தலைவி கூற்று
(தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும் மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.)
குறிஞ்சி திணை- பாடலாசிரியர் யார் எனத் தெரியவில்லை
இனி பாடல்-
அமிழ்த முண்கநம் மயலி லாட்டி
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்
கழைநிவந் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றோளே.
அயன்மனைக்கிழத்தி, பாலைக் கலந்தாற்போன்றஇனிமையையுடைய, தேமாம்பழத்தைத் தின்று, கரிய மெல்லியசிறகுகளையும், கூரிய நகங்களையும்உடைய வௌவால், நெல்லியினதுபுளித்த காயை உண்டு, அயலிலுள்ளதாகிய, முள்ளில்லாதஅழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற, மூங்கிற் கோல்கள் உயர்ந்துவளர்ந்த சோலைகளையுடைய, -மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை, வரைவுக்குரியவற்றோடு வருவானென்றுகூறினாள்; ஆதலின், அவள் அமிழ்தத்தைஉண்பாளாக!
(கருத்து) தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்கு உறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!
தேமாம்பழத்தை உண்ட வௌவால் பின்பு மாறுபட்ட சுவையையுடைய நெல்லிக்காயை உண்டு சிறிதும் ஊறு உண்டாக்காத முள்ளில்மூங்கிலிற் றூங்கியதுபோல, களவுப் புணர்ச்சியின்கண் இன்பந் துய்த்ததலைவன் அவ்வின்பத்துக்கு மாறாகிய இடையீடுகளையும் ஏற்றுப் பின்வரைந்து கொண்டு சிறிதும் ஏதமின்றி இன்பம் துய்க்கும் நிலையினனாயினன் என்பது குறிப்பு.
No comments:
Post a Comment