தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான் துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)
முல்லை திணை -பாடலாசிரியர் பூதம்புல்லன்
இனி பாடல்
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய
உரவுரு முரறு மரையிரு ணடுநாள்
நல்லே றியங்குதோ றியம்பும்
பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே.
-பூதம்புல்லன்
தோழி, நெறிப்பை உடைய கரிய கூந்தலோடு, பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின், பசிய தலைகள்துணியும்படி, வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, பாதியிரவின் கண், பல பசுக்கள் உள்ள தொழுவத்தில், நல்ல ஆனேறுசெல்லுந் தோறும் ஒலிக்கின்ற, ஒற்றைமணியின் குரலை, அறிவாரோ?
(கருத்து) இங்கே நான் படும் துன்பத்தைத் தலைவர் அறியார்போலும்!
(பல பசுக்கள் கட்டிய தொழுவத்திற்கேட்கும் ஒரு மணிக்குரல், அவை அந்நல் லேற்றோடு இன்புற்றிருக்கும்நிலையை நினைவுறுத்தி, “இவை பெற்றபேறு யாம் பெற்றிலேமே!”என இரங்குதற்குக் காரணமாயிற்று. அக்குரலை நள்ளிரவில் தான்கேட்பதாகக் குறிப்பித்தாள்; இதனால் அவள் நள்ளிரவிலும் துஞ்சாமை தெரிகிறது.)
No comments:
Post a Comment