Wednesday, February 18, 2015

குறுந்தொகை-193





தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)

முல்லை திணை - பாடலாசிரியர் அரிசில் கிழார்
 இனி பாடல்-
 
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
   
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
   
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
   
தொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின்

மணந்தனன் மன்னெடுந் தோளே
   
இன்று முல்லை முகைநா றும்மே.


                           -அரிசில் கிழார்

 தோழி,  கள்ளை ஊற்றி வைத்த, நீலக்குப்பிகளைப் போன்ற,  சிறிய வாயையுடைய சுனையி ன்கண்உள்ளனவாகிய,  பிளந்த வாயையுடைய தேரைகள், கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண், என் நீண்ட தோள்களை, தழுவினான்; அதனால், இக்காலத்தும்,  அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.



    (கருத்து) தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.


 

   ( கள் வைத்த கலம் சுனைக்கு உவமை.) இட்டுவாய்- இட்டிய வாய்; சிறிய வாய் (மதுரைக். 48.)

    தட்டைப் பறையென்றது தட்டையையே; தட்டை மகளிர் தினைப்புனத்திற் கிளி முதலியவற்றைக் கடிவதற்குரிய கருவிகளுள் ஒன்று;மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை யுண்டாக ஒன்றிலே தட்டப்படுவது

No comments: