல்வது போலத் தோன்றியது
முனுசாமிவந்துவிட்டான்
பொன்னுசாமியைப் பார்த்து, "வாங்க..நீங்க இப்பவே மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகலாம்" என்றான்.
பின் , அவரிடமிருந்து பணத்தை வாங்கி்எண்ணினான்
அப்பாவைப் பார்த்து, "அப்பா..உன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்..நாளைக்குப் போகலாம்" என்றான்
இப்போது லட்சுமியை, ஏழுமலைப் பார்த்தார்..
அது, இப்போதுஅவரது நிலையை எண்ணி கண்ணீர் விடுவதைப் போல இருந்தது

Monday, May 22, 2017

கிறுக்கல் கவிதைகள்

1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்

2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின் 
பார்வையோ 
என் கை மஞ்சள் பையில்

3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி

4)அவசர அவசரமாக 
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை

5)விடியலின் 
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்

6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்

Wednesday, May 17, 2017

இன்னா நாற்பது - பாடல்கள் 1,2,3

பாடல்: 01 (பந்தம்...)
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.


சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பாடல்: 02 (பார்ப்பார்...)
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

பாடல்: 03 (கொடுங்கோல்)
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

தமிழ் இலக்கியம் - இன்னா நாற்பது



உள்ளே புகுமுன்...

தமிழில், தமிழையும், புலவர்களின் பாடல்களையும் சுவைக்க பல நூல்கள் உள்ளன.அவற்றில், என்னால் முடிந்தவற்றை அனைவரும் ரசிக்கும் வகையில், ருசிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இத்தொடர்

இதில் நான் பதியும் பாடல்களை படியுங்கள், ரசியுங்கள்...

முதலில்  "இன்னா நாற்பது:

நாற்பது என்னும் எண் தொகையில் குறிக்கப் பெறும் நூல்கள் நான்கு.. அவை...

கார் நாற்பது,களவழி நாற்பது,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை.இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும், இன்பம் தரும் செயல்களையும் உரைக்கின்றன.

இன்னா நாற்பதில், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, அவை இன்னா எனக் கூறுதலால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

இந்நூல் ஆசிரியர் கபில தேவர்

கடவுள் வாழ்த்தில், சிவபெருமான், பலராமன்,திருமால், முருகன் என அனைத்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளது சிறப்பு..

இனி கடவுள் வாழ்த்து...

கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.



முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

இனி அடுத்த பாடல்கள் அடுத்த பதிவில்.

Thursday, January 26, 2017

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி - 1



தமிழ்த் திரையுலகில் பல் வேறு காலகட்டங்களில் பல்வேறு கதாநாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம் கே ராதா, ரஞ்சன் போன்றவர்களுக்குப் பின் திரையுலகின் பொற்காலமான 50- 60-70 களில் மூவேந்தர்களாக எம் ஜி ராமச்சந்திரன், சிவாஜி கனேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் இருந்தனர்

இவர்கள் மூவரும் நூற்றுக் கணக்கான் படங்களில் நடித்தனர்..வெற்றிக் கொடி நாட்டியவர்கள் இவர்கள்

இவர்களுடன், எஸ் எஸ் ராஜேந்திரன்,முத்துராமன் போன்றோரும் அடுத்தக் கட்டத்தில் இருந்தனர். த்னியாக கதாநாயகர்களாகவும்..மற்றவர்களுடன் சேர்ந்து துணைப்பாத்திரங்களிலும் நடித்து வந்தனர்

அடுத்த காலகட்டம்..

ஜெயஷங்கர், ரவிசந்திரன் சிவகுமார் போன்றவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று நடித்தனர்.ஸ்மால் பட்ஜெட் படங்கள் என இவர்களின் படங்கள்    குறிப்பிடப்பட்டன.  .தயாரிப்பாளர்களுக்கும் ஓரளவு லாபத்தை ஈட்டிக் கொடுத்தனர்.குறிப்பாக ஜெயஷங்கர், வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.அந்தளவு படங்கள் வெளிவந்தன

இடைபட்ட காலத்தில் வந்து பெரும் நட்சந்திர அந்தஸ்தைப் பெற்றவர்கள் சூபர் ஸ்டாரும், உலக நாயகனும்..இவர்களும் ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஓரு படங்கள் என நிறுத்திக் கொண்டனர்

