Thursday, March 5, 2015

குறுந்தொகை-196



தோழி கூற்று
(ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது

மருதம் திணை - பாடலாசிரியர் மிளைக்கந்தன்

இனி பாடல்-


வேம்பின் பைங்காயென் றோழி தரினே
 
தேம்பூங் கட்டி யென்றனி ரினியே
 
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
 
தைஇத் திங்கட் டண்ணிய தரினும்

வெய்ய வுவர்க்கு மென்றனிர்
 
ஐய வற்றா லன்பின் பாலே.


                           -மிளைக்கந்தன்.

 

 என் தோழியாகியதலைவி, வேம்பினது பசிய காயை, முன்பு தந்தால்,  இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி,  என்று பாராட்டிக் கூறினீர்;இனி - இப்பொழுது, பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள,  தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய,  குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும், வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்;  நுமது அன்பின் பகுதி, அத்தகையது.



    (கருத்து) முன்பு நீர் தலைவியிடம் அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லாதவராயினர்.

No comments: