தோழி கூற்று
(“இனி நாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ அங்கு வருக. இங்கு எம்முடைய தாய் வருவாளாதலின் வரவேண்டாம்” என்று தோழிதலைவனுக்குக் கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்ன பால்வார்பு
கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோட் பைங்குரற்
படுகிளி கடிகஞ் சேறு மடுபோர்
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்
தார நாறு மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே.
-கபிலர்.
யாமரத்தை வெட்டிய,மரங்களைச் சுட்ட வழியில், கரும்பைப் போன்ற அடியை யுடையனவாகிய, பசிய காம்பையுடைய சிவந்த தினையினது, மடமை மிக்க பிடியினதுவளைந்த கையைப் போன்றனவாகி, பால்நிரம்பி, கரியை எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த, செறிந்த குலையையுடைய பசிய கதிர்களில், தின்னும் பொருட்டுவீழ்கின்ற கிளிகளை, ஓட்டுவேமாகிச் செல்வேம்; இவ்விடத்தில் தாய் வருவாள்;பகைவரைக் கொல்லும் போர்க்குரிய, வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய, மலையனது முள்ளூர்க்கானத்தில் வளர்ந்த, சந்தனம் மணக்கின்ற மார்பினையுடையை யாகி, வருதலையொழிக; இஃது எங்கள் விருப்பம்.
(கருத்து) இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடுஅளவளாவுவாயாக.
No comments:
Post a Comment