தொடர்ந்து, வி்ஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் திரையுலகை ஆண்டு வந்தார்கள்..வருகிறார்கள்..இவர்கள் நடிப்பும்..ஆண்டுக்கு ஓருரு படங்கள் என்றாயிற்று
தவிர்த்து, இவர்களின் படங்கள் வணிக ரீதியான படங்களாகவும்., கிட்டத்தட்ட ஒரே கதையமைப்புக் கொண்ட படங்களாகவும் இருக்கின்றன

இந்நிலையில், வந்தவர்களில் விஜய் சேதுபதி குறிப்பித்தக்கவர்.இவர் படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்டவையாக அமைந்தவை.மக்க்ள் அதற்காகவே அவரை விரும்ப ஆரம்பித்தனர்.இவர் நடித்தப் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு  லாபத்தையும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.ஏதேனும் தோல்விபடங்கள் என குறிப்பிடப்பட்டாலும், வசூலில் தோல்வி என்று கூற முடியாதவையாக அமைந்த்ன.

நீண்ட காலத்திற்குப் பிறகு..ஒரு கதாநாயகன்  ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த சாதனையை இவர் புரிந்துள்ளார்.

அடுத்த பதிவிலிருந்து..இவர் நடித்த மாறுபட்டப் படங்கள் குறித்து பார்ப்போம்

Friday, January 20, 2017

சிவாஜி ஒரு சகாப்தம் - 33

           
(சிவாஜி நடித்த வேற்று மொழிப்படங்கள்)
(நவீன் கன்னாவிற்கான பதிவு)

தெலுங்கு படங்கள்
------------------------------
 பர்தேசி -
வெளியான நாள் - 14-1-1953

அஞ்சலி தேவிஆதிநாராயணராவ் ஆகியோர் அக்ண்சலி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் (தமிழில் பூங்கோதை), எல் வி பிரசாத் இயக்கம்.
நாகேஷ்வரராவ், அஞ்சலியுடன் சிவாஜி

பெம்புடு கொடுகு

------------------------------------

வெளி யான நாள் _ 13-11-1953

நடிப்பு - சிவாஜி, புஷ்பவல்லி,சாவித்திரி

இயக்கம் எல் வி பிரசாத்

மங்கம்மா என்ற பெண் மோகன் என்பவனை தத்தெடுத்து வளர்க்கிறாள்.அவளுக்கு ஏற்கனவே முத்து என்ற மகனுண்டு. வீட்டு வேலைகள் செய்து குழ்ந்தைகளைக் காப்பாற்றுகிறாள்.ஒரு சமயம் ஒரு கொலையை அவள் பார்க்க நேரிடுகிறது.பின், அவளே அக்கொலைக்காக கைது செய்யப் படுகிறாள்.விடுதலை ஆகி அவள் வரும் போது..அவளது இரு மகன் களுமே ஒருவருக்கு ஒருவர் பரம எதிரியாய் உள்ளனர்.அவர்கள் திரும்ப ஒன்று சேர்ந்தனரா? என்பதே கதை

பராசக்தி -
---------------- 11-1-1957ல் பராசக்தி திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

மனோகரா
________________ 3-6-1954ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

பொம்மல பெல்லி
-----------------------------

வெளியான நாள் - 11-1-1958

தமிழில் பொம்மைக் கல்யாணம் என்ற பெயரில் வந்த படம்

நீரு கப்பின நிப்பு --
-----------------------------

வெளியான நாள்- 24-6-1982

இப்படத்தில் சில காட்சிகளே வந்தாலும் சிவாஜி அருமையாய் நடித்திருப்பார்.ஜக்கையா சிவாஜிக்கு குரல் கொடுத்தார்

பெஜவாட பெபுலி
----------------------------
வெளியான நாள் -14-1-1983

இயக்கம் விஜய நிர்மலா.வி சக்கரவர்த்தி இசை

சிவாஜியுடன், கிருஷ்ணா, ராதிகா, சௌகார் ஜானகி நடித்தனர்

விஸ்வநாத நாயகுடு
--------------------------------

வெளியானது மே 1987

தாசரி நாராயண ராவ் இயக்கம்
சரித்திரப் படம்.கிருஷ்ண தேவராயர் காலம்
சிவாஜி, கிருஷ்ணம் ராஜு, கே ஆர் விஜயா, ஜெயபிரதா நடித்தனர்

அக்னி புத்ருடு
--------------------

வெளியான நாள் - 14-8-1987

அன்ன்பூர்ணா ஸ்டூடியோஸ் சார்பில் கே நாகேந்திர ராவ் இயக்கத்தில், நாகேஷ்வர ராவுடன் சிவாஜி, சிவாஜி, சாரதா நடித்தனர்

பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்
-------------------------------------------------------
தமிழ் வெளியான நாள் - 29-7-1960
தெலுங்கு - 1-7-1960

மக்கள் ராஜ்ய என்று கன்னடத்திலும்,குழ்ந்தைகள் கண்ட குடியரசு என தமிழிலும் வந்தது.

தாதா மிராசி கதை..பி ஆர் பந்துலு தயாரிப்பு, இயக்கம்

ராமதாசு
--------------------
வெளியான நாள் 1-2-1964

தயாரிப்பு, இயக்கம் நாகையா

சிவாஜியுடன் நாகையா ராமதாசராய் நடித்தார்

பங்காரு பாபு
--------------------

வெளியான நாள் - 15-3-1973

ஜகபதி ஆர்ட்ஸ் சார்பில் வி பி ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வந்த படம்

கே வி மகாதேவன் இசை.
நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்த இப்படத்தில் கிருஷ்ணா, சோபன் பாபு, ராஜேஷ் கன்னா ஆகியோருடன் சிவாஜியும் ஒரு கௌரவ வேடத்தில் வந்திருப்பார்

பக்த துக்காராம்
---------------------------------
வெளியான நாள் - 5-3-1973

அஞ்சலி பிகசர்ஸ் தயாரிப்பு.இயக்கம் வி மதசூதன ராவ்

நாகேஷ்வர ராவ். அஞ்சலி ஆகியொறுடன் சிவாஜி.இப்படத்தில் சிவாஜி சத்ரபதி சிவாஜியாகவே வருவார்

ஜீவன தீரளூ
-------------------

வெளியான நாள் -12-8-1977

ஜி சி சேகர் இயக்கம்.கிருஷ்ணம் ராஜு, வாணீஸ்ரீ நடிப்பு

கே சக்கரவர்த்தி இயக்கம்

இப்படத்தில் நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்தார்

சாணக்ய சந்திரகுப்தா
--------------------------------------    ,

வெளியான நாள் - 25-8-1977

இயக்கம், தயாரிப்பு என் டி ராமாராவ்

என் டி ராமாராவ், நாகேஷ்வரராவ் ஆகியோருடன் சிவாஜி நடித்திருப்பார்.

இப்படத்தில் வீரன் அலெக்சாண்டராய் சிவாஜி நடிப்பு

மலையாளப்படங்கள் -
-------------------------------------

தச்சோளி அம்பு
------------------------- வெளியான நாள் -27-10-1978

பிரேம் நசீருடன் சிவாஜி
நவோதயா அப்பச்சன் தயாரிப்பு, இயக்கம்

கே ராகவன் இசை

மலையாளத்தில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம்

ஒரு யாத்ரா மொழி
-------------------------------
வெளியான நாள் -13-9-1997

பிரியதர்சன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இளையராஜா இசை

மோகன்லாலுடன் நடிகர்திலகம் நடித்த படம்

ஸ்கூல் மாஸ்டெர்-
----------------------------

மலையாளப் படம் வந்த நாள் -3-4-1964
பிரேம் நசீர், சிவாஜி நடிப்பு
1958 கன்னடம் வந்தது
அதுவே எங்கள் குடும்பம் பெரிசு என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது
(பதி பந்தலு என 1959ல் தெலுங்கில் வந்தது

பின் ஹிந்தியில் ஏ எல் ஸ்ரீனைவாசன் தயாரிப்பில் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வந்தது

இதே படம் மீண்டும் 1972ல்  ராமாராவ் நடிக தெலுங்கில் வந்தது.பின் 1973ல் ஜெமினி சௌகார் நடிக்க தமிழில் ஸ்கூல் மாஸ்டர் என வந்தது)

 ஹிந்தி-
---------------- வெளியான நாள் 6-2-1970

ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்தமண் திரைப்படம் தர்த்தி என ஹிந்தியில் வெளிவந்தது.தமிழில் முத்துராமன் ஏற்ற பாத்திரத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்