Sunday, March 22, 2015

குறுந்தொகை- 202



தலைவி கூற்று
(விலைமகளிடமிருந்து பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும் ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை-பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
   
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
   
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
   
கினிய செய்தநங் காதலர்

இன்னா செய்த னோமென் னெஞ்சே.

                           -அள்ளூர் நன்முல்லை.

 
தோழி, என் நெஞ்சுவருந்தும்;  முல்லைநிலத்தின் கண், நெருங்கி முளைத்த, சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது, முன்னர்த் தோன்றிக் கண்ணுக்குஇனிய புதியமலர், பின்னர் இன்னாமையைத்தரும் முள்ளைத் தந்தாற்போல, முன்பு நமக்கு இனியவற்றைச் செய்தொழுகிய நம் தலைவர்,  இப்பொழுது இன்னாதனவற்றைச் செய்தொழுகு தலால், என் நெஞ்சு நோம்--.



    (கருத்து) தலைவர் இன்னாராகி ஒழுகுதலால் என் நெஞ்சம் வருந்தும்.

   ( நோமென்னெஞ்சே நோமென்னெஞ்சே யென்ற அடுக்குஇடைவிடாது நோதலைக் குறித்தது;

    “தலைவர் நின்மாட்டு இனிய பல செய்தவரன்றே; அவரை நீஏற்றுக்கோடல் வேண்டும்” என்ற தோழியை மறுப்பவளாதலின், “அவர் இனியராயிருந்தது முன்பு; இப்பொழுது இன்னாராயினர்” என்றாள்.)

No comments: