Tuesday, February 24, 2015

குறுந்தொகை-195



தலைவி கூற்று
(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் தேரதரன்

இனி பாடல்-
 
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்
   
படர்சுமந் தெழுதரு பையுண் மாலை
   
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
   
இன்னா திரங்கு மென்னா ரன்னோ

தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச்
   
செய்வுறு பாவை யன்னவென்
   
மெய்பிறி தாகுத லறியா தோரே.


                          -தேரதரன்


 தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால் அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற,  எனது மேனி, வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர்,  தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய்,  கதிரவன் வெம்மை நீங்கி, அத்தகிரியை அடைய, நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு,  வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், எங்கே இருக்கின்றனரோ? அந்தோ! இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, தலைவி வருந்துவாள்,  என்று நினையாராயினர்.

 

    (கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும் மீண்டாரல்லர்.

2 comments:

Thenammai Lakshmanan said...

குறுந்தொகைப் பாடல்கள் அருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thenammai lakshmanan