Friday, February 6, 2015

குறுந்தொகை-189



தலைவன் கூற்று
(வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால்மீண்டு வருவேமாக” என்று கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் மதுரை ஈழத்துப் பூதன்றேவன்

இனி பாடல்-

இன்றே சென்று வருவது நாளைக்
   
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக
   
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
   
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்

காலியற் செலவின் மாலை யெய்திச்
   
சின்னிரை வால்வளைக் குறுமகள்
   
பன்மா ணாக மணந்துவக் குவமே.




                              -மதுரை ஈழத்துப் பூதன்றேவன்.

    .

 பாக,  இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை மீண்டு வருவேமாக.  குன்றினின்று வீழும் அருவியைப் போல, யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல,  இளம்பிறையைப் போன்ற, விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசிய பயிர்களைத் துணிப்ப,  காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால், மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து,சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது,  பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை, மணந்து உவப்போம்.

.

    (கருத்து) இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால் நாளை மாலையில் வந்து எய்துவோமாக.

    (வி-ரை.) வேந்தனால் செய்ய வேண்டுமென்று சுமத்தப்பட்ட காலத்தில்.செயலை செய்து முடித்து நாளை வந்து தலைவியிடம் வருவோமாக

No comments: