Saturday, March 24, 2018

உங்கள் குணம் மாற வேண்டுமா?

மனோபாவம்....
இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Friday, March 23, 2018

திருக்குறள் - இன்பத்துப்பால்

109 தகையணங்குறுத்தல்

காதலனுக்கு தன் காதலி பற்றி எண்ணிக் கொண்டிருப்பதற்கும்,அவளை அழகை வியப்பதற்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.வள்ளுவனின் இக்குறளைப் பார்த்தால்....

குறள்.- 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

உரை-

கனத்த காதணியை அணிந்துள்ள இவள் தேவ மகளோ! அல்லது அரியதோர் மயிலோ! மானிடப் பெண்தானோ இவள்.என் நெஞ்சு (இவளிடம்) மயங்கித் தவிக்கிறதே!

Thursday, March 22, 2018


கொஞ்சி விளையாடும் தமிழ்
-------------------------------------------------
நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...
வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.
மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்
முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)
இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...
என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.
மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.
இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.
பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு பக கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.
அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..
யானைத் தந்தம் போல
பிறை நிலா
வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா
அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா
இப்படி சொன்னதுடன் நிற்காவில்லை புத்துக்கவிதைகள்
ஒரு கவிஞர் சொல்கிறார்..
பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..
பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
-என்கிறார்..
யார் நிலை என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..
அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்

Thursday, March 15, 2018

ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை...

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்... 

Sunday, March 11, 2018

சவரக்கத்தி

லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் (வேறுயாருதாக இருக்கும்.மிஷ்கினின் பட நிறுவனம்தான்) சார்பில், மிஷ்கின் கதை, தயாரிப்பில் வந்துள்ள படம் "சவரக்கத்தி"
இப்போதுதான் பார்த்தேன்.ஒரு பொழுது போக்குக்கான படம் என்பதால் உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்

ராம் தான் படத்தின் கதாநாயகன்.வாயைத் திறந்தால் பொய்.தொழில் ,முடிதிருத்துபவர்

அவர் மனைவியாக, காது கேட்காமல் நிறைமாத கர்ப்பிணியாக பூரணா

மங்கா எனும் ரௌடி பாத்திரத்தில் மிஷ்கின்

பரோலில் வந்து இருக்கும் அவருக்கு அன்று மாலை 6 மணி யுடன் பரோல் முடிகிறது.

அத்ற்குள், தெருவில் காரில் செல்கையில், ராமுடன் ஒரு தகராறு.ராம் அடித்துவிட வாயில் ரத்தம் ஒழுக, மங்காவின் கூட இருக்கும் அல்லக்கைகள் ஏற்றிவிட, ராமை துரத்தி கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் மிஷ்கின்

டஹ்ப்பித் தப்பிப் பிழைக்கும் ராம்.அவருக்கு இவ்வளவு நடிப்பு...அதுவும் நகைச்சுவையாக நடிக்க வருமா? ஆச்சரியப்பட வைக்கிறார்.

பூரணா..அந்தப் பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம்.இவர் திறமையை தமிழ்த் திரை நங்கு பயன் படுத்திக் கொள்ளலாமே!

மிஷ்கின், கேட்கவே வேண்டாம்..சொந்தப்படம் வேறு.கண்களை உருட்டி, மிரட்டி அசத்துகிறார்.

ராமை கொலை செய்ய எடுத்த கத்தி,ஒரு உயிர் பிறக்கவும் பயனாகிறது.

மிஷ்கினின் உடன் வருபவர்களும் கச்சிதம்.

பல இடங்களில் நம்மையும் மீறி வாய் விட்டு சிரிக்கிறோம்

இயக்குநர் ஆதித்யாவிற்கு முதல் படமாம்.பிரபலம் அதிகம் இல்லாத, அதெ சமயம் பாத்திரத்திற்குத் தகுதியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததால் வெற்றி பெற்றுள்ளார்.

குறைகளே இல்லையா? என்ற கேள்விக்கு..நிறைய சொல்லலாம்.ஆனாலும், அனைத்தையும் மறக்க வைத்துவிடுகின்றனர் நடிகர்கள்

இயக்குநரிடமிருந்து இனி இன்னமும் நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது

கொஞ்சி விளையாடும் தமிழ்

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்



அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

Friday, March 9, 2018

6 அத்தியாயம்

ஆறு குறும்படங்கள்...தொகுத்து மொத்தமாய் ஒரு திரைப்படம்
1) சூப்பர் ஹீரோ (இயக்கம் கேபிள் சங்கர்)
2) இனி தொடரும் (ஷங்கர் வி தியாகராஜன்)
3) மிசை- (அஜயன் பாலா)
4)அனாமிகா (ரவி சுரேஷ்)
5) சூப் பாய் சுப்ரமணி (லோகேஷ்)
6) சித்திரம் கொல்லுதடி (ஸ்ரீதர் வெங்கடேசன்)

அமானுஷ்ய சக்தியை மையப்படுத்தி எடுத்தப் படங்கள்.
கிளைமாக்ஸ் ஒவ்வொன்றிற்கும் கடைசியில் சொல்லப்படுகிறது
புதிய முயற்சி.நல்ல முயற்சி.
ஆனாலும், ஏதோ குறைவது போல ஒரு உணர்ச்சி.
குறும்படத்தின் முடிவுகள், எதிர்பார்த்த முடிவுகளாகவே இருப்பதால், கிளைமாக்சில் உற்சாகம் குறைகிறது.
சித்திரம் கொல்லுதடி, வேண்டுமானால் சிறிது மாற்றத்தைத் தருகிறது.
கேபிள் ஷ்ங்கரிடம் இன்னமும் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.சாத்னைகள் புரிவதில் வல்லவர்.
இனி தொடரும்...திகிலுக்கு பதில், சிரிப்புதான் வருகிறது
மிசை...எங்கோ படித்த கதை உணர்வைத் தருகிறது
அனாமிகா..பயந்து ஒடும் காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளனர்
சூப் பாய்...சற்றே புன்னகைக்க வைக்கிறது
சித்திரம் கொல்லுதடி...இயக்குநர், கடஹசிரியர் உழைப்புத் தெரிகிறது.ஆனால், பாடல் வரிகளில் மனம் செல்லாததால், முழுமையாக ரசிக்க முடியவில்லை
புதிய முயற்சி என்று சொன்னாலும், முடிவுகள் புதுமையாக இல்லாதது போலத்தான் தெரிகிறது


Thursday, March 8, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

கரிக்காய் பொரித்தாள்கன்னிக்காயைத் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப்பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்டலாக்கினா ளத்தைமகள்
உப்புக்காண் சீசீ யுமி. (51)

கரிக்காய் பொரித்தாள் | காயைப் பொறித்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | காயைத் தீயிலிட்டு வாட்டினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | காயைப் பச்சடி பண்ணினாள்
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள் | காயை நெய்யிலிட்டுத் துவட்டினாள்
அத்தைமகள் | அவள் யாருமன்று, என் அத்தைமகள்
உப்புக்காண் சீ சீ யுமி | அத்தனையிலும் உப்பு. சீ சீ உமிழ்ந்துவிடு.

அகப்பொருள்
உடலுறவுப் பொருள்

கரிக்காய் பொரித்தாள் | கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்| உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
அத்தைமகள் | அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
உப்புக்காண் சீ சீ யுமி  | இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. அவளும் நானும் தழுவி எங்கள் உடம்பில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்றில் ஒன்று உமிழ்ந்துகொள்வதற்காக. 

Wednesday, March 7, 2018

தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2

1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள்
1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.
1950ல் பிறந்தார் மகேந்திரன்
அந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்த மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்

திருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், "நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, "இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை"என்றும் கூறினார்.

ஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்

1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு

ஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத  குணம் இருந்தது.அதையே, தன்  குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.
யாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே,  வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.

அவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ? என எண்ணிவிடுவர்

யூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்

ஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது

300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

இனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம் 

Tuesday, March 6, 2018

தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1

1 - தமிழ் நாடக மேடையும் யூஏஏவும்

-------------------------------------------------------------

                           (சங்கரதாஸ் சுவாமிகள்)
சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் வேறு, வேறு நிலையில் வளர்ச்சியினைக் கண்டு வந்தன.
பல மன்னர்கள் ஆதரவில் நடிப்புக் கலை வளர்ந்தது.கலைஞர்கள் வளர்ந்தனர்.நாடமேடைக்கான அளவுகள், நடிகர்கள் நடிக்கும் போது மேடையில் இருக்க வேண்டிய நிலை.பேசப்படும் வசனங்கள், பேச வேண்டிய முறை என ஒவ்வொன்றான வரையறுக்கப் பட்டன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, பல நாடகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.கிட்டத்தட்ட அனைத்துமே குருகுல வாசம் எனலாம்.அனைவருமே தொழில் முறை நடிகர்கள் ஆவார்கள்
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், கன்னையா, பாலாமணி, கந்தசாமி முதலியார்,நவாப் ராஜமாணிக்கம்,டி.கே.ஷண்முகம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவ்ர்கள் ஆவர்

இந்த நாடகக் குழுக்கள் தவிர்த்து, மேலும் என்.எஸ் கே., கே ஆர் ராமசாமி , சஹஸ்ரநாமம் போன்றவரும் நாடகங்கள் நடத்தினர்.
சுதந்திரத்திற்கு முன், தேசிய உணர்வை மக்கள் மத்தியில், நாடகங்கள் மூலம் இவர்கள் பரப்பினர்
ஆனால், சென்ற நூற்றாண்டின் இரண்டாம் பாதி,, அதாவது 1950க்குப் பின்னர் "தமிழ் நாடக மேடையின்"பொற்காலம் தோன்றியது எனலாம்
பல நாடகக் குழுக்கள் தோன்றின.பல சபாக்கள் தோன்றின.இந்த சபாக்கள், அங்கத்தினர்களைச் சேர்த்து.அவர்களிடம் இருந்து சந்தா வசூலித்து, அவர்களுக்கு மாதந்தோறும் நாடகங்கள் நடத்தி , இந்த நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்தனர்.
                                      ( கன்னையா)
திடீரென பல நாடகக் குழுக்கள் எப்படித் தோன்றின.அவ்வளவு தொழில் முறை நடிகர்களா? என்றால்..
இல்லை..பெரும்பாலானோர் அமெச்சூர்கள்.
அதிகாரிகளாகவும், வங்கி ஊழியர்களும்,தொழிலாளர்களும் என நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.
ஆனால்...அமெச்சூர் குழுக்கள் தோன்ற, முதன் முதல் வித்திட்டவர் யார்? என சற்று எண்ணிப்பார்த்தால்...

                   (நவாப் ராஜமானிக்கம்)
அந்த மாபெரும் நாடக ஆர்வலர் ஒய் ஜி பார்த்தசாரதி என சொல்லலாம்.
மத்திய அரசில், முக்கியமான துறை ஒன்றில் அதிகாரியாய் பணிபுரிந்த இவர், தில்லியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்தார்.
1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்று அழைக்கப் பட்ட பட்டு என்ற நண்பரை தன்னுடன் இணைத்துக் கொண்டு "யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்" என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.
                          (டி.கே.ஷண்முகம்)
இனி வரும் அத்தியாயங்களில், அக்குழுவின் வளர்ச்சியும், ஆலமரமாய் மாறிய அக்குழுவிலிருந்து விழுதுகளாய் நிலத்தில் வேரூன்றிய குழுக்கள் பற்றியும் பார்ப்போம்

Saturday, March 3, 2018

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

குருதிப்புலன்

மனப் புண்ணை
நினைவுகள் எனும்
காக்கைகள்
கொத்திக்
கொத்திக்
குருதியை
கொட்டவைத்தன

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


திருவள்ளுவ நாயனார் தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.
இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ
என்தூங்கும் என்கண் இரா.